இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் பகஸ் செய்யலாமா❓

வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன❓

இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா❓

இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்?

ஸபுர் என்றால் பொறுமை என்று பொருள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதற்காக ஒப்பாரி வைத்து அழுது புலம்பாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இதைத் தான் ஸபுர் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்கள்.

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அனுப்பி வைப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. அவ்வாறு இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது நன்மை என்றிருந்தால் அதை நிச்சயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியார் கதீஜா (ரலி) இறந்த போதோ அல்லது மகனார் இப்ராஹீம் (ரலி) இறந்த போதோ அவர்களுக்காக குர்ஆன் ஓதவில்லை.

எத்தனையோ நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இறந்துள்ளார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டதாகவோ அல்லது நபித்தோழர்கள் ஓத அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் கூட இல்லை.

நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கமெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் 3243

“(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : நஸயீ 1560

நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இன்றி நாமாக ஒரு அமலைச் செய்தால் அது நரகத்திற்குக் கொண்டு போய் நம்மைச் சேர்த்து விடும். எனவே இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

இறந்தவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது, பாவமன்னிப்புத் தேடுவது ஆகிய காரியங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 59:10)

இந்த வசனத்தில் நமக்கு முன் சென்று விட்டவர்களுக்காக பிரார்த்திப்பதைப் பற்றி அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இந்த அடிப்படையில் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை கத்தம் ஃபாத்திஹா என்ற பெயரில் குர்ஆன் ஓதாமல் அன்றாடம் ஐவேளை தொழுகைகளிலும் இறந்தவருக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தனை செய்யலாம்.

இவை தவிர இறந்தவர் மீது நோன்பு கடமை இருந்தால் அதை அவரது வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும்.

“களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவர் சார்பாக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 1952

இது போல் இறந்தவருக்கு ஹஜ் கடமையாக இருந்து அதை அவர் நிறைவேற்றாமல் இறந்திருந்தால் அந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தை ஹஜ் செய்யாமல் இறந்து விட்டார். அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்யலாமா? என்று ஒருவர் வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய தந்தையின் மீது கடன் இருந்தால் அதை நிறைவேற்றத் தானே செய்வாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். “அப்படியானால் அல்லாஹ்வுடைய கடன் (நிறைவேற்றப் படுவதற்கு) மிகத் தகுதியானதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : நஸயீ 2591

இறந்தவருக்குக் கடன் இருந்தாலோ அல்லது பொருளாதாரம் தொடர்பாக ஏதேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றுவது வாரிசுகளின் பொறுப்பாகும் என்பதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. இது போன்ற காரியங்களை இறந்தவருக்காக செய்ய வேண்டுமே தவிர குர்ஆன் ஓதி அனுப்புவது போன்ற மார்க்கத்தில் சொல்லப்படாத காரியங்களைச் செய்வதால் பித்அத் எனும் தீமையைச் செய்த குற்றம் தான் ஏற்படுமே தவிர நன்மை ஏற்படாது.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed