இய்யாக நஃபுது- உன்னையே வணங்குகிறோம்  02

பிரார்த்தனையும் ஒரு வணக்கமே!

துஆ எனும் பிரார்த்தனையும் வணக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாததால் இறைவனல்லாதவர்களிடம் பிரார்த்திக்கின்றனர் சிலர். உன்னையே வணங்குகிறோம் என்று இறைவனிடம் அளித்த உறுதிமொழிக்கு மாறாக நடக்கிறோம் என்று இவர்கள் உணரவில்லை.

பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி); நூல்: திர்மிதீ 2895

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: ஹாகிம் 1801

பிரார்த்தனை என்பது வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் எனத் தெளிவாக இந்த நபிமொழிகள் யாவும் அறிவிக்கின்றன. துஆ என்பது தலையாய வணக்கம் என நிரூபணமாகும் போது உன்னையே வணங்குகிறோம் என்பதில் துஆவும் அடங்கிவிடுமென்பதில் ஐயமில்லை.

யார் இறைவனல்லாத மற்றவர்களைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாகவே இறைவனால் கருதப்படுவர். ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணருவதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் துஆவில் கூடுதலாகவே உள்ளது எனலாம்.

என் இறைவனுக்குத் தான் யாவும் தெரியுமே என்று எவரேனும் கருதி இறைவனிடம் பிரார்த்திக்கத் தவறினால் இவன் இறைவனின் வல்லமையை உணர்ந்தவனாகக் கருதப்பட மாட்டான். மாறாக, தன் அடிமைத்தனத்தை ஏற்க மறுக்கும் அகம்பாவம் கொண்டவனாகவே கருதப்படுவான்.

யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் வெறுப்படைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதீ 3295

இறைவனின் அருட்கொடையை இறைவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); நூல்: திர்மிதீ 3494

துஆ கேட்காதவர்களை அல்லாஹ் வெறுக்கிறான் என்றால், துஆ செய்யப்படுவதை எவ்வளவு விரும்புகிறான் என்பதை உணர முடியும். இறைவனுக்கு மிகவும் விருப்பமான இந்த வணக்கத்தை இறைவனல்லாதவர்களுக்குச் செய்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். அவ்வசனங்கள் யாவும் இய்யாக நஃபுது என்பதன் விளக்கவுரைகளேயாகும்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:194)

எவரையாவது பிரார்த்திப்பது கூடும் என்று வைத்துக் கொண்டால் அவர்கள் எத்தகையவர்களாக இருந்திட வேண்டும் என்று அல்லாஹ் இங்கே போதிக்கின்றான். அதாவது பிரார்த்திக்கப்படுவோர் எவருக்கும் அடிமைகளாக இல்லாதிருத்தல் அவசியம்.

அல்லாஹ் பல்வேறு வசனங்களில் நபிமார்களை நல்லவர்களை – வானவர்களைத் தனது அடிமைகள் என்றே குறிப்பிட்டுக் காட்டுகிறான். (2:23, 4:172, 8:41, 17:1,3, 18:1,6,5, 19:93, 38:17,30,44, 43:59, 54:9, 72:19, 53:10, 25:1, 57:9, 66:10 ஆகிய வசனங்களைக் காண்க!)

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன் 46:5)

இந்த வசனத்தில் இரண்டு உண்மைகளை அல்லாஹ் விளக்குகிறான். இறைவனல்லாத அழைக்கப்படுபவர்களுக்கு தாங்கள் அழைக்கப்படுவதே தெரியாது என்பது ஒரு உண்மை.

தங்களைப் பிரார்த்தனை செய்தது மறுமையில் தெரியும் போது தங்களுக்கும், இவர்களது பிரார்த்தனைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தாங்கள் அதை விரும்பவில்லை என்று கூறி, பிரார்த்தனை செய்தவர்களுக்கே எதிரிகளாகிப் போவர் என்பது மற்றொரு உண்மை. இதன் பின்னரும் யாரேனும் இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்யத் துணிவார்களா?

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

பிரார்த்தனை செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய மற்றொரு தகுதியை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். படைப்பாற்றல் எவனிடம் உள்ளதோ அவன் மாத்திரமே பிரார்த்திக்கப்பட அருகதையுடையவன். இறைவனன்றி பிரார்த்திக்கப்படுபவர்கள் நபிமார்களானாலும், நல்லடியார்களானாலும் அவர்களில் எவருமே ஒரு ஈயைக் கூடப் படைப்பதில்லை. படைக்க இயலாது. இந்த நிலையில் அவர்களை எங்ஙனம் பிரார்த்திக்கலாம்?

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

(அல்குர்ஆன் 27:62)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 2:186)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன் 10:106)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன் 7:197)

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன் 35:13,14,15)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:20,21)

இந்த வசனங்கள் யாவும் இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணைவைக்கும் பெரும்பாவம் என்பதையும் அறிவிக்கின்றன. இய்யாக நஃபுது என்பதன் விளக்கவுரைகளாக இவை அமைந்துள்ளன. இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்பும் இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்யலாம் என சிலர் கூறுவதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம்.

இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்ய வேண்டுமென்றோ, இறைத்தூதரின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ எந்த முஸ்லிமும் எண்ண மாட்டான். இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் தரப்பில் சில நியாயங்கள் வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கத் துணிகின்றனர். சிந்தித்துப் பார்க்கும் போது அவர்களது வாதங்கள் யாவுமே அர்த்தமற்றதாக அமைந்துள்ளதை உணரலாம்.

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

இறைவனல்லாத பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை. மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள் என்றே கூறுகிறோம். ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்றே நாங்கள் நம்புகிறோம். சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்? இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் சிந்திக்கும் போது இது பொருந்தாத வாதம் என்பதை உணரலாம்.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அத்தனையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்கின்றனர். நேரடியாக எதையும் தருவார்கள் என்று இவர்கள் நம்பாவிட்டாலும் தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கத் துணிகின்றனர்.

மக்கத்துக் காஃபிர்கள், (இஸ்லாத்தை ஏற்காதவர்) இறைவனல்லாத பெரியவர்களை இறைவனுக்குச் சமமாக எண்ணியிருக்கவில்லை. மாறாக, அல்லாஹ் தான் ஏக இறைவன்; படைப்பவன் அவனே; உணவளிப்பவன் அவனே; அனைத்து அதிகாரங்களும் அவன் கையில் தான் உள்ளன என்றே அவர்கள் நம்பினார்கள்.

(10:31, 29:61, 31:25, 39:93, 43:9,87, 34:24, 23:88 ஆகிய திருக்குர்ஆன் வசனங்களைக் காண்க)

இப்படியெல்லாம் அல்லாஹ்வைப் புரிந்து வைத்திருந்த மக்கத்து காபிர்கள், அல்லாஹ் விசயத்தில் செய்த தவறு தான் என்ன?

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

இவ்விரு வசனங்களும், மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இதை விடச் சான்று எதுவும் தேவையில்லை.

உதாரணங்கள் ஆதாரங்களாகுமா?

அதிகாரி

திருக்குர்ஆனையும், நபிவழியையும் அலட்சியம் செய்துவிட்டு நடைமுறை உதாரணங்களைக் காரணம் காட்டுவது, இவர்களிடம் உள்ள மற்றொரு நியாயம். அதாவது உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம்.

இவர்களை விட மிக மிக உயர்வான நிலையிலுள்ள அல்லாஹ்வை நாம் எப்படி நேரடியாக அணுக முடியும்? இதற்காகவே பெரியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கின்றனர். ஷைத்தான் இவர்களது தீய செயல்களை இவ்வாறே அழகானதாகக் காட்டுகிறான். உண்மையில் இதுவும் முட்டாள்தனமான வாதமேயாகும்.

உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது என்பது உண்மை தான். ஏன் அணுக முடியவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நம்மைப் பற்றித் தெரியாது. அந்த உயரதிகாரிக்கு எப்படி நம்மைப் பற்றித் தெரியாதோ அதே போல் இறைவனுக்கும் நம்மைப் பற்றி எதுவும் தெரியாதா? இந்தப் பெரியார்கள் நம்மைப் பற்றிச் சொன்னால் தான் இறைவனுக்கு நம்மைப் பற்றித் தெரியுமா? என்று இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

சாதாரண உயர் அதிகாரியின் நிலை எதுவோ அது தான் இறைவனது நிலையும் என்றல்லவா இவர்கள் எண்ணுகின்றனர்! யாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற, முக்காலமும் உணர்ந்து வைத்திருக்கின்ற, மனதில் மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் துல்லியமாக அறிகின்ற வல்லவனை அவனது அடிமைகளில் ஒருவரான அதிகாரிக்குச் சமமாக எண்ணுவதை விடவும் மோசமான உதாரணம் என்ன இருக்க இயலும்?

வக்கீல்

நம் வழக்குகளில் நாமே வாதாடுவதில்லை. ஒரு வக்கீலை நியமித்துக் கொள்கிறோம். அவ்வாறிருக்க இறைவனிடம் வாதாட ஒரு வக்கீலாக வலிமார்களைக் கருதுவதில் என்ன தவறு? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.

நீதிபதியிடம் வாதாட வக்கீல் அவசியம் தான். அவர் தன் வாதத் திறமையால் குற்றவாளியையும் நிரபராதியாக்கி விடுவார். நிரபராதியையும் குற்றவாளியாக்கி விடுவார். அதை நீதிபதியும் நம்பி தீர்ப்பு அளித்து விடுவார்.

இறைவனின் நிலைமை நீதிபதியின் இந்த நிலைமை போன்றது தானா? திறமையான வாதத்தினடிப்படையில் குற்றவாளியை நிரபராதியென தீர்ப்பளிக்கும் நீதிபதியைப் போல் இறைவனும் தவறான தீர்ப்பை வழங்கக் கூடியவன் தானா? யார் உண்மையில் குற்றாவளி? யார் நிரபராதி? என்பது நீதிபதிக்குத் தெரியாதது போலவே இறைவனுக்கும் தெரியாது என்கிறார்களா?

இறைவனது நல்லடியார்களின் வேலையும் வக்கீலுடைய வேலை போன்றது தானா? குற்றவாளிகளை நல்லவர்கள் என்று இறைவனிடம் அவர்கள் வாதிடப் போகிறார்களா? இல்லை என்றால் வக்கீல் எதற்காக?

அல்லாஹ்வைப் பற்றி கூறுவதென்றால், வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 16:74)

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 42:11)

அவனுக்கு நிகராக யாருமில்லை

(அல்குர்ஆன் 112:4)

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.

(அல்குர்ஆன் 36:78)

அல்லாஹ்வைப் பற்றிப் பேசும் போது யாதொன்றையும் உதாரணமாகக் கூறலாகாது என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன.

பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்?

நாம் பாவங்கள் பல செய்தவர்கள். இறைவனின் பல கட்டளைகளை மீறியவர்கள். இவ்வாறிருக்க, எப்படி இறைவனிடம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தை அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம் என்பது இவர்களின் மற்றொரு நியாயம். அதாவது இறைவனிடம் கேட்பதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறிக் கொண்டு இவர்கள் திசை மாறிச் செல்கிறார்கள்.

யாசிப்பதற்கும், பிச்சை கேட்பதற்கும் தகுதி என்ன வேண்டிக் கிடக்கின்றது? என்பதை இவர்கள் உணரவில்லை. இவர்கள் அல்லாஹ்வுக்கு எதையோ கொடுக்கப் போவது போலவும் இவன் அவர்களிடம் வாங்கப் போவது போலவும் இருந்தால் இவர்களின் வாதத்தில் அர்த்தமிருக்கும். நாம் ரப்புல் ஆலமீனிடம் யாசகம் தான் கேட்கப் போகிறோம். தகுதியில் குறைந்தவர்கள் தான் யாசகம் கேட்க அதிகம் அருகதை உள்ளவர்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறியதால் நாம் அல்லாஹ்விடம் கேட்க முடியாது. அதனால் தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம் என்போர் அல்லாஹ்வின் அளவற்ற அருளாளன் பண்பையே மறுக்கிறார்கள். அல்லாஹ் கோபக்காரன் எனவும் அவ்லியாக்கள் அளவற்ற அருளாளர்கள் எனவும் நம்பக் கூடியவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும். அல்லாஹ்வை விட அவ்லியாக்கள் அதிகமாக அருள் புரிவார்கள் என்பது இணைவைத்தலை விட கொடிய குற்றமாகும். இது அல்லாஹ்வை விட அவ்லியாக்களை உயர்த்தும் கொடுஞ் செயலாகும்.

இவர்களின் இந்த அறியாமையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள் என்றார்.

(அல்குர்ஆன் 12:87)

மனிதன் எவ்வளவு தான் பாவங்கள் புரிந்தாலும் அவனும் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் கேட்டால் அவனது அருள் உண்டு என உத்திரவாதம் தருகிறான். பாவிகள் தன்னிடம் வரலாகாது என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக, பாவிகளையே அழைத்து என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்கிறான்.

ஆக, அல்லாஹ்வைத் தவிர எவரையும் எந்தக் காரணம் காட்டியும் பிரார்த்தித்தலாகாது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. எந்தக் காரணத்திற்காக மற்றவர்களை பிரார்த்தித்தாலும் அவர்கள் இய்யாக நஃபுது எனும் உறுதிமொழிக்கு மாறு செய்தவர்களே என்பதில் ஐயமில்லை.

அவ்லியாக்களின் அற்புதங்கள்!

நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு மகான்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம், பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

அற்புதங்கள் பற்றி முழுமையான விளக்கமில்லாத காரணத்தால் தான் இத்தகைய வாதத்தை அவர்கள் முன் வைக்கின்றனர். நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளது உண்மை தான். அதை மறுப்பவர் குர்ஆனை மறுத்தவராவார்.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த மாட்டார்கள். நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்ற உண்மையை விளங்காமலிருப்பது தான் அந்த வாதத்தன் அடிப்படையாகும்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 13:38)

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

(அல்குர்ஆன் 40:78)

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 14:11)

எந்த ஒரு அற்புதத்தைக் கொண்டு வருவதென்றாலும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் முடியாது என்பதற்கு மறுக்க முடியாத மாற்றுக் கருத்து கொள்ள முடியாத ஆதாரமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன. இதைப் புரிந்து கொள்வதற்கு நபிமார்கள் வழியாக அல்லாஹ் நிகழ்த்திய சில அற்புதங்களை நாம் ஆராய்வோம்.

மூஸா நபி அவர்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களை வழங்கியிருந்தான். கைத்தடியைக் கீழே போட்டதும் அது பாம்பாக மாறுவதும் அவற்றுள் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 27:10, 20:19-21, 7:107, 26:32, 28:31 ஆகிய வசனங்களில் இந்த அற்புதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் கையில் இருந்த கைத்தடி எப்போது போடப்பட்டாலும் பாம்பாக மாறுமா? அல்லது அல்லாஹ்வின் கட்டளைப்படி போடும் போது மட்டும் பாம்பாக மாறுமா? இக்கேள்விக்கு திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விடையளிக்கிறது.

மூஸா நபியவர்கள் தாம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று கூறியபோது அம்மக்கள் ஏற்கவில்லை. மூஸா நபி செய்து காட்டிய அற்புதம் அவர்களுக்கு தந்திரக் கலையாகத் தோன்றியது. எனவே மூஸா நபிக்கும் அந்த நாட்டிலுள்ள மந்திரக் கலை நிபுணர்களுக்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். நீங்களே போடுங்கள்! என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். உமது கைத்தடியைப் போடுவீராக! என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(அல்குர்ஆன் 7:115-117)

எதிரிகள் தமது வித்தையைக் காட்டியவுடன் மூஸா நபியவர்கள் தமது கைத்தடியைக் கீழே போட்டு தமது அற்புதத்தைக் காட்டவில்லை. மாறாக அல்லாஹ் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்த பிறகு தான் கைத்தடியைப் போட்டனர் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.

அற்புதம் செய்யும் ஆற்றல் மூஸா நபியின் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருந்தால், அல்லது அவர்களின் கைத்தடிக்கே மந்திர சக்தி அளிக்கப்பட்டிருந்தால் உடனே தமது கைத்தடியைப் போட்டிருப்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்கள் தமது கைத்தடியைக் கீழே போடவில்லை.

மற்றொரு இடத்தில் பின்வருமாறு இந்த நிகழ்ச்சியை அல்லாஹ் கூறுகிறான்.

மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா? என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர் என்று கூறினோம். உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் (என்றும் கூறினோம்.)

(அல்குர்ஆன் 20:65-69)

அல்லாஹ்வின் கட்டளை வருவதற்கு முன் அவர்கள் பயந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமது கைத்தடியின் மூலம் எதிரிகளை வெல்ல முடியும் என்று அவர்கள் நினைத்திருந்தால் பயந்திருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் அனுமதி கிடைத்தால் தான் தம்மால் அற்புதம் செய்து காட்டி எதிரிகளை வெல்ல முடியும் என்று அவர்கள் கருதியதால் தான் பயந்தார்கள் என்பதை இவ்வசனத்தைச் சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும்.

மூஸா நபி அவர்கள் தமது சமுதாயத்தை அழைத்துக் கொண்டு சென்ற போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே மக்கள் மூஸா நபியிடம் முறையிட்டனர்.

மக்கள் முறையிட்டவுடன் உங்களுக்குத் தண்ணீர் தானே வேண்டும்? இதோ எனது மந்திரக் கோல் மூலம் தண்ணீரை உண்டாக்கிக் காட்டுகிறேன் என்று கூறினார்களா? அல்லது இது அல்லாஹ் நாடினால் மட்டுமே நடக்கும் என்று கருதினார்களா?

இந்த நிகழ்ச்சியை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக! என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்! (என்று கூறினோம்)

(அல்குர்ஆன் 2:60)

அவர்கள் கையில் கைத்தடி இருந்தும் அதன் மூலம் அவர்களாக பாறையில் அடித்து தண்ணீரைக் கொண்டு வரவில்லை. அல்லாஹ் அடிக்கச் சொன்ன பிறகு தான் அடித்தார்கள் என்பதிலிருந்து அற்புதங்கள் நிகழ்த்துவது அல்லாஹ்வின் அதிகாரத்தின்பாற்பட்டது என்பதை அறியலாம்.

இந்த விபரம் 7:160 வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

மூஸா நபியை எதிரிகள் விரட்டி வருகின்றனர். மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டு ஓடுகின்றனர். எதிரில் செங்கடல் குறுக்கிடுகின்றது. மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் வசமாக மாட்டிக் கொண்டனர். பின்புறம் பிர்அவ்னுடைய வலிமையான படை. முன்புறம் செங்கடல். இந்த நிலையில் தம்மிடம் இருந்த கைத்தடியின் மூலம் தாமாக அற்புதம் நிகழ்த்தி அவர்கள் தப்பித்தார்களா? அல்லது அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்களா? இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன் 26:61-63)

மூஸா நபியவர்கள் மாட்டிக் கொண்ட போது தமது கைத்தடியால் தாமாகக் கடலில் அடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். கைத்தடியின் மூலம் கடலைப் பிளந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே தான் அவன் எனக்கு ஒரு வழியைக் காட்டுவான் என்று கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? அல்லாஹ் எப்போது போடச் சொல்கிறானோ அப்போது போட்டால் தான் அது பாம்பாகும். அல்லாஹ் பாறையில் அடிக்கச் சொல்லும் போது அடித்தால் தான் பாறையில் நீரூற்றுக்கள் பீரிட்டு வரும். அல்லாஹ் அடிக்கச் சொல்லும் போது கடலில் அடித்தால் தான் பிளந்து வழிவிடும். மூஸா நபி விரும்பும் போதெல்லாம் நடக்காது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

இது போலவே ஈஸா (அலை) அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஈஸா நபி சில நேரங்களில் இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளனர். குஷ்டரோகத்தையும் பிறவிக் குருடையும் குணப்படுத்தியுள்ளனர். களி மண்ணால் பறவை செய்து அவற்றை உயிருள்ள பறவையாக மாற்றிக் காட்டினார்கள். அல்குர்ஆன் 3:49, 5:110 ஆகிய வசனங்களில் இந்த விபரங்களைக் காணலாம்.

இவ்வளவு பெரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் ஆற்றலை அல்லாஹ் அவர்களது அதிகாரத்தில் அளித்தானா? அல்லது ஒவ்வொரு அற்புதம் நிகழ்த்தும் போதும் அல்லாஹ்விடம் அனுமதி பெற்றுத் தான் நிகழ்த்த முடிந்ததா? மேலே நாம் சுட்டிக்காட்டிய 3:49, 5:110 ஆகிய வசனங்களிலேயே இதற்கான விடையையும் காணலாம்.

என்னிடம் அனுமதி பெற்று இந்த அற்புதங்களை நீர் நிகழ்த்துவீர் என்று 5:110 வசனத்தில் அல்லாஹ் ஈஸா நபியிடம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அல்லாஹ்வின் அனுமதி பெற்று இவற்றைச் செய்வேன் என்று ஈஸா நபி அவர்கள் மக்களிடம் கூறியதாக 3:49 வசனம் கூறுகிறது.

தேவைப்படும் போதெல்லாம் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் அதிகாரம் ஈஸா நபிக்குக் கூட வழங்கப்பட்டதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இப்ராஹீம் நபியவர்கள் நெருப்பில் வீசப்பட்ட போது அவர்களாக அந்த நெருப்பிலிருந்து தப்பித்ததாக அல்லாஹ் கூறவில்லை. நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளிர்ந்து விடு என நாம் கூறினோம் (21:69) என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

நபிமார்களில் தலைசிறந்தவர்களான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். அந்த அற்புதங்களையெல்லாம் அவர்கள் நினைத்த உடனே நடத்திக் காட்டும் அதிகாரம் பெற்று நிகழ்த்தினார்களா? அல்லது அல்லாஹ் தான் விரும்பிய நேரத்தில் அவர்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினானா?

பின்வரும் வசனங்கள் இந்தக் கேள்விக்கு தெளிவாக விடையளிக்கின்றன.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:90-93)

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டவுடன் அவர்கள் இதைச் செய்யவில்லை. செய்யவும் முடியாது. கடவுள் தான் இவற்றைச் செய்ய முடியும். நான் கடவுள் என்று உங்களிடம் வாதம் செய்தால் என்னிடம் இவற்றைச் செய்யுமாறு கேட்கலாம். மனிதன் என்றும் கடவுளின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் கடவுளிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலில் அடங்கியுள்ளது.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். மனிதர்கள் மூலம் அவன் நாடும் போது வெளிப்படுத்துகிறான் என்பதையும் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும். அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதை அல்குர்ஆன் 3:112, 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களில் காணலாம்.

இங்கே சிந்திக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நபிமார்கள் நினைத்த மாத்திரத்தில் அன்றாடம் அற்புதம் நிகழ்த்தும் சக்தி வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலைமைய நீட்ட முடியாது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

நபிமார்களை எதிரிகள் கொல்ல வரும் போது, அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் அவர்களிடம் இருந்திருந்தால் அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதல்ல என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

இவை தவிர நபிமார்கள் பட்ட துன்பங்களையும் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. வறுமையில் வாடியுள்ளனர். சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அல்லாஹ் துன்பத்திலிருந்து விடுபட அற்புதம் செய்யும் ஆற்றலைப் பயன்படுத்தி துன்பங்களை வெல்ல முடியும். வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அற்புதங்களைப் பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்ட நேரத்தில் கூட எந்த அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டவில்லை என்பதிலிருந்து அற்புதங்கள் அலலாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளைத் துவம்சம் செய்திருக்க முடியும்.

நபிமார்கள் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்தவுடன் அதை அவர்கள் தமது ஆற்றலால் செய்கிறார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்கின்றனர். இதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வோம்.

நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றவர்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியது, அப்பறவை இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது. அல்குர்ஆன் 27:20 முதல் 27:28 வரை உள்ள வசனங்களில் இது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று அதைப் புரிந்து கொள்ள மாட்டோம். சுலைமான் நபிக்காக ஒரே ஒரு பறவைக்கு ஒரே ஒரு தடவை அந்த ஆற்றலை அல்லாஹ் அளித்தான் என்று தான் விளங்க வேண்டும். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று புரிந்து கொள்ளாமல் அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்பது தான் இதன் பொருள்.

இது போலவே எறும்பு பேசிய விபரமும் திருக்குர்ஆனில் உள்ளது. பேசியது மட்டுமின்றி மனிதர்களைப் போலவே வருபவர் சுலைமான் என்றும் அவருடன் அவரது படையினர் வருகிறார்கள் என்றும் புரிந்து கொள்கிறது.

அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும் எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எறும்பு, ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளான். இறைத்தூதர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தும் இறைத் தன்மையை வழங்கி விட்டான் என்று புரிந்து கொள்வது முற்றிலும் தவறானதாகும்.

பறவைகள் எறும்புகள் ஒருபுறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும் சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்கிறான். இந்த விபரங்களை அல்குர்ஆன் 20:85 முதல் 20:98 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை இவன் மூலம் நிகழ்த்திக் காட்டினான். இயல்பிலேயே இவன் நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தைச் செய்வான் என்று புரிந்து கொள்ள முடியாது. இவன் இப்போது செய்து காட்டிய அந்த அற்புதத்தையே மற்றொரு தடவையும் இவனால் செய்ய முடியாது என்பதை அல்குர்ஆன் 20:89 வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இது போலவே எதிர்காலத்தில் தஜ்ஜால் என்பவனும் சில அற்புதங்களை நிகழ்த்துவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால் அவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் ஆற்றலுடையவனாகி விட்டான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு தடவை இறந்தவரை அவன் உயிர்ப்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்திவிட்டனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி – 7132

ஏன் ஷைத்தான் கூட எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி அவர்களது எண்ணங்களையே மாற்றி விடுகிறான்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நம் கண் முன்னே ஒருவர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் உடனே அவரை மகான் என்றும் அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார் என்றும் கருதி விடக் கூடாது. ஏனெனில் மனிதர்களைச் சோதித்துப் பார்க்க கெட்டவர்களுக்கும் அல்லாஹ் அற்புதம் வழங்குவான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு சான்றுகளை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும் தங்கள் பழைய நம்பிக்கை விட்டு விட தயக்கம் காட்டுவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.

என்றோ மரணித்து விட்ட மனிதர்களின் அடக்கத்தலங்களில் போய் அற்புதங்களை எதிர்பார்க்கின்றனர். எவ்வளவோ அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றனவே என்று தங்கள் கூற்றை இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

அற்புதங்கள் பல நிகத்திய ஈஸா நபியை அழைக்கும் கிறிஸ்தவர்களை காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) என்று கூறுகின்ற இவர்கள் ஈஸா நபியின் கால் தூசுக்கு சமமாகாத மற்றவர்களை அழைப்பது இவர்களுக்கு ஈமானாகத் தோற்றமளிப்பது ஆச்சரியமாகவுள்ளது.

பல நபிமார்கள் மூலம் அல்லாஹ் அற்புதங்கள் நிகழ்த்தியதாக நாம் முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நடந்தன. அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவே இல்லை.

ஆனால் இவர்களோ இறந்தவர்களுக்கு அற்புதங்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.

மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்ம் – 3084

உயிரோடு இருக்கும் போதே நினைத்த அற்புதங்களை யாரும் நிகழ்த்த முடியாது என்றால் இறந்த பின் அறவே எந்தச் செயல்பாடும் கிடையாது. அப்படியானால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? இதை நாங்கள் பார்த்திருக்கிறோமே என்ற வாதத்துக்கு என்ன பதில்?

அற்புதங்கள் நடக்கட்டுமே! அதனால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்று ஆகிவிடுமா? சாமுரியும் தான் அற்புதம் நிகழ்த்தினான். அற்புதத்தைப் பார்த்துத் தான் மக்கள் ஈமானைப் பறிகொடுத்தார்கள்.

நாளை தஜ்ஜால் வந்து அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் போது அவனிடம் துஆச் செய்வார்களா? துஆச் செய்யலாம் எனக் கூறுவார்களா?

அற்புதங்கள் நிகழட்டும்! நிகழாமல் போகட்டும்! அதற்காக அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்திப்பது கூடும் என்று ஆகிவிடாது. கூடாது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அல்லாஹ் நம்மைச் சோதிக்கிறான் என்று கருதி சோதனையில் வெற்றி பெறுவது தான் உண்மையான முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றன எனக் கூறுகிறார்களே அது கூட உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர். இரண்டு பேர் 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கை கூடாத 998 பேர் வாயைத் திறப்பதில்லை. இவரெல்லாம் ஒரு மகானா என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைவித்துவிடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை. மாறாக கோவில்களில் நடக்கின்றன. சர்ச்சுகளில் நடக்கின்றன. இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன. இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் காணிக்கைகள் குவிகின்றன. தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாக காணிக்கைகள் சேர்கின்றன.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பதும் குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருந்தது. இந்த வாதத்தினடிப்படையில் கோவில், சர்ச்சுகளுக்குப் போய் பிரார்த்திப்பதையும் குறை காண முடியாது.

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே? இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும். ஒரு காரியம் ஒருவருக்கு நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும் போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.

அந்த நேரம் வரும் போது தர்காவில் இருப்பவர்கள் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் வரும் போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் வரும் போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும் பிந்தவும் செய்யாது என்பது குர்ஆனின் போதனை. (7:34, 10:49, 16:61)

எனவே அற்புதம் பற்றி தெளிவாக அறிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட முடியும்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்

வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவது போலவே குர்ஆனிலிருந்தும் கூட (தவறான வியாக்கியானம் கொடுத்து) இவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

(அல்குர்ஆன் 3:169)

நல்லடியார்கள் மரணித்த பின்பும் வாழ்கிறார்கள் என்று இந்த இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் தவறாகும்.

முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

இந்த வசனம் பற்றி நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சுவர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); நூல்: முஸ்லிம் 3500

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும். இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று, அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவார். அதன் பின்னர் புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு! எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)

நூல்: திர்மிதீ 991

உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? இந்தக் காரணத்தினாலும் இவர்களின் வாதம் அடிபட்டுப் போகின்றது. இதையெல்லாம் கூட விட்டு விடுவோம். அவர்களின் வாதப்படி அவர்கள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய தகுதியைத் தந்து விடுமா?

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்?

ஈஸா நபி உண்மையாகவே உயிருடன் உள்ளனர். மலக்குகள் உயிருடன் உள்ளனர். ஈஸா நபியைப் பிரார்த்திப்பவர்களை காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்? இதனாலும் இவர்களின் வாதம் மேலும் பலவீனப்படுகின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed