Screenshot

*என் குழந்தைகளே என் உலகம்! – ஓர் அன்பு எச்சரிக்கை*

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் நமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டுமாக.

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! இன்று நம் சமுதாயத்தில் பரவலாகக் கேட்கும் ஒரு வார்த்தை,

*எனக்கு எல்லாமே என் பிள்ளைங்கதான். அவங்களுக்காகத்தான் நான் வாழ்றேன். அவங்கதான் என் உலகம்.*

இது கேட்பதற்கு மிகவும் அழகாகவும், பாசத்தின் வெளிப்பாடாகவும் தோன்றலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேசிப்பது இயற்கை. அந்தப் பாசத்தை அல்லாஹ்வே நம் உள்ளங்களில் வைத்துள்ளான்.

ஆனால், அந்தப் பாசம் எப்போது எல்லை மீறுகிறதோ, எப்போது அது அல்லாஹ்வை மறக்கடிக்கச் செய்கிறதோ, அப்போது அது ஆபத்தானதாக மாறுகிறது.

அல்லாஹ் குர்ஆனில் மூன்று இடங்களில் நம்மை எச்சரிக்கிறான். வாருங்கள் பார்ப்போம்.

\\*பிள்ளைகள் ஒருசோதனை* \\

அல்லாஹ் திருமறையில் மிகத் தெளிவாகக் கூறுகிறான்:

*உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்*!” (அல்குர்ஆன் 8:28)

*உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.* (அல்குர்ஆன் 64:15)

சகோதரர்களே! “சோதனை
என்றால் என்ன? தேர்வில் கொடுக்கப்படும் வினாத்தாள் போன்றது நம் செல்வமும் பிள்ளைகளும். வினாத்தாளைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது; சரியான விடையை எழுதினால்தான் வெற்றி.

*பிள்ளைகளின் சந்தோஷத்திற்காக ஹராமான வழியில் சம்பாதிக்கிறோமா*? அது தோல்வி.

*பிள்ளை தூங்குகிறான் என்பதற்காக ஃபஜ்ர் தொழுகைக்கு எழுப்பாமல் விடுகிறோமா*? அது தோல்வி.

*பிள்ளைக்கு உலகக் கல்வியைக் கொடுத்துவிட்டு, மார்க்கத்தைக் கொடுக்காமல் விடுகிறோமா*? அது தோல்வி.

அல்லாஹ் சொல்கிறான்: *இவை வெறும் சோதனைதான். உண்மையான, மகத்தான கூலி என்னிடம்தான் இருக்கிறது.*

எனவே, அந்தப் பரீட்சைக்காக (பிள்ளைக்காக) இறைவனின் கூலியை இழந்துவிடாதீர்கள்.

\\ *நஷ்டவாளிகள் யார்?* \\

இன்னும் ஒரு படி மேலே சென்று அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான்:

*நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம்*. இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.” (அல்குர்ஆன் 63:9)

இன்று பல பெற்றோரின் நிலை என்ன?

டியூஷன் இருக்கிறது என்று மகனை மக்ரிப் தொழுகைக்கு அனுப்புவதில்லை.

குழந்தைகளுடன் வெளியே சுற்றுவதில் நேரம் கழிந்து, தொழுகைகள் தவறிப்போகின்றன.

இப்படிச் செய்பவர்களைப் பார்த்து அல்லாஹ் “நட்டமடைந்தவர்கள்” என்று கூறுகிறான். சிந்தித்துப் பாருங்கள்! *யாருக்காக நீங்கள் அல்லாஹ்வை மறந்தீர்களோ, அந்தப் பிள்ளைகள் மறுமையில் உங்களுக்கு உதவுவார்களா*?

*அந்நாளில் ஒரு மனிதன் தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தந்தையை விட்டும், மனைவியை விட்டும், மக்களை விட்டும் வெருண்டோடுவான்* (80:34-36) என்று குர்ஆன் கூறுகிறது.

*உண்மையான பாசம் எது*?

அப்படியானால் பிள்ளைகளை நேசிக்கக் கூடாதா? கண்டிப்பாக நேசிக்க வேண்டும்!

ஆனால் அந்த நேசம் அவர்களை நரகத்திலிருந்து காப்பதாக இருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளை உண்மையாக நேசித்தால், அவர்களுக்கு அல்லாஹ்வை அறிமுகப்படுத்துங்கள்.

உங்கள் பாசம், அவர்களைத் தொழுகையாளிகளாக மாற்ற வேண்டும்.

“என் பிள்ளை டாக்டர் ஆக வேண்டும், இன்ஜினியர் ஆக வேண்டும்” என்று ஆசைப்படுவதை விட, *என் பிள்ளை நரகத்திற்குச் சென்றுவிடக் கூடாது* என்று கவலைப்படுவதுதான் உண்மையான பாசம்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைகள் நமக்குக் கொடுக்கப்பட்ட அமானிதம் அவர்கள் நம் எஜமானர்கள் அல்ல. பிள்ளைகளின் அன்பு உங்கள் கண்களை மறைத்து, ஹலாலை ஹராமாக்கவோ, கடமைகளைத் தவறவிடவோ காரணமாகிவிடக் கூடாது.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நம் பொருட்செல்வத்தையும், மக்கட்செல்வத்தையும் மறுமை வெற்றிக்குரிய சாதனங்களாக மாற்றித் தருவானாக!

அவற்றின் மூலம் நம்மைச் சோதித்துத் தோல்வியுறச் செய்துவிடாமல் பாதுகாப்பானாக! ஆமீன்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *