|| *தொழுகையின் ஆரம்ப துஆவின் ஆழமான அர்த்தங்கள்* ||
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகை மிக முக்கியமானது. அது *படைத்தவனுக்கும் படைக்கப்பட்டவனுக்கும் இடையிலான நேரடி உரையாடல்*.
இந்த உன்னதமான உரையாடலைத் தொடங்குவதற்கு முன், நபிகளார் சில துவக்கப் பிரார்த்தனைகளை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அவற்றில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் புகாரியில் 744 இடம்பெறும் இந்த துஆ, *ஒரு அடியான் தன் இறைவனிடம் பாவ மன்னிப்புக்காகவும், தூய்மைக்காகவும் எவ்வளவு ஆத்மார்த்தமாக மன்றாட வேண்டும்* என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
அந்தப் பிரார்த்தனை பின்வருமாறு….
*இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயா*
*இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!*
*இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!*
இந்த துஆ மூன்று ஆழமான உருவகங்களின் மூலம், பாவத்திலிருந்து முழுமையான விடுதலையை வேண்டுகிறது.
\\ முதல் பகுதி, *பாவத்திலிருந்து வெகுதூரமாக்குதல்* \\
*இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக!* என்று கேட்கிறோம்.
கிழக்கு, மேற்கு என்பவை இரண்டு துருவங்கள். அவை எக்காலத்திலும், எக்காரணம் கொண்டும் ஒன்றிணையவே முடியாதவை.
இந்த உதாரத்தின் மூலம், *யா அல்லாஹ்! நான் செய்த பாவங்களை என் பதிவேட்டிலிருந்து நீக்குவதோடு மட்டுமல்லாமல், மீண்டும் அந்தப் பாவங்களின் பக்கம் நான் திரும்பாதவாறு எனக்கும் அதற்கும் இடையே ஒரு நிரந்தரத் தடையை, ஒன்றிணையவே முடியாத தூரத்தை ஏற்படுத்து* என்று உருக்கமாக வேண்டுகிறோம்.
இது கடந்த காலப் பாவங்களுக்கு மன்னிப்பும், எதிர்காலப் பாவங்களுக்குப் பாதுகாப்பும் தேடும் ஒரு பரிபூரணமான கோரிக்கையாகும்.
\\ இரண்டாவது பகுதி, *பாவத்திலிருந்து தூய்மைப்படுத்துதல்.* \\
*இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!* என்பது அடுத்த கட்ட வேண்டுதல்.
அழுக்கைக் காட்டுவதற்கு வெண்மை நிறத்தை விடச் சிறந்த ஆடை ஏதுமில்லை. ஒரு சிறிய கறைகூட அதில் தெளிவாக தெரியும். அப்படிப்பட்ட வெண் ஆடையை மீண்டும் அதன் பழைய பரிசுத்த நிலைக்குக் கொண்டு வருவது என்பது, கறையை முழுமையாக, அதன் சுவடே தெரியாத அளவுக்கு அகற்றுவதாகும்.
*பாவங்கள் என்பவை நமது உள்ளத்தில் படியும் கறைகள்*. இந்தக் கோரிக்கையின் மூலம்,
*யா அல்லாஹ்! என் உள்ளத்தில் படிந்துள்ள பாவக் கறைகளை முழுமையாக அகற்றிவிடு. என் உள்ளத்தை, நீ எப்படிப் படைத்தாயோ அந்த அசல் தூய்மையான நிலைக்கு மீண்டும் கொண்டு வா* என்று நாம் படைத்தவனிடம் னிடம் கெஞ்சுகிறான்.
இது பாவங்களை *மறைத்து வை* என்று கேட்பதல்ல, மாறாக அவற்றை வேரோடு *அகற்றிவிடு* என்று கேட்கும் பிரார்த்தனை.
\\ மூன்றாவது பகுதி, *பாவத்தை நீக்கி குளிர்வித்தல்* \\
*இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!*என்பது இதன் உச்சகட்டமாகும்.
தண்ணீர் என்பது நாம் அனைவரும் அறிந்த தூய்மைப்படுத்தும் சாதனம்; அது அழுக்குகளைக் கழுவிச் செல்கிறது.
ஆனால், *பனிக்கட்டியும், ஆலங்கட்டியும் ஏன்*?
*பாவங்கள் என்பவை நெருப்பின் குணம் கொண்டவை*.
அவை இந்த உலக வாழ்வில் மன உளைச்சலையும், பதற்றத்தையும் தருவதோடு, மறுமையில் நரக நெருப்புக்கு இட்டுச் செல்லக் கூடியவை.
எனவே, தண்ணீரால் பாவத்தின் கறையைக் கழுவி, பனிக்கட்டி மற்றும் ஆலங்கட்டியின் குளிர்ச்சியால் அந்தப் பாவத்தால் ஏற்பட்ட அனலைத் தணித்து, நரக நெருப்பிலிருந்து நம்மை பாதுகாத்து,
*நம் உள்ளத்திற்குக் குளிர்ச்சியையும், அமைதியையும் தருவாயாக* என்பதே இதன் ஆழமான பொருளாகும்.
நாம் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வின் முன்னால் தொழுகைக்காக நிற்கும் முன், *உடல் தூய்மைக்காக ‘உளூ’ செய்கிறோம்*.
அதுபோலவே, இந்த துஆவின் மூலம் *நமது உள்ளத்தை பாவக் கறைகளிலிருந்து தூய்மைப்படுத்திக் கொள்கிறோம்*.
*யா அல்லாஹ்! நாங்கள் குற்றவாளி. எங்கள் பாவச் சுமைகளுடன் உன் முன்பு நிற்கிறோம். நீயே எண்களைத் தூய்மைப்படுத்து*
என்ற முழுமையான சரணாகதியுடன் தொழுகையைத் தொடங்கும் போது, அந்தத் தொழுகை ஒரு உயரிய அந்தஸ்தை அடைகிறது.
சுருக்கமாக கூறுவதென்றால் , இந்த ஒரு துஆ, ஒரு முஸ்லிம் *தன் பாவம் குறித்து எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்* என்பதையும், *அல்லாஹ்வின் கருணை மீது எவ்வளவு ஆழமான நம்பிக்கை வைக்க வேண்டும்* என்பதையும் ஒருங்கே உணர்த்துகிறது.
இது வெறும் வார்த்தைகளின் கோர்வையல்ல இது ஒரு அடியானின் ஆத்மார்த்தமான பாவ அறிக்கை மற்றும் தூய்மைக்கான ஏக்கம்.
ஒவ்வொரு முறையும் தொழுகையில் இந்த துஆவை அதன் ஆழமான அர்த்தங்களை உணர்ந்து ஓதும்போது, நமது உள்ளம் தூய்மையடைவதோடு, தொழுகையில் முழுமையான ஈடுபாடும் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஏகத்துவம்