|| *அல்லாஹ்வின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் நிம்மதியடைகின்றது*! ||
நாம் இன்றைய உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருள் வளத்தையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடைந்திருக்கிறோம்.
ஆனாலும், நமது உள்ளத்தில் உண்மையான அமைதி, நிம்மதி, மனநிறைவு என்பது ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது.
*மன அழுத்தம், பதட்டம், கவலை மற்றும் எதிர்காலம் குறித்த பயம்* ஆகியவை நம்மை சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது.
*உலக விஷயங்கள் கொடுக்கும் மகிழ்ச்சியும், அமைதியும் தற்காலிகமானவை*
அவை *ஒருபோதும் நிரந்தரமான, ஆழமான மன நிம்மதியைத் தருவதில்லை.*
காரணம், அவை அனைத்தும் *அழியக்கூடிய, நிலையற்ற பொருட்களின் மீது கட்டமைக்கப்பட்டவை*.
அப்போ உண்மையான, நிலையான மன அமைதி எங்கே கிடைக்கும்?
இந்த அமைதியின்மைக்கான மூல காரணத்தையும், அதற்கான நிரந்தர தீர்வையும் இஸ்லாம் மிகத் தெளிவாக முன்வைக்கிறது.
அந்தத் தீர்வுதான் *அல்லாஹ்வின் நினைவு* இதைத்தான் வல்ல ரஹ்மான் தனது திருமறையில் ஆணித்தரமாகக் கூறுகிறான்:
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
அவர்களே இறைநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களின் *உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன*. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. (13:28)
இந்த வசனம், மனித உள்ளத்தின் அடிப்படை இயல்பை நமக்குக் காட்டுகிறது. உள்ளத்தை படைத்த அல்லாஹ்தான், அதற்கான அமைதியின் திறவுகோலையும் தன்னிடமே வைத்துள்ளான்.
*அல்லாஹ்வின் நினைவு* என்பது என்ன?
*அல்லாஹ்வின் நினைவு* வெறுமனே நாவால் சில வார்த்தைகளை உச்சரிப்பது மட்டுமல்ல. அது ஒரு முஸ்லிமின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய *ஒரு பரந்த, ஆழமான கருத்தாகும். குர்ஆன் மற்றும் ஹதீஸின் படி, அல்லாஹ்வின் நினைவு* என்பது பின்வரும் பல வடிவங்களை உள்ளடக்கியது
\\ *நாவினால் செய்யப்படும் திக்ர்* \\
இது அல்லாஹ்வைப் புகழ்ந்து பேசும் வார்த்தைகளை உள்ளடக்கியது.
(*سُبْحَانَ اللَّهِ*): அல்லாஹ் தூய்மையானவன் என துதிப்பது.
(*ٱلْـحَمْدُ لِلَّهِ*): எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனப் புகழ்வது.
(*اللَّهُ أَكْبَرُ*): அல்லாஹ் மிகப் பெரியவன் எனப் பெருமைப்படுத்துவது.
(*لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ*): வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை
என ஏகத்துவத்தை பிரகடனம் செய்வது.
(*أَسْتَغْفِرُ اللَّهَ*): அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவது.
நபிகளார் கூறினார்கள்: *இரண்டு சொற்கள் உள்ளன. அவை நாவிற்கு இலகுவானவை, (நன்மைத்) தராசில் கனமானவை, அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை* ஆகும். (அவை:)
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
‘சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அழீம்’
(பொருள்: *அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்; மகத்துவமிக்க அல்லாஹ் தூய்மையானவன்*). புஹாரி 6406, முஸ்லிம் 2694
\\ *உள்ளத்தால் செய்யப்படும் திக்ர்* \\
திக்ர் என்பது வெறுமனே நாவினால் உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் தொகுப்பு மட்டுமல்ல. அதன் உண்மையான ஆணிவேர், *உள்ளத்தில் இருந்து வெளிப்படுவதகும்.*
நாவில் மொழியும் வார்த்தைகள் *உள்ளத்தின் உணர்வுகளோடு ஒன்றி வரும்போதுதான்* அந்த திக்ர் முழுமை பெறுகிறது.
அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றியும்,
அவனது அற்புதப் படைப்புகளான வானங்கள், பூமி மற்றும் மனிதன் ஆகியவற்றின் உருவாக்கம் குறித்தும் சிந்திப்பது பற்றியும்,
இறைநினைவின் முக்கிய பகுதியாகும்.
இத்துடன், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனது உன்னதமான பண்புகளைப் பற்றி சிந்தித்து, அவனது மகத்துவத்தை உணர்வதும் அவசியமாகிறது.
இந்த உணர்வு, நமது அன்றாட செயல்களிலும் பிரதிபலிக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற எனும் உயர்நிலை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
இத்தகைய விழிப்புணர்வு, அல்லாஹ் நமக்கு வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளை நினைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.
அந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துவதும், திக்ரின் மிக உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
ஆகவே, உண்மையான திக்ர் என்பது *நாவின் வார்த்தைகள், உள்ளத்தின் சிந்தனை, செயல்களின் விழிப்புணர்வு மற்றும் வாழ்வின் நன்றி உணர்வு* ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான நிலையாகும்.
அவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் அல்லாஹ்வை நினைக்கின்றனர். வானங்கள், பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்திக்கின்றனர்.
*எங்கள் இறைவனே! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக*! (என்று கூறுகின்றனர்.)(3:191)
\\ *உடல் உறுப்புகளால் செய்யப்படும் திக்ர்* \\
இதுவே திக்ரின் நடைமுறை வடிவம். அல்லாஹ்வின் நினைவை நமது செயல்களில் வெளிப்படுத்துவது.
அல்லாஹ்வின் நினைவு என்பது உள்ளத்தின் சிந்தனைகளோடு மட்டும் சுருங்கிவிடுவதில்லை,
அது நமது அன்றாடச் செயல்கள் மூலமாக வெளிப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவ்வாறு அல்லாஹ்வின் நினைவை நமது செயல்களில் வெளிப்படுத்துவதே திக்ரின் உண்மையான நடைமுறை வடிவமாகும்.
இதனைப் பல வழிகளில் நாம் செயல்படுத்தலாம்.
\\ *தொழுகை* \\
இறைநினைவின் நடைமுறை வடிவங்களில் மிகச் சிறந்ததும், முதன்மையானதும் தொழுகை ஆகும்.
அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியதன் முக்கிய நோக்கமே, அவனை நினைவு கூர்வதற்காகத்தான்.
தொழுகை என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல, அது தீமைகளை விட்டும் மனிதனைத் தடுக்கும் ஒரு கேடயமாகவும், இறைநினைவின் உச்சமாகவும் விளங்குகிறது.
*தொழுகை, மானக்கேடானவற்றையும், தீமைகளையும் தடுக்கின்றது. அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும்*. (29:45)
\\ *குர்ஆன் ஓதுவதும் உள்ளத்தின் அமைதியும்* \\
அல்லாஹ்வின் வார்த்தையான திருக்குர்ஆனை ஓதுவதும், அதன் வரிகளைச் சிந்திப்பதும் இறைநினைவின் சக்திவாய்ந்த வடிவமாகும்.
*குர்ஆனின் வசனங்கள் உள்ளங்களைத் தொடக்கூடியவை.*
அவை *அல்லாஹ்வை பற்றிய அச்சத்தையும்*, அவனது கருணையின் மீதான நம்பிக்கையையும் ஒருசேர வளர்த்து, குழப்பமான மனங்களுக்கு மாபெரும் அமைதியைத் தருகின்றன.
*அல்லாஹ்வே மிக அழகிய செய்தியை வேதமாக அருளினான். (அது) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும், திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் மெய்சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக மிருதுவாகி விடுகின்றன*. (39:23)
\\ *அன்றாட வாழ்வில்* \\
திக்ரின் விரிவான வடிவம், நமது 24 மணி நேர வாழ்விலும் பிரதிபலிக்க வேண்டும். *அல்லாஹ்வின் கட்டளைகளை (ஹலால்) ஏற்று நடப்பதும், அவன் தடுத்தவைகளை (ஹராம்) விட்டும் விலகி இருப்பதும் அல்லாஹ்வின் நினைவின் நேரடி வெளிப்பாடாகும்*.
குறிப்பாக, ஒரு பாவம் செய்யத் தூண்டும் சூழல் உருவாகும்போது, *அல்லாஹ் என்னைப் பார்க்கிறான்*!என்ற உணர்வுடன் அந்தப் பாவத்திலிருந்து விலகி நிற்பது, மிகச் சிறந்த திக்ர்களில் ஒன்றாகும்.
ஆகவே, திக்ர் என்பது தொழுகை மற்றும் குர்ஆன் ஓதுதல் போன்ற குறிப்பிட்ட வணக்கங்களில் மட்டுமல்லாமல், நமது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதிலும் அடங்கியுள்ளது.
இவ்வாறாக, இறைநினைவை நமது செயல்கள் மூலம் மெய்ப்பிப்பதே அதன் முழுமையான நடைமுறை வடிவமாகும்.
நாம் தேடும் மன அமைதி, நிம்மதி, மனநிறைவு ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளன. அவற்றை அடைவதற்கான ஒரே வழி, நமது நாவாலும், உள்ளத்தாலும், செயல்களாலும் அவனை இடைவிடாது நினைவு கூர்வதுதான்.
எனவே, *என்னை நினைவுகூருங்கள்! நானும் உங்களை நினைவு கூர்வேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! என்னை மறுத்து விடாதீர்கள்*! (2:152)
அல்லாஹ்வின் நினைவில் நமது உள்ளங்களை ஈரமாக்குவோம்.
அதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் உண்மையான அமைதியைப் பெறுவோம்.
ஏகத்துவம்