*இஸ்லாத்தின் பார்வையில் ‘நைட் ஸ்டே’ (Night Stay) கலாச்சாரம்*
நம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், ‘Night Stay’ (இரவு தங்குதல்) என்ற பெயரில் ஒரு கலாச்சாரம் பரவி வருவதை கவனிக்க முடிகிறது.
வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ, நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து, *ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களுக்கோ, பண்ணை வீடுகளுக்கோ சென்று*, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அங்கு இரவு முழுவதும் தங்கி, கிரில் (Grill) போன்ற உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டு, அரட்டை அடித்து இரவைக் கழிப்பதை இது குறிக்கிறது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, நண்பர்களுடன் கூடி மகிழ்வதில் என்ன தவறு என்று தோன்றலாம். ஆனால், இந்தச் செயலை இஸ்லாமிய மார்க்கத்தின் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யும்போது, இதில் பல மார்க்கக் கடமை மீறல்களும் அடங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, இதில் கலந்துகொள்ளும் சிலர், *தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் தனியே தவிக்க விட்டுவிட்டு, தங்கள் சொந்த சந்தோஷத்திற்காக மட்டும் செல்வது, இந்தச் செயலின் தீவிரத்தன்மையை* மேலும் அதிகரிக்கிறது.
இந்த ‘நைட் ஸ்டே’ கலாச்சாரம் ஏன் மார்க்க ரீதியாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.
*முதன்மைக் கடமை, குடும்பப் பொறுப்பை அலட்சியப்படுத்துதல்*
இஸ்லாம், ஆணுக்கு குடும்பத் தலைவன் என்ற அந்தஸ்தையும், அதனோடு இணைந்த பாரிய பொறுப்புகளையும் வழங்கியுள்ளது. *ஒரு ஆண், தன் மனைவி, பிள்ளைகளின் பாதுகாவலன் ஆவான்*.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. *உங்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி (மறுமையில்) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்*… ஒரு ஆண், தன் குடும்பத்தின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். (நபிமொழி)
இரவு என்பது ஒரு குடும்பம் ஒன்றாகக் கூடி, மனைவி மக்களுடன் பேசி மகிழ்ந்து, அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம். இந்த நேரத்தில், ஒரு ஆண் தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் மனநலன், பாதுகாப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், *அவர்களை வீட்டில் தனியே விட்டுவிட்டு, தன் நண்பர்களுடன் கேளிக்கைக்காக இரவு முழுவதும் வெளியிடம் செல்வது, இஸ்லாம் வழங்கிய பொறுப்பாளர்* என்ற கடமைக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இது மனைவியின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.
*நேரத்தை வீணாக்குதல்*
“இரண்டு அருட்கொடைகள் விஷயத்தில் பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்தில் (நஷ்டத்தில்) உள்ளனர். (அவை:) ஆரோக்கியமும், ஓய்வு நேரமும் ஆகும்.” (நபிமொழி)
உலகிற்கோ, மார்க்கத்திற்கோ எந்தப் பயனுமற்ற, *வெறுமனே சாப்பிடுவதற்கும், அரட்டை அடிப்பதற்குமாக ஒரு முழு இரவையும் வீணடிப்பது, நேரத்தை வீணடிக்கும் செயலாகும்*.
இந்த நேரத்தில் ஒருவன் தன் குடும்பத்துடன் செலவழித்திருக்கலாம், அல்லது அல்லாஹ்வுக்கு விருப்பமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கலாம்.
*உடல் மற்றும் ஆரோக்கியத்தைப் பேணாமை*
இஸ்லாம் சமநிலையான மார்க்கம். அது வணக்க வழிபாடுகளுக்காகக்கூட உடலை வருத்திக் கொள்வதை அனுமதிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தியது போல:
*உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன. உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன.* (நபிமொழி)
அல்லாஹ் இரவைப் படைத்ததின் நோக்கத்தையே திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான்:
*அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.* (25:47)
இரவு என்பது அல்லாஹ் மனிதன் ஓய்வெடுப்பதற்காக ஏற்படுத்திய ஒரு அருட்கொடை. அல்லாஹ் வழங்கிய நோக்கத்திற்கு மாறாக, அந்த இரவை முழுமையாக வீணடித்து, உடலுக்கும் கண்களுக்கும் ஓய்வு கொடுக்காமல் இருப்பது, அல்லாஹ்வின் இந்த அருட்கொடைக்குச் செய்யும் அவமரியாதையாகும். இது மறுநாள் தொழுகையை மட்டுமல்ல, அன்றாட உலகக் கடமைகளையும் பாதிக்கும்.
*வணக்க வழிபாடுகளில் ஏற்படும் பாரிய அலட்சியம்*
இரவு முழுவதும் கண்விழித்து, கிரில், அரட்டை எனக் கழிப்பவர்களின் நிலை என்னவாகும்? *அதிகாலையில் எழுந்து ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவது இவர்களுக்குச் சாத்தியமாகுமா*?
நிச்சயமாக இல்லை. இரவு முழுவதும் வீண் அரட்டையில் கழிப்பவர்கள், அதிகாலை ஃபஜ்ர் தொழுகையை இழப்பது உறுதியாகிறது. ஃபஜ்ர் தொழுகையை வேண்டுமென்றே விடுவது, இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
இதனால்தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் *இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின் (உறங்காமல்) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள்*. (நபிமொழி)
(ஏனெனில், இஷாவுக்குப் பின் வீணாகப் பேசிக்கொண்டிருப்பது, அதிகாலை ஃபஜ்ர் தொழுகையை இழக்கச் செய்துவிடும் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.)
மேலும், ஃபஜ்ர் மற்றும் இஷா தொழுகைகளுக்கு வராமல் இருப்பது, நயவஞ்சகர்களின் (முனாஃபிக்குகளின்) அடையாளமாக நபி (ஸல்) அவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில மணிநேர சந்தோஷத்திற்காக, அல்லாஹ்வின் கட்டாயக் கடமையான ஃபஜ்ர் தொழுகையை இழப்பது ஒரு முஃமினுக்கு அழகல்ல.
*வீண் பேச்சும், தேவையற்ற செயல்களும்*
இரவு நேரங்களில் நண்பர்கள் ஒன்றாகக் கூடும்போது, அங்கு நடக்கும் பெரும்பாலான பேச்சுகள் எப்படிப்பட்டவை? *அவை பெரும்பாலும் வீண் அரட்டைகளாகவும் , புறம், கோள் சொல்லுதல் போன்ற பாவமான பேச்சுகளாகவும் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது*.
அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் பண்பாகக் குறிப்பிடும்போது, அவர்கள் *வீணான (செயல்கள், பேச்சுகள்)வற்றிலிருந்து விலகி இருப்பார்கள்* (23:3) என்று கூறுகிறான்.
ஆனால், இந்த ‘நைட் ஸ்டே’ அமர்வுகளின் நோக்கமே, இரவு முழுவதும் பேசிப் பொழுதைக் கழிப்பதுதான். இது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க முடியாது.
நண்பர்களுடன் கூடி மகிழ்வதையோ, நல்ல உணவு உண்பதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால், அதற்கு ஒரு வரம்பு இருக்கிறது.
ஒரு முஸ்லிமின் மகிழ்ச்சி, அவனது மார்க்கக் கடமைகளையோ, குடும்பப் பொறுப்புகளையோ ஒருபோதும் பாதிக்கக்கூடாது.
‘நைட் ஸ்டே’ என்ற பெயரில் நடக்கும் இந்தச் செயல்கள், குடும்பப் பொறுப்பை அலட்சியப்படுத்துதல், நேரத்தை வீணாக்குதல், ஃபஜ்ர் தொழுகையைப் பாழாக்குதல், வீண் பேச்சுகளில் ஈடுபடுதல் மற்றும் உடலுக்குக் கேடு விளைவித்தல் போன்ற பல மார்க்க மீறல்களுக்கு வாசலாக அமைகிறது.
உண்மையான ஆண்மை என்பது, மனைவி மக்களைத் தனியே தவிக்க விட்டுவிட்டு, நண்பர்களுடன் இரவைக் கழிப்பதில் இல்லை. மாறாக, தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து, தன் நேரத்தை அல்லாஹ்வுக்குப் பிடித்தமான வழியில் செலவழிப்பதில்தான் உள்ளது.
எனவே, ஆண்கள், இத்தகைய தேவையற்ற கலாச்சாரங்களைப் புறக்கணித்து, தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, மறுமையில் வெற்றிபெற முயற்சிப்பதே புத்திசாலித்தனம்.
மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், மார்க்கத்தின் அடிப்படையான *தவ்ஹீதை (ஏகத்துவத்தை)ப் பற்றிப் பேசக்கூடிய இளைஞர்கள் கூட, இந்தத் தேவையற்ற செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுவதுதான்*.
இது அவர்களின் சொல் மற்றும் செயலுக்கு இடையேயான முரண்பாட்டைக் காட்டுகிறது.
الله اعلم