குர்ஆன் கூறும் *அழிந்து போன சமூகம்*
______________________________
இக்குர்ஆனில் உங்களுக்கு அறிவுரையும், படிப்பினையும், முன்னுதாரணங்களும் இருக்கிறது என்று அல்லாஹ் பல நிலைகளில் மனிதனுக்கு அறிவுறுத்துகிறான்.

உங்களிடம் தெளிவான வசனங்களையும், *உங்களுக்கு முன் சென்றோரின் முன்னுதாரணத்தையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் அருளியுள்ளோம்.*

[அல்குர்ஆன் 24:34]

அதிகமான இடங்களில் *எதற்காக அல்லாஹ் இதை சொல்லிக் காட்டுகிறான்?* என்று என்றேனும் *நாம் சிந்தித்ததுண்டா?* இதைக் கொண்டு மனிதன் தன் வாழ்வில் படிப்பினை பெற வேண்டும், *அறிவுரையை ஏற்று திருந்தி வாழ வேண்டும், தன்னை அஞ்ச வேண்டும், அவனுடைய கட்டளையை பேணி நடக்க வேண்டும்* என்பதற்காகவே அல்லாஹ் அருளியிருக்கிறான்.

*அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.* (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு *நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.*

[அல்குர்ஆன் 12:111]

ஆனால், நாமோ இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு *மனோ இச்சையை பின்பற்றி உலக வாழ்க்கை வசதிகளில் மூழ்கி அதிலேயே இன்பம் காண்கிறோம். இதுவே நிரந்தரமானது, சிறந்தது, பயனளிக்கக் கூடியது, பெருமை கொள்ள தகுதியானது* என்றும் எண்ணிக்கொண்டு வாழ்கிறோம்.

இது போன்ற மனப்போக்கில் இருந்து விலகி எதார்த்தத்தை புரிந்து வாழ வேண்டும் என்பதற்காகவே *முன் சென்றவர்களுடைய வரலாறுகளை கூறி அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்.*

அவர்கள் *பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டாமா?*

[அல்குர்ஆன் 30:9]

*சிந்திக்க வேண்டாமா?* என்று அல்லாஹ் கேட்கிறான். ஆனால் *நம் சிந்தனையோ இவ்வுலகம் சார்ந்ததாகவே இருக்கிறது.*

* எப்படி முன்னேறுவது?
* பணத்தை எதில் முதலீடு செய்வது?
* எங்கே இடம் வாங்குவது?
* எப்போது? எப்படி வீடு கட்டுவது?
* பிள்ளைகளை எங்கே படிக்க வைப்பது?
* என்ன படிக்க வைப்பது?
* அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறோம்?
* அவர்களுக்கு எப்படி திருமணம் செய்யப் போகிறோம்? இப்படி நான், என் மனைவி, என் பிள்ளைகள் என்று நம்முடைய முயற்சிகள் அனைத்தும் அவர்களை சுற்றியே இருக்கிறது.

*அவர்களுக்கு முன் சென்றோரும் இதையே கூறினர். அவர்கள் உழைத்தது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.*

[அல்குர்ஆன் 39:50]

அல்லாஹ் பல உதாரணங்களை கூறி நம்மை எச்சரிக்கிறான் என்றால் அதில் படிப்பினைகள் அடங்கி இருக்கும். *அதையெல்லாம் சிந்திக்க நேரமில்லாமல் நாம் கடினமாக உழைத்தால் தான் இவ்வுலகில் உயர்ந்த இடத்தையும், அந்தஸ்தையும், அதிகாரத்தையும் அடைய முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.*

அதற்காக *நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி* உலக வாழ்க்கையின் இன்பங்களுக்காக, பெருமை பாராட்டுவதற்காக *மறுமையை மறந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.*

உங்களுக்கு முன் சென்றோரைப் போல் (நீங்களும் இருக்கிறீர்கள்.) *அவர்கள் உங்களை விட வலிமை மிக்கோராகவும், அதிக மக்கட்செல்வமும் பொருட்செல்வமும் உடையோராகவும் இருந்தனர்.*

[அல்குர்ஆன் 9:69]

நம்மை விட தோற்றத்தில் அதிக வலிமையும், மக்கள் செல்வத்திலும், பொருள் செல்வத்திலும், பிரமாண்டமான கட்டிடங்களை கட்டி பெருமையடிப்பதிலும், அதிகமான நிலங்களும், விளைச்சல்களும் பெற்று காலத்தை கழித்த மக்கள் *அதை ஆள்வதற்கு இன்று எவரும் இல்லை என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா?* மறுமையை மறந்தவர்கள் இவ்வுலகில் எதையும் சாதிக்கவும் இல்லை. *சேர்த்து வைத்ததில் அவர்கள் நிலைத்திடவும் இல்லை. அவர்களை அல்லாஹ் பழங்கதைகளாக்கினான்.* இவை அனைத்தையும் அறிந்தும் நாம் திருந்தாமல் வாழ்கிறோம்.

தங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை அனுபவித்தனர். *உங்களுக்கு முன் சென்றோர் தமது பாக்கியத்தை அனுபவித்தது போல் உங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை நீங்கள் அனுபவித்தீர்கள். (வீண் விவாதங்களில்) மூழ்கியோரைப் போல் நீங்களும் மூழ்கி விட்டீர்கள். இவர்களது செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விட்டன.* இவர்களே நட்டமடைந்தவர்கள்.

[அல்குர்ஆன் 9:69]

ஆகவே எவ்வளவு தான் அருட்கொடைகளை நாம் பெற்றாலும் *அல்லாஹ்வின் கருணை இல்லாமல், அவனுடைய கட்டளைகளை பேணி வாழாமல், அவனுடைய வசனங்களை அலட்சியப்படுத்தி, கேலிக்கையில் வாழும் மனிதர்களின் நிலை கடைசியில் அழிவில் தான் முடியும்* என்பதை உணர்த்துகிறது.

பூமியில் அவர்கள் பயணித்து தங்களுக்கு முன் சென்றோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா? *அவர்களை அல்லாஹ் அடியோடு அழித்து விட்டான்.* (அவனை) மறுப்போருக்கு அது போன்றவை தான் உண்டு.

[அல்குர்ஆன் 47:10]

இவ்வசனங்களை எல்லாம் படித்த பிறகும் அதை அலட்சியப் போக்கோடு கையாளக்கூடிய நமக்கு *அல்லாஹ்வின் வேதனையை எதிர்கொள்ள தாயாராக இருக்கிறோமா? அதற்கான ஆற்றலும் தகுதியும் நம்மிடம் இருக்கிறதா?*

வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது *உமது இறைவனின் கட்டளை வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அவர்களுக்கு முன் சென்றோரும் இவ்வாறே செய்தனர்.* அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தனர்.

[அல்குர்ஆன் 16:33]

அவர்கள் செய்தவற்றின் காரணமாக அல்லாஹ்வுடைய தண்டனையை அனுபவித்தனர். *அவர்களை தண்டித்ததைப் போல் நம்மை தண்டிக்கபட வேண்டும் என்பதையா நாம் எதிர்பார்கிறோம்?*

அநீதி இழைத்தோருக்கு *அவர்களின் முன் சென்ற சகாக்களின் தண்டனையைப் போல் தண்டனை உள்ளது*. எனவே அவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.

[அல்குர்ஆன் 51:59]

ஏதேனும் கடுமையான *சோதனைகளை மனிதன் சந்திக்கும் போதெல்லாம் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறக் கூடியவர்களாக, தான தர்மம் செய்யக்கூடியவர்களாக, நின்று வணங்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.* ஆனால் அதை விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாத்த பிறகு *அவனை அலட்சியப்படுத்துகிறோம், அவனுக்கு நன்றி செலுத்த மறக்கிறோம்.*

மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் “எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது” எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! *அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.*

[அல்குர்ஆன் 39:49]

எப்படி பல சமூகங்கள் அல்லாஹ்வை மறந்து, கேலிக்கையில் வாழ்தார்களோ அதுபோல் நாமும் வாழ விரும்பினால் அதனுடைய பலனை விரைவில் அனுபவிப்போம் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்.

*அவர்கள் செய்த தீவினைகள் அவர்களைப் பிடித்தன. இவர்கள் செய்த தீவினைகள், இவர்களில் அநீதி இழைத்தோரைப் பிடிக்கும்.* இவர்கள் வெல்வோராக இல்லை.

[அல்குர்ஆன் 39:51]

*இவ்வுலகம் தான் எல்லாம்* என்று எண்ணி நாட்களை கடக்கும் நமக்கு இவ்வசனங்கள் அனைத்தும் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது. *குர்ஆனை படித்து விளங்கி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடாமல், திருந்தாமல் வாழ்க்கையை கழிப்பவர்களே உங்களுக்கு முன் சென்றோர் அனுபவித்ததை போன்றே நீங்களும் அனுபவிக்க நேரிடும்* என்பதை அல்லாஹ் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறான்.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக…ஆமீன்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *