*மாய உலகில் மயங்காதே! மறுமையை மறவாதே!* – குர்ஆன் தரும் படிப்பினை
அல்குர்ஆன் 30:7
> “*இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை மட்டுமே அவர்கள் அறிகிறார்கள்*. ஆனால், அவர்கள் *மறுமையைப் பற்றி முற்றிலும் அலட்சியமாக இருக்கிறார்கள்*.”
விளக்கம்:
மேற்கண்ட வசனத்தில், பெரும்பாலான மனிதர்கள் இவ்வுலக வாழ்க்கையின் வெளித்தோற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தி, தங்களின் நிரந்தர வீடான மறுமையைப் பற்றிச் சிந்திக்காமல் அலட்சியமாக வாழ்கின்றனர் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
மனிதர்கள் இவ்வுலக இன்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து,
மேலும் மேலும் பொருளாதாரம் ஈட்டுதல், செல்வத்தைப் பெருக்குதல், ஆட்சி அதிகாரத்தை அடைய முயற்சித்தல், தற்காலிக சிற்றின்பங்களில் மூழ்கியிருத்தல் போன்ற காரியங்களிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள்.
இவ்வாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள், இவ்வுலக விஷயங்களில் தங்களை மிக அறிவாளிகளாகக் காட்டிக்கொள்கின்றனர்.
அவர்கள் இவ்வுலகக் கவர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், மறுமைக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்துவிடுகின்றனர்; அதில் பெரும் அலட்சியம் காட்டுகின்றனர்.
எந்த அளவிற்கு என்றால், உலக இன்பங்களிலும் அதன் கவர்ச்சியிலும் மதிமயங்கியவர்களாகவே வாழ்கின்றனர்.
இதனால்தான், பல வசனங்களில் அல்லாஹ் மனிதர்களை எச்சரிக்கிறான்:
> *விளையாட்டு, வீண்வேடிக்கை, அலங்காரம், உங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளுதல், செல்வத்தையும் பிள்ளைகளையும் அதிகப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை என்பதை அறிந்து கொள்ளுங்கள்*.”
> (அல்குர்ஆன் 57:20)
> “*பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியிலான குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது*. இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் தற்காலிக வசதிகளே. *அல்லாஹ்விடமே அழகான தங்குமிடம் உள்ளது*.”
> (அல்குர்ஆன் 3:14)
யார் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை மட்டுமே விரும்பி அதிலேயே மூழ்கி இருக்கிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லாமல், இவ்வுலகிலேயே அவர்களின் செயல்களுக்கான முழுமையான பலன்களையும் அல்லாஹ் கொடுத்துவிடுவதாகக் கூறுகிறான்.
> “*யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நாடுகிறார்களோ, அவர்களுடைய செயல்களுக்குரிய பலனை இவ்வுலகிலேயே நாம் முழுமையாக வழங்கிவிடுவோம்*.
அதில் அவர்கள் எந்தக் குறைவும் செய்யப்பட மாட்டார்கள். அத்தகையோருக்கு *மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. இவ்வுலகில் அவர்கள் செய்தவை அனைத்தும் அங்கே அழிந்துவிடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணானவையே*.”
> (அல்குர்ஆன் 11:15, 16)
நிரந்தரமற்ற இந்த அற்ப உலக இன்பங்களுக்காக, அல்லாஹ்விடம் கிடைக்கும் நிலையான பாக்கியங்களை அலட்சியம் செய்துவிட வேண்டாம்.
> “*செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சிகளே. ஆனால், நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கைம்மாறில் சிறந்ததும், நம்பிக்கையில் மேலானதுமாகும்*.”
> (அல்குர்ஆன் 18:46)
இவ்வுலகில் அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் நம்மை வழிதவறச் செய்யக்கூடிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் எனப் பலர் நம்மோடு பயணிக்கக்கூடும். அவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
> “(நபியே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய *இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் (மறுமையில் கிடைப்பது) சிறந்ததும், நிலையானதுமாகும்*.”
> (அல்குர்ஆன் 20:131)
> “(நபியே!) தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும் மாலையிலும் அவனிடம் பிரார்த்தனை செய்பவர்களுடன் உம்மைப் பொறுமையாக வைத்துக் கொள்வீராக! *இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்*! எவனுடைய உள்ளத்தை நம்மை நினைப்பதை விட்டும் நாம் திருப்பிவிட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர். அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறியதாக உள்ளது.”
> (அல்குர்ஆன் 18:28)
எனவே, யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி வாழ்கிறார்களோ, அவர்களோடு உங்கள் வாழ்க்கை பயணத்தைத் தொடருங்கள்.
யார் மறுமையை மறக்கடிக்கச் செய்கிறார்களோ, அவர்களிடமிருந்து விலகி இருங்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் நல்லடியார்களுடன் இணைத்து வைப்பானாக! ஆமீன்.