*102 – சூரா அத்தகாஸுர் (பொருளைப் பெருக்குவதில் ஏற்படும் பேராசை ) தஃப்ஸீர்*
——————————————
*அறிமுகம்:*
திருக்குர்ஆனின் 102வது அத்தியாயமான சூரா அத்தகாஸுர்’ல் *மனிதர்களிடம் உள்ள உலக ஆசையும், செல்வத்தின் மீதான பேராசையும் அவனது மரணத்தையும், மறுமை வாழ்வையும் மறக்கச் செய்கிறது.* அல்லாஹ்வை மறந்து நீங்கள் தேடி- ஓடிய இவ்வுலக அருட்கொடைகள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள் என்பதை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
——————————————
*சூராவின் விளக்கம்:*
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
* மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.
* அவ்வாறல்ல, விரைவில் (அதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
* பின்னரும் அவ்வாறல்ல, விரைவில் (அதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
* அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.
* பின்னர், நீங்கள் அதை உறுதியான கண்ணால் காண்பீர்கள்.
* பின்னர் அந்நாளில், (இவ்வுலகில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
——————————————
*வசனம் 1: மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.*
இவ்வசனம், மனிதனின் பலவீனத்தை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. *செல்வம், பிள்ளைகள், அதிகாரம், புகழ் என உலக ஆதாயங்களைத் தேடுவதிலும், அதில் மற்றவர்களை விட மிஞ்சிவிட வேண்டும் என்ற போட்டியிலும் மனிதன் மூழ்கிவிடுகிறான்.* இந்த மோகம், அவனைப் படைத்த *இறைவனை நினைவு கூர்வதிலிருந்தும், அவனது கடமைகளை நிறைவேற்றுவதை விட்டும்* திருப்பிவிடுகிறது.
“ஆதமின் மகனுக்கு *தங்கத்தால் நிறைந்த ஒரு நீரோடை இருந்தால், அது போன்ற மற்றொன்றை அவன் விரும்புவான்…”* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எவ்வளவு தான் மனிதனுக்கு கொடுக்கப்பட்டாலும் அவனது உள்ளம் திருப்தியடைவதில்லை. மாறாக,
ஆதமின் மகன் கூறுகிறான்: *’என் செல்வம், என் செல்வம் என்று.’ ஆனால் நீ உண்டு களித்ததும், அல்லது நீ உடுத்தி கிழித்ததும், அல்லது நீ தர்மம் செய்து செலவழித்ததையும் தவிர உன் செல்வத்திலிருந்து உனக்கு (பயனுள்ள) எதுவும் கிடைக்குமா?”* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
——————————————
*வசனம் 2: நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.*
இந்த உலகத்தின் மீதான ஆசை என்பது *மனிதன் மரணிக்கும் வரை நீடிக்கிறது. அவன் கப்ரை அடையும் போதுதான், அவனது பேராசையின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது.* அப்போதுதான் அவன் *எதை நோக்கி ஓடிக்கொண்டிருந்தானோ, அது எவ்வளவு அற்பமானது* என்பதை உணர்கிறான். ஆனால், அந்த நேரத்தில் உணர்ந்து எந்தப் பயனும் இல்லை.
*மனிதனின் வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிரவேறெதுவும் நிரப்பாது.* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
——————————————
*வசனம் 3: அவ்வாறல்ல, விரைவில் (அதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.*
மனிதன் நினைப்பது போல், இந்த உலக வாழ்க்கைதான் எல்லாம் என்பதல்ல. *அவனது செயல்களின் விளைவுகளை மரண தருவாயில் நிச்சயமாக அவன் அறிந்துகொள்வான்.*
——————————————
*வசனம் 4: பின்னரும், அவ்வாறல்ல, விரைவில் (அதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.*
மீண்டும் அதே எச்சரிக்கையை அல்லாஹ் தொடர்ந்து குறிப்பிடுகிறான் என்றால் இது மறுமை வாழ்வின் தீவிரத்தை உணர்த்துகிறது. *முதல் எச்சரிக்கை மரணத்தின் போதும், இரண்டாவது எச்சரிக்கை மறுமையில் நரகத்தைக் காணும் போதும்* மனிதன் உண்மையை அறிந்து கொள்வான்.
——————————————
*வசனங்கள் 5, 6, 7: அவ்வாறல்ல, உறுதியான அறிவைக் கொண்டு நீங்கள் அறிந்திருப்பீர்களாயின் நரகத்தைக் கண்முன்னே காண்பீர்கள்.*
இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை நீங்கள் உணர்ந்திருந்தால், *இந்த அற்ப உலகப் பொருட்களின் பின்னால் உங்கள் வாழ்நாளை வீணடித்திருக்க மாட்டீர்கள்.*
பணத்தை தேடி ஓடிக் கொண்டிருந்த நமக்கு *அல்லாஹ்வின் வசனங்களோ, கட்டளைகளோ, அறிவுரைகளோ, எச்சரிக்கைகளோ எதுவுமே காதில் விழுவதில்லை.* அதன் விளைவாக, மறுமையில் *நரக நெருப்பை தவிர வேறெதையும் நீங்கள் அடையப் போவதில்லை* என்பதை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அப்போது தான் உணர்வோம் *இவ்வளவு காலம் உழைத்ததெல்லாம் வீணாகிவிட்டதே* என்று.
“இறந்தவரைப் பின்தொடர்ந்து மூன்று விஷயங்கள் செல்கின்றன. இரண்டு திரும்பி விடுகின்றன, ஒன்று அவருடன் தங்கிவிடுகிறது: *அவரது குடும்பத்தினர், அவரது செல்வம், அவரது செயல்கள் அவரைப் பின்தொடர்கின்றன. அவரது குடும்பத்தினரும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரது செயல்கள் மட்டுமே தங்கிவிடுகின்றன.”* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
——————————————
*வசனம் 8: பின்னர் அந்நாளில், (இவ்வுலகில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.*
இறுதியாக, இவ்வுலகில் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு அருட்கொடைகள் குறித்தும் மறுமை நாளில் விசாரிக்கப்படுவார்கள். குடும்பம், பொறுப்புகள், ஆரோக்கியம், செல்வம், நேரம், உணவு, நீர் என அனைத்தும் இதில் அடங்கும். அந்த அருட்கொடைகளை அல்லாஹ்வின் வழியில் செலவழித்தார்களா அல்லது பாவமான வழியில் பயன்படுத்தினார்களா என்று கேள்வி கேட்கப்படும்.
“அல்லாஹ்வின் தூதரே! நாம் அப்படி எந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படப்போகிறோம்? *(நம்மிடம் இருப்பது) இந்த இரு கறுப்புகளான பேரீத்தம்பழமும், தண்ணீரும் மட்டும்தானே* என்று ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இவ்விரண்டும் பெரும் அருட்கொடைகள் தான் என்பதால் ஆம்) *“இவற்றைப் பற்றியும் நம்மிடம் விசாரணை உள்ளது”* என்று கூறினார்கள்.
ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கே இந்திலை என்றால், எல்லா அருட்கொடைகளையும் தாராலமாக பெற்ற நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தித்து உணர்வோம்.
——————————————
*முடிவுரை:*
இந்த அத்தியாயத்தின் மூலம் அல்லாஹ் நம்முடைய வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறான். *நிலையற்ற இவ்வுலகத்திற்காக, நிலையான மறுமையை இழந்துவிடக் கூடாது* என்ற வலுவான செய்தியை அல்லாஹ் எச்சரிக்கிறான்.