இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

1. திருமணம்

இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் 2522., 2524

2.தாம்பத்தியம்

மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக் கூடாது.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன் 2:197)

இந்த வசனம், இஹ்ராம் கட்டியவர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் கூறுவதுடன், வீணான விவாதங்களில், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் தடை செய்கின்றது.

3. வேட்டையாடுதல்

இஹ்ராம் கட்டியவர் வேட்டையாடக் கூடாது; தனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது. நம்பிக்கை கொண்டோரே! தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்? என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 5:94)

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

(அல்குர்ஆன் 5:95)

உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 5:96)

வேட்டையாடுவது இவ்வசனங்கள் மூலம் தடை செய்யப்படுகின்றது. கடல் பிராணிகளை வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்கப்படுகின்றது.

வேட்டையாடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அறுப்பது வேட்டை யாடுவதில் அடங்காது. எவருக்கும் உரிமையில்லாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் மான், முயல் போன்றவற்றைக் கொல்வதே வேட்டை யாடுவதில் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடல் வாழ் உயிரினங்கள்,

ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகள் தவிர மற்றவற்றை யாரேனும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடி விட்டால் அதற்கு அவர் பரிகாரம் செய்ய வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் எதையேனும் அவர் பலியிட வேண்டும். ஒருவர் வேட்டையாடிய பிராணியின் அளவு, அதன் தன்மை ஆகியவற்றை நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும்;

அந்த முடிவுப் படி நடந்து கொள்ள வேண்டும். மான் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக ஆட்டையும், முயல் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக நான்கு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டியையும் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து கூறும் முடிவே இதில் இறுதியானதாகும். இதற்கு வசதியில்லாதவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது நோன்பு நோற்க வேண்டும். மேற்கண்ட வசனங்களிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹுதைபிய்யா சமயத்தில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். எனது தோழர்கள் இஹ்ராம் கட்டினார்கள். நான் இஹ்ராம் கட்டவில்லை. அப்போது ஒரு (காட்டுக்) கழுதையை நான் கண்டு அதைத் தாக்கி வேட்டையாடினேன். நான் இஹ்ராம் கட்டவில்லை என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களை சாப்பிடச் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 1821, 1822, 1823, 2570, 2914, 5407, 491, 5492

இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணிகளை உண்பது பொதுவாகத் தடுக்கப்படவில்லை. அவர் வேட்டையாடுவதும், அவருக்காகவே வேட்டையாடப்படுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. அவரே வேட்டையாடினாலோ, அவருக்காகவே வேட்டையாடப் பட்டிருந்தாலோ அதை அவர் உண்ணக் கூடாது என்பது இந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது. இதில் சில பிராணிகள் விலக்குப் பெறுகின்றன.

வெறி நாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1828, 3315

4. தலையை மறைத்தல்

இஹ்ராம் கட்டிய ஆண்கள் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் தலையை மறைக்கக் கூடாது. ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை தலை திறந்தே இருக்க வேண்டும். ஆயினும் தலையில் வெயில் படாத விதத்தில் குடை போன்றவற்ல் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியாகூறியவராக எழுப்பப்படுவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851

மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.

நாங்கள் கடைசி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். அப்போது பிலால் (ரலி), உஸாமா (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார். மற்றொருவர் அவர்கள் மீது வெயில் படாமல் தனது ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.

அறிவிப்பவர்: உம்முல் ஹுஸைன் (ரலி)

நூல்: முஸ்லிம் 2287

வெயில் படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

5. நறுமணம் பூசக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை நறுமணப் பொருட்களை உடலிலோ, ஆடையிலோ, தலையிலோ பூசக் கூடாது. இஹ்ராம் கட்டியவர் வாகனத்திலிருந்து விழுந்து மரணித்ததாகக் கூறப்படும் ஹதீஸில் அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை நாம் அறியலாம்.

6. மயிர்களை நீக்கக் கூடாது

இஹ்ராம் கட்டியவர் ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை மயிர்களை நீக்கக் கூடாது; நகங்களை வெட்டக் கூடாது; தவிர்க்க இயலாத நேரத்தில் வெட்டிக் கொண்டால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உன் தலையில் உள்ள பேன்கள்உனக்குத் தொல்லை தருகின்றனவா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவுபேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக! என்றார்கள்.

அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703

உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 3653, 3654

குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாதுஎன்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.

மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா என்ற இடத்தையும்,

ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபா என்ற இடத்தையும்,

நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில் என்ற இடத்தையும்,

யமன்வாசிகளுக்கு யலம்லம் (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.

இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.

இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம்வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும்,

அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். துல்ஹுலைஃபா என்ற இடம் மக்காவுக்குத் தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜுஹ்ஃபா என்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கர்ன் அல்மனாஸில்என்பது மக்காவுக்குக் கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவிலிருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது. யலம்லம்என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இஹ்ராம் கட்ட வேண்டிய காலம் துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன என்றாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டலாம். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.

(அல்குர்ஆன் 2:197)

ஹஜ் ஒரு மாதம் என்று இறைவன் கூறாமல் சில மாதங்கள் என்று பன்மையாகக் கூறுகிறான். ஹஜ்ஜின் மாதங்கள் என்பது ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர்.

(புகாரி)

எனவே ஷவ்வால் மாதத்திலோ, துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும் ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்து தான் துவங்குவதால், அது வரை தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிட வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *