பரக்கத் (மறைமுக பேரருள்) என்ற அதிசயம்
பரக்கத் என்ற அதிசயத்தைப் பற்றியும், அதைப் பெறுவதற்கான வழிகளையும் அதற்கான பிரார்த்தனைகளையும் குறிப்பிட்டுள்ளோம்.
பரக்கத் என்பது அதிகம் இருப்பது என்று அர்த்தமல்ல. குறைவாக இருந்தாலும் அதன் பயன் நிறைவாக இருப்பதற்குப் பெயர் தான் பரக்கத். குறைவாக வருமானம் கிடைத்தாலும் வாழ்க்கையின் எல்லா தேவைகளும் அதன் மூலம் பூர்த்தியானால் அது வருமானத்தில் பரக்கத். குறைந்த உணவு அது பல பேருக்குப் போதுமானதாக அமைந்து விட்டால் அது உணவின் பரக்கத்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரக்கத்தை வேண்டி பல இடங்களில் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம், அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபி (ஸல்) அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து “எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே அவர்களுக்கு வழங்கியவற்றில் அவர்களுக்கு பரக்கத் செய்வாயாக. மேலும் அவர்களை மன்னித்து அவர்களுக்கு அருள்புரிவாயாக” என்று கேட்டர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (ரலி); (முஸ்லிம்: 3805)
“பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று சொன்னதும், நபி (ஸல்) அவர்கள் அதிகம் தருவாயாக என்று கேட்கவில்லை. மாறாக, அவருக்கு நீ எதைத் தந்தாயோ அதில் பரக்கத்தைத் தருவாயாக என்று தான் கேட்டார்கள். காரணம் அதிகம் தந்தால் கூட சில வேளை அதுவும் சோதனையாகி விடும் என்பதால் இப்படிக் கேட்டார்கள். மேலும் அவருக்கு மறுமை வாழ்விற்காகவும் கேட்டார்கள். இதை ஒருவன் நம்பினால் அவன் திருட மாட்டான். மோசடி செய்ய மாட்டான். உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வான்.
மதீனா நகரத்திற்காகவும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
“அல்லாஹ்வே மக்காவிற்கு எவ்வளவு பரக்கத் செய்தாயோ அதை விட இரண்டு மடங்கு மதீனாவிற்கு பரக்கத் செய்வாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி: 1885)
ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற போது மிகவும் துன்பப்பட்டார்கள். எந்த அளவிற்கென்றால் உண்ணுவதற்குக் கூட உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். அவர்கள் மட்டுமின்றி அங்கே வாழ்ந்த மதீனாவாசிகளும் கஷ்டப்பட்டார்கள். அந்த அளவிற்கு வறுமை! அப்படிப்பட்ட வறுமை நீங்க பிரார்த்தனை செய்தார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு செல்வம் கொழிக்க ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் அவர்களுக்குப் போக மீதத்தை மிச்சப்படுத்தும் அளவிற்கு செல்வம் வந்தது.
அதே போல அவர்கள் பயன்படுத்துகின்ற அளவுப் பாத்திரத்திற்காகவும் பிரார்த்தனை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ அருள்வளம் (பரக்கத்) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களது ஸாஉ, முத்து ஆகியவற்றில் நீ அருள்வளத்தை அளிப்பாயாக!
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); (புகாரி: 2130)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரக்கத்திற்காகத் தான் அதிகம் பிரார்த்திருக்கிறார்களே தவிர, அதிகமாகத் தருவாயாக என்று கேட்டதில்லை. இதை ஒருவன் சிந்திப்பான் என்றால் அவன் பொருளாதாரத்தின் மீது பேராசை கொள்ள மாட்டான்.
அதே போன்று, மனிதனுக்கு மிக முக்கியமான காரியம் திருமணம். அந்தத் திருமணத்தில் கூட பரக்கத்தைத் தான் கேட்டுள்ளார்கள். அதைத் தான் இன்று மணமகனை வாழ்த்தும் பிரார்த்தனையாக நாமும் கேட்கிறோம். இவையெல்லாம் பரக்கத்திற்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனைகள்.
மனிதனுக்கு மிக அவசியம் பரக்கத்தாகும். அது வந்து விட்டால் மற்றதெல்லாம் அவனுக்கு லேசாகி விடும்.
அதுபோல பரக்கத்தை அடைவதற்கான தகுதியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் அதை அடைய முடியாது. மாறாக சில வழிகளைக் காட்டித் தந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இருக்க வேண்டும்.