வியாபாரத்தில் நேர்மை
அனைத்து அருட்கொடை குறித்தும் மறுமையில் கேள்வி கேட்கப்படும். இதன்படி நாம் பொருளாதாரத்தைச் சேகரித்த மற்றும் செலவளித்த விதம் குறித்தும் விசாரணை இருக்கிறது. எனவே மறுமையை நம்பியவர்கள் வட்டி. பதுக்கல், லஞ்சம், களவு என்று மார்க்கம் தடுத்திருக்கும் எவ்வழியிலும் செல்வத்தை ஒருபோதும் தேடிச் சென்று விடக் கூடாது.
அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது
அல்குர்ஆன் 7:85
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:278
உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்!
அல்குர்ஆன் 2:188
மறுமையை நம்பும் மக்கள் உலகத்தையே மறந்து விட வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. உலக இன்பத்திற்கான பொருட்களை, பொருளாதாரத்தைத் திரட்டிக் கொள்வதற்கு மார்க்கம் தடை ஏதும் விதிக்கவில்லை. மாறாக, மார்க்கத்தை மதிக்காமல் உலக மோகத்தில் மூழ்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கின்றது, இஸ்லாம்.
மறுமையை நம்புகின்ற நாம் மார்க்கம் அனுமதி அளிக்கும் வகையில் தான் பொருளீட்ட வேண்டும்.
இந்த இம்மை வாழ்க்கை அற்பமானது; அந்த மறுமை வாழ்க்கை அற்புதமானது. மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் போதுதான் நாம் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் சரியாக இருக்க இயலும்.
மறுமையை நம்புவதாக வெறுமனே வாயளவில் சொல்லாமல் உளப்பூர்வமாக முன்மொழிய வேண்டும். அடுத்தபடியாக, அந்த நம்பிக்கையை உண்மைப்படுத்தும் வண்ணம் வாழ வேண்டும். இதனை மனதில் கொண்டு நன்முறையில் வாழ்ந்து வெற்றி பெறுவோமாக!