ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் விதிகள் ஹதீஸ் கலையில் உண்டா ? (03)
முத்ரஜ்
ஹதீஸ்கலையில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது.
அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர்.
இது போன்ற இடங்களில் இந்த வார்த்தை, யாரோ ஒரு அறிவிப்பாளரால் அறிந்தோ, அறியாமலோ நுழைக்கப்பட்டது என்று கண்டுப்பிடிப்பதற்குப் பல வழிமுறைகளை ஹதீஸ்கலை மேதைகளான இமாம்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதில் ஒரு முறைதான் “நபி(ஸல்) அவர்கள் இந்த வாசகத்தைக் கூறுவது அசாத்தியமானது என்று முடிவெடுப்பது”.
(முத்ரஜை அறியும் வழிமுறைகளில் ஒன்று) நபியவர்களுடன் அதை இணைப்பது அசாத்தியமாவதாகும்.
(நுகத் அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ் பாகம் 2 / பக்கம் 812)
அதாவது, நபி (ஸல்) ஒருபோதும் இதுபோன்ற வார்த்தையைக் கூறியிருக்க மாட்டார்கள் என்று உளப்பூர்வமாக முடிவெடுப்பதாகும்.
முத்ரஜிற்கு உதாரணம்
“அடிமைக்கு இரண்டு கூலிகள் இருக்கிறது. என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஹதீஸ் துறை இமாம்கள் எடுத்து சொல்லி முத்ரஜிற்கு உதரணமாக குறிப்பிட்டு விட்டு
“என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்ற கூற்று அபூஹுரைராவுடைய கூற்றாகும்.
நபியவர்கள் இதைக் கூறுவதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால், நபியவர்கள் அடிமைத்தனத்தை ஆசைப்படவும் மாட்டாகள். மேலும் நபியவர்கள் தன்னுடைய தாய்க்குப் பணிவிடை செய்வதற்கு நபியவர்களின் தாயார் உயிரோடிருக்கவுமில்லை என்று கூறி மேற்கண்ட வாசகத்தை ஹதீஸ்கலை அறிஞர்கள் “முத்ரஜ்” என்று குறிப்பிடுகிறார்கள்.
(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 132)
இதே வழிமுறையைத் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்யும் போது அதனுடைய முரண்பாட்டை விளக்கிவிட்டு, ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் வஹீ செய்திக்கு முரணாகப் பேசவே மாட்டார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறோம்.
இப்படிக் கூறுவதை ஹதீஸ் மறுப்பு கொள்கை என்று கூறினால், மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஹதீஸ்கலை விதியை, ஹதீஸ்கலையை தொகுத்த ஏராளமான இமாம்கள் கூறுகிறார்களே இவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் போதிக்கிறார்கள் என்று நம்மை எதிர்ப்பவர்கள் கூறத்தயாரா?
இங்கே, ஒரு விஷயத்தை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
குர்ஆனில் இது போன்ற இடைச்செருகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையினால்தான் குர்ஆனுடைய பாதுகாப்பிற்கும் ஹதீஸ்களுடைய பாதுகாப்பிற்கு மத்தியில் வித்தியாசம் இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். ஹதீஸ்களை மறுப்பதற்கல்ல.