அறிவிப்பாளர் வரிசையில் விடுபடும் அறிவிப்பாளர்களைக் கவனித்து மறுக்கப்படும் செய்திகளின் வகைகள்
3. முன்கதிஃ
முன்கதிஃ
முன்கதிஃ என்றால் தொடர்பு அறுந்தது என்று பொருள். அறிவிப்பாளர் வரிசையில் தாபியியோ அல்லது தாபியிக்குக் கீழுள்ள ஏதோ ஒரு அறிவிப்பாளரோ விடுப்பட்டிருக்கும் செய்திக்கு முன்கதிஃ என்று சொல்லப்படும்.
உதாரணம்:
“நபி (ஸல்) அவர்கள் தொழுகையை தக்பீரைக் கொண்டும், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஓதுவதைக் கொண்டும் ஆரம்பிப்பார்கள்.
ருகூஃவு செய்தால் தலையை உயர்த்தி விடாமலும், தாழ்த்தி விடாமலும் நடுத்தரமாக வைப்பார்கள். ருகூவிலிருந்து நிமர்ந்தால் சீராக நிற்கும் வரை ஸஜதா செய்ய மாட்டார்கள்.
ஸஜ்தாவிலிருந்து எழுந்தால் சீராக அமரும் வரை மீண்டும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள். தனது இடது காலை விரித்து வலது காலை நட்டி வைத்து ஒவ்வொரு இரண்டாவது ரக்அத்திலும் அத்தஹிய்யாத்தை கூறுவார்கள்.
இன்னும் ஷைத்தானின் அமர்வை விட்டும், ஒரு மனிதன் குடங்கையை கால்நடை விரிப்பதைப் போன்று (ஸஜ்தாவில்) விரிப்பதை விட்டும் தடுத்தார்கள். மேலும், தொழுகையை ஸலாமைக் கொண்டு முடிப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 768
இந்தச் செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து அபுல் ஜவ்ஸா என்பவர் அறிவித்ததாக அறிவிப்பாளர் தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.
அவருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் மற்றொரு அறிவிப்பாளர் விடுப்பட்டிருக்கிறார்.
எனவே, இந்தச் செய்தி “முன்கதிஃ” என்று சொல்லப்படும்.