தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கும் உயரிய பண்பாளர்
மனிதன் என்ற அடிப்படையில் அபூபக்ர் (ரலி) அவர்களும் சில சிறிய தவறுகளைச் செய்தார்கள். ஆனால் தவற்றுக்குப் பிறகு கௌரவம் பார்க்காமல் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் வலியச் சென்று அவரிடத்தில் மன்னிப்புக் கோரும் உயரிய பண்பு அவர்களிடம் இருந்தது.
தாழ்த்தப்பட்டவராகக் கருதப்பட்ட தன்னால் விடுதலை செய்யப்பட் பிலால் (ரலி) அவர்களிடத்திலும் மன்னிப்புக் கேட்டவர் அபூபக்ர் (ரலி) அவர்கள். இந்தக் குணம் எல்லோரிடத்திலும் வந்துவிட்டால் நமக்கு மத்தியில் சண்டை சச்ரவுகள் எல்லாம் அகன்று விடும்.
ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
சல்மான், சுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அது வரை இஸ்லாத்தை ஏற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்த போது அக்குழுவினர் அல்லாஹ்வின் மீதாணையாக இந்த இறை விரோதியின் கழுத்தில் (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே என்று கூறினர்.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள் என்று (கடிந்து) கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்த போது அபூபக்ரே நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களை கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்.
அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால் உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்தி விட்டீர்கள் என்று சொன்னார்கள்.
ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என் சகோதரர்களே நான் உங்களை கோபப்படுத்தி விட்டேனா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இல்லை. எங்கள் அருமை சகோதரரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்-4916
ரபீஆ அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறுவதாவது:
ஒரு பேரிச்சை மரம் விஷயத்தில் நாங்கள் (நானும் அபூபக்ரும்) கருத்து வேறுபாடு கொண்டோம். அது எனது பகுதியில் உள்ளதாகும் என்று நான் கூறினேன். அது எனது பகுதியில் உள்ளதாகும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
எனவே எனக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் மத்தியில் (கடும்) வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் நான் வெறுக்கக்கூடிய ஒரு வார்த்தையைக் கூறி விட்டார்கள். பின்பு வருந்தினார்கள்.
ரபீஆவே அது போன்று என்னிடத்தில் நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள். பதிலுக்கு பதிலாகி விடும் என்று கூறினார்கள்.
அதற்கு நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று கூறினேன். அவர்கள் நீ இவ்வாறு கூற வேண்டும் இல்லையென்றால் உன் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று முறையிடுவேன் என்று கூறினார்கள். நான் செய்ய மாட்டேன் என்று கூறி விட்டேன்.
எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நிலத்தை விட்டுவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்றார்கள். நானும் அவர்களுக்குப் பின்னால் சென்றேன். அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த சிலர் வந்து அபூபக்ருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக. அபூபக்ர் உம்மிடத்தில் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு எந்த விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் முறையிடச் செல்கிறார் என்று கேட்டனர்.
அதற்கு நான் இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? இவர் தான் (குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாவதாக இருந்தவர். முஸ்லிம்களிலேயே மிகப்பெரும் அந்தஸ்தை பெற்றவர்கள். உங்களையும் கவனிக்காமல் செல்கிறார். அவர் உங்களைப் பார்த்து நீங்கள் அவருக்கெதிராக எனக்கு உதவிசெய்வதாகக் கருதி கோபமுற்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் செல்வார்.
அவர் கோபமுற்றதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கோபப்படுவார்கள். பின்பு அவ்விருவரும் கோபம் கொண்ட காரணத்தினால் அல்லாஹ்வும் கோபப்படுவான். எனவே ரபீஆ அழிந்து விடுவான் என்று கூறினார்.
அதற்கு அவர்கள் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்? என்று கேட்டார். (ஒன்றும் செய்யாமல்) திரும்பிச் சென்று விடுங்கள் என்று நான் கூறினேன். அபூபக்ர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள்.
நான் மாத்திரம் தனியாக அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்தவாறு விஷயத்தைக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தலையை என் பக்கமாக உயர்த்தி ரபீஆவே உன்க்கும், சித்திக்கிற்கும் மத்தியில் என்ன நடந்தது என்று கேட்டார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதரே இவ்வாறு இவ்வாறு நடந்தது. அப்போது அவர் வெறுக்கக்கூடிய ஒரு வார்த்தையை என்னிடத்தில் கூறி விட்டார். அதற்குப் பகரமாக நான் கூறியவாரே நீயும் கூறு என்று கூறினார். ஆனால் நான் (கூற) மறுத்து விட்டேன் என்று (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் சொன்னேன்.
அதற்கு அவர்கள் ஆம். நீ அவரிடத்தில் (அவர் கூறியவாறு) திருப்பிக் கூற வேண்டாம். மாறாக அபூபக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்றே சொல் என்று கூறினார்கள். எனவே நான் அபூபக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று சொன்னேன்.
நூல் : அஹ்மத்-16577 (15982)