பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?
ஹஜ்ஜுக்காகச் சென்றுள்ள பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்? இதனையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு ஏற்பட்டாலும் ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். ஆயினும் அவர்கள் தவாஃப் செய்வதும், ஸஃபா, மர்வா இடையே ஓடுவதும் விலக்கப்பட்டுள்ளது.
இவ்விரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம்.
மக்காவுக்குள் நுழைந்ததற்காக ஆரம்பமாக தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். இதுவே உம்ராவுக்காகவும், மக்காவில் நுழைந்ததற்குக் காணிக்கையாகவும் அமைந்து விடுகிறது என்பதையும் நாம் முன்னர் கண்டோம்.
ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் இஹ்ராம் கட்டிய பெண்ணுக்கு இந்தத் தவாஃப் செய்வதற்கு முன்பே மாதவிலக்கு ஏற்பட்டால் இந்தத் தவாஃபை அவர்கள் விட்டு விட வேண்டும். இந்தத் தவாஃபை விட்டு விட்டதால் அவர்கள் உம்ராச் செய்தவர்களாக ஆக மாட்டார்கள். மாத விலக்கு உள்ள நிலையிலேயே ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளையும் நிறைவேற்ற வேண்டும். மாதவிலக்கு நிற்கும் வரை காத்திருந்து, எப்போது மாதவிலக்கு நிற்கிறதோ அப்போது தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்ற வேண்டும். பத்தாம் நாள் தான் செய்ய வேண்டும் என்பது இவர்களுக்குக் கிடையாது. இவ்வாறு செய்து விட்டால் அவர்களுக்கு ஹஜ் நிறைவேறுகிறது.
உம்ரா அவர்களுக்குத் தவறி விட்டதால் அவர்கள் விரும்பினால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.
தவாஃபுல் விதாஃ எனும் தவாஃப் இவர்களுக்கு வலியுறுத்தப்படவில்லை. புறப்பட எண்ணியுள்ள கடைசி நேரத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் அந்தத் தவாஃபுக்காக இவர்கள் பயணத்தைத் தள்ளிப் போடத் தேவையில்லை. அதைச் செய்யாமலேயே திட்டமிட்ட படி புறப்பட அனுமதி உண்டு.
இவற்றுக்குரிய சான்றுகள் வருமாறு:
நான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு! உம்ராவை விட்டு விடு!என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் தன்யீம்என்ற இடத்துக்கு என்னை அனுப்பினார்கள். (அங்கே உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி) உம்ராவை முடித்தேன். இது அந்த உம்ராவுக்குப் பகரமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 319, 316, 317, 1556
நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்யாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 305, 1650
சஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, நம்மை – நமது பயணத்தை – அவர் தடுத்து விட்டாரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். தவாஃபுல் இஃபாளாவைச் செய்த பிறகு தான் இது ஏற்பட்டது என்று நான் கூறினேன். அதற்கவர்கள், அப்படியானால் (நமது பயணத்திற்குத்) தடை இல்லை என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 1733, 328, 1757, 1772, 4401, 5329, 6157