மாதவிடாய் பெண்கள் தவாஃப், ஸயீ எப்போது செய்வது?
அன்றைய தினம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாஃபுல் இஃபாளாவையும், ஸயீயையும் எப்போது செய்வது? தூய்மையாவதற்கு ஒரு வாரம் ஆகிவிட்டால் ஹஜ்ஜுடைய நாட்கள் முடிந்துவிடும் நிலையில் எப்படி அவற்றை நிறைவேற்றுவது?
இத்தகைய பெண்களுக்கு இரண்டு விதமான நெருக்கடிகள் ஏற்படலாம்.
1. தூய்மையாவதற்கு முன்னால் பயணம் புறப்பட நேரிடலாம்.
2. தூய்மையாவதற்குரிய காலம் ஹஜ்ஜின் 11, 12, 13 நாட்களையும் தாண்டிச் செல்லலாம்.
தவாஃபுல் இஃபாளா என்பது ஹஜ்ஜின் தவாஃபாகும். இதைச் செய்யாவிட்டால் ஹஜ் நிறைவேறாது. இதைக் கீழ்க்காணும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்திய உறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!’ என்றதும் “அப்படியாயின் புறப்படுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1733
மாதவிலக்கு ஏற்பட்டவர் தூய்மையாகி, தவாஃபுல் இஃபாளா செய்வதற்குள் பயணத் தேதி முடிந்து விடுவது போன்ற நெருக்கடியான கட்டத்தில் இரத்தம் உறிஞ்சுகின்ற இறுக்கமான ஆடை (நாப்கின்) அணிந்து கொண்டு தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றலாம். இவ்வாறு அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அடுத்ததாக, பயணத் தேதி மீதமிருந்தாலும் துப்புரவாகும் நாள் ஹஜ்ஜுடைய நாட்களான 13ஆம் நாளையும் தாண்டிச் செல்கின்ற நெருக்கடி ஏற்படலாம்.
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்!
அல்குர்ஆன் 64:16
இந்த வசனத்தின் அடிப்படையில், ஹஜ்ஜுடைய நாட்களைத் தாண்டி விட்டாலும் அதை நிர்ப்பந்தம் என எடுத்துக் கொண்டு, துப்புரவான பின் தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றியாக வேண்டும்.