மனிதர்களில் சிறந்தவர்கள்-இறையச்சம் கொண்டவர்கள்
ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்புவதோடு அவனுக்குப் பயந்து வாழ்வது அவசியமாகும். இத்தகைய இறையச்சம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பாகும். தனிமனிதனும் சமுதாயமும் நன்றாக இருப்பதற்கு இந்தப் பண்பு முக்கியமான ஒன்று. அனைத்தும் அறிந்திருக்கும் அகிலத்தின் இரட்சகனுக்கு அஞ்சி வாழும் மனிதர்கள், எல்லா விதமான காரியத்திலும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். எல்லா நேரத்திலும் இடத்திலும் இறைவனால் கவனிக்கப்படுகிறோம், அவனால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படும் மக்கள், எப்போதும் நல்வழியில் வாழும் நல்லவர்களாக சிறந்தவர்களாகத் திகழ்வார்கள்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(குர்ஆன் 49:13)
“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சம் உடையவரே” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-3490 , 3353