இய்யாக நஃபுது(உன்னையே வணங்குகிறோம்)-சமாதி வழிபாடு 3
இன்னும் நாம் இதில் ஆழமாக இறங்கினால் சமாதி வழிபாட்டையும், சமாதிகளையும் தரைமட்டமாக்கும் சான்றுகள் பலவற்றைக் காணலாம். அவை யாவும் இய்யாக நஃபுதுவின் விளக்கமேயாகும்.
ஹபஷா தேசத்தில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவங்களையும் பற்றி உம்முஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள். அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறையின் மீது மஸ்ஜிதைக் கட்டி அந்த உருவங்களை அதில் செதுக்குவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்விடத்தில், படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 427, 434, 1341, 3873
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கிய பொழுது யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.
இதை அறிவிக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், இவ்வாறு யூதர்கள், கிறிஸ்தவர்கள் செய்த செயலைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்யாதிருந்தால் அவர்களின் மண்ணறையை வீட்டுக்கு வெளியில் (பகிரங்கமாக) ஆக்கியிருப்பார்கள் என்றாலும் அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டுவிடுமோ என அஞ்சப்பட்டது.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 1330, 1390, 4441
உங்களில் ஒருவர் எனக்கு மிகவும் உற்ற தோழராக ஆகுவதை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன். ஏனெனில் நபி இப்ராஹீமை தன் உற்ற தோழராக அல்லாஹ் ஆக்கியதைப் போல என்னையும் ஆக்கிக் கொண்டான். (உண்மையாக) நான் என் சமுதாயத்தவர்களிலிருந்து ஒரு உற்ற தோழரை ஆக்குபவனாக இருந்தால் அபூபக்கரையே என் உற்ற தோழராக ஆக்கியிருப்பேன்.
முன்னிருந்தவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் மண்ணறைகளை மஸ்ஜிதாக ஆக்காதீர்கள். அதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி); நூல்: முஸ்லிம் 827
கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டவர்களே மக்களில் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி); நூல்: அஹ்மத் 1602
உயரமான எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காது விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி); நூல்: முஸ்லிம் 1609,
நல்லடியார்கள் என்று நம்பப்படுபவர்கள், நபிமார்கள் யாராயினும் அவர்களின் சமாதிகளை வழிபட இஸ்லாத்தில் இடமில்லை என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. இவை யாவும் இய்யாக நஃபுதுவின் விளக்கவுரைகள் தான். எவ்வகையிலும் இறைவனல்லாதவர்களை வணங்க அறவே அனுமதி இல்லை என்று யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியில் உண்மையாளர்கள்.
கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?
அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர். அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்களே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? எனவும் இவர்கள் கேட்கின்றனர். கனவுகள் என்றால் என்ன என்பதைப் பற்றி இவர்கள் சரியான முறையில் அறியாததே இந்த வாதத்துக்குக் காரணம்.
யார் கனவில் என்னைக் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வர மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 110, 6197
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தில் தவிர மற்ற எவருடைய வடிவத்திலும் எவருடைய பெயரைக் கூறிக் கொண்டும் ஷைத்தான் கனவில் வருவான் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும். கனவில் வரக்கூடியவர் நான் தான் அப்துல் காதிர் ஜீலானி என்று கூறுவதால் அவர் அப்துல் காதிர் ஜீலானியாக மாட்டார். ஷைத்தானே கனவில் வந்து நான் தான் அப்துல் காதிர் ஜீலானி எனக் கூறலாம்.
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயலுக்கு, தர்காவில் பிரார்த்தனை செய்யும் செயலுக்கு – அழைப்பு விடுப்பதிலிருந்து வந்தது ஷைத்தான் தான் என்பது உறுதியாகின்றது. கனவில் ஒருவரை நாம் பார்த்து அடையாளம் காண்பது என்றால் அவரை நேரடியாக நாம் பார்த்திருக்க வேண்டும். நாம் நேரில் சந்திக்காத ஒருவரை கனவில் பார்த்து இன்னார் என்று கண்டு பிடிக்க முடியாது.
கனவில் அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்தவர்கள் அவர் காலத்தில் வாழவில்லை. அவரை அவர்கள் நேரடியாகப் பார்த்ததுமில்லை. பிறகு எப்படி இவர் தான் அப்துல் காதிர் ஜீலானி என்று கண்டு பிடித்தார்கள்?
கனவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. கனவில் ஒருவர் வருகிறார் என்றால் அவரே வருகிறார் என்று பொருள் இல்லை. உதாரணமாக என்னை நீங்கள் கனவில் காண்கிறீர்கள். நீங்கள் என்னை கனவில் காண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் நேற்றிரவு உங்கள் கனவில் வந்தேனே என்று என்னால் அவரிடம் கூற முடியாது. கனவில் என்னை யாராவது கண்டாலும் நான் எதையாவது கனவில் கூறுவதாகக் கண்டாலும் அதற்கும், எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
ஒரு மகானைக் கனவில் கண்டால் கூட அந்த மகானுக்கு இன்னார் கனவில் நாம் வருகிறோம் என்பது தெரியாது. அல்லாஹ் நல்ல நோக்கத்திற்காகவும் அல்லது சோதித்துப் பார்ப்பதற்காகவும் கனவுகளில் பலவிதமான காட்சிகளைக் காட்டுவான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதால் மார்க்க சம்மந்தமான எந்த உத்தரவும் கனவில் வராது. மார்க்கத்தின் கட்டளைகளுக்கு எதிரான எந்த உத்தரவும் அல்லாஹ்விடமிருந்து கனவில் வராது. எனவே ஒரு மகானையே கனவில் கண்டாலும் அவர் என்ன கூறினாலும் அவர் மகானுமல்ல; அவர் கூறுவது மார்க்கமும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் காலையில் எழுந்தவுடன் யாரும் போய் கிணற்றில் விழுந்து சாக மாட்டோம். பெரும் தொகையை ஒருவருக்கு கொடுப்பதைப் போல் நாம் கனவு கண்டால் விழித்தவுடன் அத்தொகையை அவரிடம் கொடுத்து விட மாட்டோம்.
உலக விஷயங்களில் மட்டும் மிகவும் விழிப்போடு தான் இருக்கிறோம். கனவில் கண்டதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டு கனவில் காண்பதை நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம். ஆனால் மார்க்க விஷயத்தில் தான் கனவைக் காரணம் காட்டி நாசமாகிறோம்.
நபிமார்களின் கனவுகள் தான் முழுக்க முழுக்க வஹீயாகும். இதன் காரணமாகத் தான் மகனை அறுப்பதாகக் கனவு கண்ட இப்ராஹீம் நபி அவர்கள் அதை நடைமுறைப்படுத்தத் தயாரானார்கள். மற்ற எவரது கனவும் நடைமுறைப்படுத்த வேண்டியவை அல்ல. நமக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடிய சில பயன்கள் முன்கூட்டியே சில நேரத்தில் கனவு மூலம் அறிவிக்கப்படலாம். ஆனால் மார்க்கக் கட்டளைகள் ஒன்று கூட கனவில் வராது. இதைப் புரிந்து கொள்ள பின்வரும் நபிமொழி உதவுகிறது.
நற்செய்தி கூறக்கூடியவை தவிர, வஹியில் எதுவும் மிச்சமாக இருக்கவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நற்செய்தி கூறக்கூடியவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்ல கனவுகள் என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 6990
நற்செய்திகள் தான் கனவில் வர முடியுமே தவிர மார்க்கத்தின் எந்தச் சட்டமும் கனவில் வராது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவில் ஷைத்தான் வர மாட்டான் என்பதால் அவர்களைக் கனவில் காண முடியுமல்லவா? என்று சிலர் கேட்கலாம்.
யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னை விழிப்பிலும் (நேரடியாகக்) காண்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 6993
கனவில் கண்ட பின் நேரிலும் அவர்களைக் காண முடியும் என்றால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் சாத்தியமாகும். மதீனாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண்பார்கள். விடிந்தவுடன் அவர்கள் நேரில் காணும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவான்.
இன்றைக்கு ஒருவர் கனவில் நபிகள் நாயகத்தைப் பார்த்தால் விழித்தவுடன் நேரில் அவர்களைப் பார்க்க முடியாது. எனவே அவர் நபிகள் நாயகத்தைக் காணவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களை உலகில் யாரும் கனவில் காணவே முடியாது என்பதற்கு மேற்கண்ட நபிமொழி சான்றாக உள்ளது. கனவுகள் பற்றிய இந்த விளக்கத்தை அறிந்து கொண்டால் அல்லாஹ்வைத் தவிர எவரிடமும் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்.
மறுமையில் பரிந்துரை
நல்லடியார்களும், நபிமார்களும் மறுமையில் பரிந்துரை செய்வார்களே என்ற காரணத்தைக் கூறி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். இதன் காரணமாகவே அவ்லியாக்களின் ஷபாஅத்தை வேண்டுகிறோம் என்று வாதிடுவோர் ஷபாஅத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள்.
எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதனையும் செய்து விட முடியாத எந்த ஆத்மாவிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:48)
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.
(அல்குர்ஆன் 2:255)
உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?
(அல்குர்ஆன் 10:3)
அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.
(அல்குர்ஆன் 20:109)
யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. முடிவில் அவர்களின் உள்ளங்களிலிருந்து நடுக்கம் நீங்கியதும் உங்கள் இறைவன் என்ன கூறினான்? எனக் கேட்டுக் கொள்வார்கள். உண்மையையே (கூறினான்.) அவன் உயர்ந்தவன்; பெரியவன் என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 34:23)
இந்த வசனங்களையும், இந்தக் கருத்தில் அமைந்த ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது பரிந்துரை செய்வதற்காக இறைவன் சிலருக்கு அனுமதி வழங்குவான். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வான் என்ற கருத்தைப் பெற முடிகின்றது. ஒரு நபியோ, அல்லது மற்றவர்களோ தாங்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் பரிந்துரைக்க முடியாது. அப்படியே அவர்கள் பரிந்துரைத்தாலும் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளவும் படாது.
நான் ஹவ்லு (அல்கவ்ஸர்) எனும் தடாகத்தினருகே இருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அருந்துவார். அதை அருந்தியவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார். அப்போது என்னருகே சில சமூகத்தினர் (நீரருந்த) வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள்.
அப்போது எனக்கும் அவர்களுக்குமிடையே தடை ஏற்படுத்தப்படும். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களாயிற்றே என்று நான் கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் புதிதாக உருவாக்கியவற்றை நிச்சயம் நீர் அறியமாட்டீர் என்று என்னிடம் கூறப்படும். எனக்குப் பின்னால் (மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களுக்குக் கேடு உண்டாகட்டும் என்று நான் கூறுவேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி); நூல்கள்: புகாரி 4740, 6526
இறைவனது படைப்புகளிலேயே மிகவும் உயர்வான இடத்தைப் பெற்றுள்ள இறைவனுக்கு மிகவும் நெருக்கமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திசைமாறிச் சென்ற தம் தோழர்களுக்காகப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனாலும் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படவில்லை.
முஹம்மதே! நீர் பரிந்துரைக்கலாம் என்று இறைவன் அனுமதி வழங்காத நிலையில் அவர்கள் பரிந்துரை செய்ததனாலேயே இந்த நிலை. முஹம்மத் (ஸல்) அவர்களாக இருந்தால் கூட நினைத்த போது நினைத்த நபர்களுக்காகப் பரிந்துரைத்திட முடியாது என்பதற்கு இது தெளிவான சான்று. மற்றொரு ஹதீஸிலிருந்தும் இதை அறியலாம்.
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோசடி செய்வதைப் பற்றி எச்சரிக்கை செய்தனர். அது எவ்வளவு பயங்கரமான குற்றம் என்பதை விளக்கினார்கள். மேலும் தொடர்ந்து (ஒட்டகத்தை மோசடி செய்தவன்) மறுமை நாளில் தன் பிடரியின் மேல் அந்த ஒட்டகத்தைச் சுமந்து கொண்டு அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை. (உலகிலேயே) உனக்கு (இது பற்றி) எடுத்துரைத்து விட்டேன் என்று நான் கூறுவேன்.
இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள் (குதிரையை மோசடி செய்தவன்) குதிரையைத் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை. (சொல்ல வேண்டியவைகளை உலகிலேயே) உனக்குச் சொல்லிவிட்டேன் என்று நான் கூறி விடுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள்.
(ஆட்டை மோசடி செய்தவன்) ஆட்டைத் தன் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிடவில்லை. (சொல்ல வேண்டியவைகளை) உனக்குச் சொல்லி விட்டேன் என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள். (ஏதேனும் ஒரு உயிர்ப் பிராணியை மோசடி செய்தவன்) அதைத் தன் தோளில் சுமந்தவனாக வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை.
(முன்பே) உனக்குச் சொல்லி விட்டேன் என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்கள் எவரையும் நாம் சந்திக்கும்படி செய்து விடாதீர்கள். (அசையாப் பொருட்களில் மோசடி செய்தவன்) அதைத் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூதரே! (என்னைக்) காப்பாற்றுங்கள்! என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்குமாறு செய்து விடாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 1402, 3073
முஹம்மதே பரிந்துரை செய்யுங்கள் என்று இறைவன் அனுமதி அளிப்பதற்கு முன் தன்னிச்சையாக அவர்கள் பரிந்துரை செய்ய மறுக்கின்றனர் என்பதை இதிலிருந்து நாம் விளங்கலாம். இறைவன் எப்போது அனுமதிக்கின்றானோ அப்போது தான் பரிந்துரை செய்ய முடியும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக அறிவிக்கின்றது.
மக்களெல்லாம் தங்களுக்காகப் பரிந்துரை செய்யுமாறு ஆதம் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகியோரிடம் சென்று விட்டு அவர்களெல்லாம் மறுத்து விட முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது நான் ஸஜ்தாவில் விழுவேன். எவ்வளவு நேரம் என்னை (அந்த நிலையில் கிடக்க) அல்லாஹ் நாடினானோ அவ்வளவு நேரம் விட்டு விடுவான்.
பிறகு முஹம்மதே! (தலையை) உயர்த்துவீராக! கூறு! அது கேட்கப்படும். பரிந்துரை செய்! அது ஏற்கப்படும்! கேள்! கொடுக்கப்படுவாய் என்று இறைவன் கூறுவான். நான் தலையை உயர்த்தி என் இறைவன் கற்றுத் தந்த விதமாகப் புகழ்ந்துரைத்து விட்டுப் பரிந்துரை செய்வேன். அந்த பரிந்துரைக்கும் இறைவன் சில வரம்புகளை ஏற்படுத்துவான். (அதாவது குறிப்பிட்ட சில தகுதியுடையவர்கள் விஷயத்தில் மட்டும் பரிந்துரைக்க அனுமதிப்பான்) நான் அந்தத் தகுதி உள்ளவர்களை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் சேர்ப்பிப்பேன்.
இப்படியே பலமுறை நடக்கும். ஒவ்வொரு தடவையும் ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின் பரிந்துரைக்க வரம்பு ஏற்படுத்துவான். யாரைக் குர்ஆன் தடுத்து விட்டதோ அவர்களைத் தவிர அதாவது யாருக்கு நிரந்தர நரகம் என்று கூறி விட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களை நரகிலிருந்து வெளியேற்றுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மிகவும் நீண்ட ஹதீஸின் சுருக்கம் இது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புகாரி 4712, 6565
பரிந்துரை செய்தல் மறுமையில் உண்டு என்பதையும், இறைவன் அனுமதி வழங்கும் போது மட்டும் தான் பரிந்துரை செய்ய முடியும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறியலாம். மேலும் யார் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்களோ அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.
எனது உம்மத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காதவர்களுக்கே என் பரிந்துரை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ப் பின் மாலிக் (ரலி); நூல்: முஸ்லிம் 296
நபிமார்கள் மற்றும் பெரியார்களின் பரிந்துரையை எதிர்பார்த்து அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றவர்களுக்கு அதுவே பரிந்துரைக்குத் தடையாகிப் போகும். இதை முஸ்லிம்களில் உள்ள சமாதி வழிபாட்டுக்காரர்கள் உணர வேண்டும். பரிந்துரை செய்ய ஒருவருக்கு அனுமதியளிப்பதும் இறைவனது தனிப்பட்ட அதிகாரத்தின் பாற்பட்டது என்பதை உணர்ந்தால் இத்தகைய இணை வைத்தலில் இறங்க மாட்டார்கள்.
வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.
(அல்குர்ஆன் 53:26)
அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.
(அல்குர்ஆன் 21:28)
அறவே பரிந்துரை கிடையாது என்பவர்களின் கூற்றும் தவறானது. பரிந்துரை செய்யும் அதிகாரம் நல்லடியார்களின் கையிலே இருக்கிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை நரகிலிருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் தவறானது என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.
யாரை, எப்போது, யாருக்காக பரிந்துரை செய்ய அனுமதிப்பது என்ற அதிகாரம் இறைவனுக்கேயுரியது என்ற காரணத்தினால் தான் – மக்கத்து காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இறைவனை மறுக்காதவர்களாக இருந்தும் இறைவனின் வல்லமையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தும், பெரியோர்கள் சுயமாகப் பரிந்துரை செய்வார்கள் என்று கருதி அவர்களைத் திருப்திபடுத்த முயன்ற போது அவர்களை காஃபிர்கள் என்று இறைவன் பிரகடனம் செய்தான்.
நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காகப் பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால் அப்போது இறைவனை மட்டுமே வணங்கி இறைவனிடம் தான் இதைக் கேட்க வேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பரிந்துரை செய்யவை என்று கேட்க வேண்டுமே தவிர நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.
மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் நேரடியாகச் சந்திக்கும் போது மட்டுமே அப்படிக் கேட்பார்கள். அங்கு மட்டுமே அது தவறாக இறைவனால் கருதப்படாது. காரணம் மறுமையில் இறைவனது தனி அதிகாரம் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாயிருக்கும். இறைவனுக்கும், இறைவனது படைப்பினங்களுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாகியிருக்கும்.
நபிமார்கள் உட்பட அனைவரும் அஞ்சி நடுங்கி திடுக்குற்று இருப்பதை எல்லோரும் உணர முடியும். இந்தக் கட்டத்தில் பரிந்துரை செய்யச் சொல்லும் போது அங்கே இணைவைத்தலின் சாயல் கூட இருக்காது. இதனால் தான் மறுமையில் நேரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணும் போது அவர்களைப் பரிந்துரை செய்ய மக்கள் கேட்கின்றனர்.
மறுமையில் பரிந்துரை செய்வதற்காக இம்மையிலேயே எந்தப் பெரியாரிடமும் கேட்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) இவ்வுலகில் வாழ்ந்த போது அவர்களை நபித்தோழர்கள் நேரடியாகச் சந்தித்ததால் இவ்வாறு கேட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் மரணித்த பிறகு கேட்டதில்லை.
மறுமையில் பரிந்துரை பற்றி இவ்வாறே நாம் விளங்க வேண்டும். இந்தப் பரிந்துரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் என்று எவரும் விளங்கி விடக் கூடாது. மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்ய இறைவன் அனுமதிப்பான். இதையும் நாம் உணர வேண்டும்.
சொர்க்கத்திற்குச் சென்று விட்ட முஸ்லிம்கள் நரகத்தில் கிடக்கும் முஸ்லிம்களுக்காக எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன் நோன்பு நோற்றனர்; தொழுதனர்; ஹஜ் செய்தனர்; (அவர்களின் தவறுகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பாயாக) என்று பரிந்துரைப்பார்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகிலிருந்து) வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறப்படும். நரகிற்கு அவர்கள் ஹராமாக்கப்படுவார்கள். பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள்.
பிறகு இறைவா! நீ சொன்ன தகுதியில் உள்ள எவரும் நரகில் மிச்சமாக இல்லை என அவர்கள் கூறுவார்கள். அப்போது இறைவன் ஒரு தீனார் அளவு எவருடைய உள்ளத்தில் நல்லவை இருக்கின்றதோ அவர்களையும் நீங்கள் வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவான். அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை நரகிலிருந்து வெளியேற்றுவார்கள். பிறகு இறைவன் யாருடைய உள்ளத்தில் அரை தீனார் அளவுக்கு நன்மை உண்டோ அவர்களையும் வெளியேற்றுங்கள் என்பான். அவர்கள் சென்று பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள்.
பிறகு யாருடைய உள்ளத்தில் அணு அளவு நன்மை உண்டோ அவர்களையும் வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவான். அவர்கள் சென்று பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள். பிறகு இறைவா! எஞ்சியிருப்பவர்களில் சிறிதளவும் நன்மையில்லை என்பார்கள்.
அப்போது இறைவன் மலக்குகள் பரிந்துரைத்து விட்டார்கள்; நபிமார்கள் பரிந்துரைத்து விட்டார்கள்; கருணையாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் கருணையாளனாகிய என்னைத் தவிர யாரும் மிச்சமில்லை என்று கூறிவிட்டு நரகிலிருந்து ஒரு பிடி அள்ளுவான். அவர்கள் அடுப்புக் கரியாக மாறியிருப்பார்கள்.
ஜீவநதி எனும் பெயருடைய நதியில் அவர்களைப் போடுவான். முத்துக்கள் போல் அவர்கள் வெளிப்படுவார்கள். அப்போது சுவர்க்கவாசிகள் இவர்கள் இறைவனால் விடுதலை செய்யப்பட்டவர்கள். ஒரு நன்மையும் செய்யாமல் இவர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைத்து விட்டானே என்பார்கள். அப்போது இவர்களுக்கு கிடைத்தது போல் இன்னொரு மடங்கு உங்களுக்கு உண்டு என்று கூறுவான். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி); நூல்: புகாரி 7440
பரிந்துரை என்பது மேலோட்டமாகப் பார்த்தால் யாரோ சொல்வதை இறைவன் கேட்பது போல் தோன்றினாலும் இந்த ஹதீஸைக் கவனிக்கும் போது இறைவன் சிலரை விடுவிக்க முடிவு செய்து விட்டு ஒரு பேச்சுக்காகத் தான் பரிந்துரைக்கச் சொல்கிறான். பரிந்துரை இல்லாமல் அதை விட அதிகமானோரை அவன் வெளியேற்றுவான் என்பதை உணரலாம்.
வஸீலா தேடுவது தவறா?
அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களிடம் எதையும் கேட்கக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைத்தாலும் அவற்றுக்கு எந்த மறுப்பும் சொல்ல முடியாதவர்கள் பொருத்தமில்லாத வாதங்கள் மூலம் தமது நிலையை நியாயப்படுத்த முயல்கின்றனர்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அவனளவில் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யுங்கள் (அல்குர்ஆன் 5:35) என்று கூறுகிறான்.
அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிடும் காரணத்தினால் தான் நாங்கள் அவ்லியாக்களிடம் வஸீலா தேடுகிறோம் என்று வாதிடுகின்றனர். அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிட்டிருக்கும் போது அதை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது. ஆனால் வஸீலா என்பது என்னவென்பதில் இவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதே நமது வாதமாகும்.
வஸீலா என்பதன் பொருள் துணைச் சாதனம். கடலில் பயணம் செய்ய உதவும் கப்பல் வஸீலா எனப்படும். மேலே ஏற்றுவதற்கு உதவும் ஏணி அதற்கான வஸீலா எனப்படும். அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனங்களைத் தேடுங்கள் என்பதாகும்.
அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளனவே தவிர, ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.
அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனுக்காக எதையும் செய்யாமல் கேட்கக் கூடாது. அவனது கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவனிடம் கேட்க வேண்டும். நாம் கேட்பதற்கு அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளைக் கட்டி அழுங்கள் என்பது அதன் பொருள் அல்ல.
இதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே ஆதாரம் உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.
நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) நபித்தோழர்கள் மற்றும் யுக முடிவு நாள் வரை வரக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும் அடங்குவர்.
மூமின்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ் பிறப்பிக்கிறான். முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும். இந்தக் கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இக்கட்டளையின் படி இறைவனை அஞ்சியாக வேண்டும். அஞ்சினார்கள்.
இரண்டாவது கட்டளை அல்லாஹ்வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும். இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.
வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள் செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால் பொருந்திப் போகிறது. வஸீலா என்பது நல்லடியார்களைப் பிடித்துக் கொள்வது என்று பொருள் கொண்டால் அந்தக் கட்டளை நபிகள் நாயகத்துக்கும் இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.
முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்.
இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான்களுக்குக் கூட இந்தக் கட்டளை உள்ளது. அவர்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் இவர்கள் வஸீலாவாக்க வில்லையென்றால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?
எனவே வஸீலாவுக்கு இடைத் தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். நான் உங்களின் கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி வருகின்றேனே எனக்காக உதவக் கூடாதா? என்று கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.
இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள் என்று கேட்டால் நம்மை பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார். இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும் என்று கேட்பார்.
இன்னார் பொருட்டால் என்று இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாகே உள்ளது.
நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்கு கோபம் வராதா? நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்! நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.
ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக் காட்டி இன்னொருவர் உதவி கேட்பதை விட கோமாளித் தனம் எதுவும் இருக்க முடியாது. நம்மிடம் அப்படி யாரேனும் கேட்டால் நமக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கோமாளித் தனமாகக் கேட்டால் அவனுக்குக் கோபம் வராது என்றும், இந்தக் கோமாளித் தனத்தை அல்லாஹ் விரும்புவான் என்றும் நம்புகிறார்களே! இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகத்தின் பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை. எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கன்னியத்தைக் குறைக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
ஸியாரத் ஒரு நபிவழியல்லவா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர். இவர்கள் இறந்து போனவர்களிடம் எதையும் பிரார்த்திக்கலாகாது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். அவ்லியாக்களை அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு தான் கேட்கிறோம் என்கின்றனர்.
இந்த வாதத்திலும் பல தவறுகள் உள்ளன.
இவர்கள் ஸியாரத் செய்வதற்குத் தான் ஆதாரம் காட்டுகின்றனர். இறந்தவரிடம் போய் நமக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுமாறு வேண்டலாம் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அல்லாஹ்விடம் தங்களுக்காக துஆச் செய்யுமாறு நபித்தோழர்கள் கேட்டதுண்டு. இதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களது அடக்கத்தலம் வந்து நபித்தோழர்கள் யாரும் எங்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று கேட்டதில்லை. அடக்கத்தலம் வராமல் இருந்த இடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டதில்லை.
எனவே ஸியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தால் அதை மற்றொரு செயலைச் செய்வதற்கு ஆதாரமாகக் காட்டக் கூடாது.
இனி ஸியாரத் விஷயத்திற்கு வருவோம்.
கப்ர்களை – அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்து கொள்க! இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி); நூல்: திர்மிதி 974
இது தான் ஸியாரத் பற்றி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.
ஆரம்ப காலத்தில் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அனுமதி வழங்கினார்கள். இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக ஆய்வு செய்தால் அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வதற்கு எதிரானதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளதைக் காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதிக்கும் போது இவ்வாறு அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மறுமையை நினைவு படுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடக்கத் தலங்களுக்கு நாம் செல்லும் போது இவர்களைப் போல் நாமும் ஒரு நாள் மரணிக்க வேண்டி வரும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் ஸியாரத் அனுமதிக்கப்பட்டதற்கான ஒரே காரணம். அடக்கம் செய்யப்பட்டவர்கள் மகான்கள் என்பதற்காகவோ அல்லது அவர்களின் ஆசியை வேண்டுவதற்காகவோ இந்த அனுமதி அளிக்கப்படவில்லை.
இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடை முறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் வந்தால் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.
இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் தர்காக்களுக்குச் செல்வதால் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நோக்கம் நிறைவேறாது என்று கூற முடியும். ஏனெனில் அங்கே நடக்கும் காரியங்கள் மறுமையின் நினைவை மறக்கச் செய்வதாகவே உள்ளன. ஆடம்பரமான கட்டிடங்கள் நறுமணப் புகை, ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வது, சிறப்பான நாட்களில் நடக்கும் ஆடல் பாடல் ஆபாசக் கூத்துக்கள் யாவும் மறுமையின் சிந்தனையை மறக்கடிக்கச் செய்வதாகவே உள்ளன.
எந்த நோக்கத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்ய அனுமதித்தார்களோ அந்த நோக்கத்தை தர்காக்கள் நாசப்படுத்துகின்றன என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. நல்லடியார்களின் அடக்கத்தலம் செல்வது தான் ஸியாரத் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு நபிமொழியும் சான்றாகவுள்ளது.
என் தாயாருக்கு பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 1621
எந்த ஒரு முஸ்லிமுடைய பாவத்துக்காகவும் பாவ மன்னிப்புத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்காக மட்டுமே பாவ மன்னிப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
(அல்குர்ஆன் 9:113)
நமது தாயாருக்காக பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ் அனுமதி மறுக்கிறான் என்பதிலிருந்து அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என விளங்கலாம். முஸ்லிமாக இல்லாத தாயாரின் அடக்கத் தலத்தை ஸியாரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதிலிருந்து ஸியாரத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஸியாரத் என்பது நல்லடியார்கள் என்பதற்காக நடத்தப்பட வேண்டிய காரியமல்ல. மாறாக மரணத்தை நினைவு படுத்தும் காரியமே. முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தும் கூட இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: முஸ்லிம் 1610
தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி): நூல்: புகாரி 1230
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 427, 434, 1341, 3873
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அந்தப் பணிக்காக உன்னை நான் அனுப்புகிறேன். இம்மண்ணில் உயரமாக்கப்பட்ட எந்த சமாதியையும் தரைமட்டமாக்காது விடாதே என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்; நூல்: முஸ்லிம் 1609
என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) எதைத் தடை செய்தார்களோ அதைத் தேடிச் செல்வதை வணக்கமாகக் கருதுவது தகுமா? என்று சிந்திக்க வேண்டும். எனவே ஸியாரத்துக்கும், அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் போய் பிரார்த்தனை செய்வதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
உன்னையே வணங்குகிறோம் என்பதைச் சரியான முறையில் புரிந்து கொள்பவர்கள் இது போன்ற உளறல்கள் மூலம் தங்கள் செயல்களை நியாயப்படுத்த மாட்டார்கள். இந்தத் தெளிவான சான்றுக்கு முன்னால் சரணடைவார்கள்.