அல்ஹம்து அத்தியாயத்தின் பொருள்
இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை அறிவதற்கு முன் இதன் நேரடிப் பொருளை அறிந்து கொள்வோம்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
அர்ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
மாலிகி யவ்மித்தீன்:
(அவன்) நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி
இய்யா(க்)க நஃபுது
(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.
வ இய்யா(க்)க நஸ்தயீன்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம்
(இறைவா) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!
ஸிரா(த்)தல்லதீன அன் அம்(த்)த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
பிஸ்மில்லாஹ்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற இறை வசனத்திற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் என்று பொருள்.
இந்தச் சொற்றொடரில் பிஸ்மி அல்லாஹ் ரஹ்மான் ரஹீம் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. அல்லாஹ் என்ற சொல் அடுத்த வசனத்திலும் இடம் பெற்றுள்ளதால் அல்லாஹ் என்ற திருப்பெயர் பற்றி அந்த இடத்தில் விளக்குவோம். அது போல் ரஹ்மான் ரஹீம் ஆகிய சொற்கள் அதற்கு அடுத்த வசனத்தில் இடம் பெறுவதால் அந்த இடத்தில் இவ்விரு திருப்பெயர்கள் பற்றி விளக்குவோம். அல்லாஹ்வின் திருப்பெயர் கூறியே எந்தக் காரியத்தையும் துவக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கே விளக்குவோம்.
முஸ்லிம்கள் தங்களின் எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கூறியே செய்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் மட்டுமின்றி, ஏனைய நபிமார்களும் அவர்களின் சமுதாயத்தினரும் இறைவனின் திருப்பெயர் கூறியே தங்கள் காரியங்களைத் துவங்கியுள்ளனர்.
நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் ஏறும் போது அல்லாஹ்வின் திருநாமத்தால் இதில் ஏறுங்கள்! என்று கூறியதாக திருக்குர்ஆனின் 11:41 வசனம் குறிப்பிடுகின்றது.
சுலைமான் (அலை) அவர்கள் அண்டை நாட்டு ராணிக்கு எழுதிய மடலில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியதாக திருக்குர்ஆனின் 27:30 வசனம் குறிப்பிடுகின்றது.
படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் நீர் ஓதுவீராக! என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனம். முதல் வசனத்திலேயே தனது திருநாமத்தால் ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதிலிருந்து பிஸ்மில்லாஹ்வின் மகத்துவத்தை நாம் தெளிவாக உணரலாம். திருக்குர்ஆனை ஓதும் போது மட்டுமின்றி எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கொண்டே நாம் துவக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நபித்தோழர்கள் சிலர் உளூச் செய்வதற்காகத் தண்ணீரைத் தேடினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்தார்கள்.
அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் விரல்களிலிருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (அப்போது) நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்? என்று நான் கேட்டதற்கு சுமார் எழுபது நபர்கள் என்று அனஸ் (ரலி) பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித்; நூல்: நஸயீ 77
உன் வலக்கரத்தால் உண்! அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உனக்கு அருகே உள்ளதை உண்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் அபீ ஸலமா (ரலி); நூல்: புகாரி 5376
மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பும் பிஸ்மில்லாஹ் கூற வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்துள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 3271
அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போதும் இறைவனின் திருப்பெயர் கூறியே அறுக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆனின் 6:118, 6:121 ஆகிய வசனங்களும், நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன.
ஆனால் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற இதே சொல்லைத் தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. ஏனெனில் உண்ணும் போது, அறுக்கும் போது, உடலுறவு கொள்ளும் போது என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) பிஸ்மிக (உன் பெயரால்) என்பது போன்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
அது போன்ற சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு கற்றுத் தந்தார்களோ அதனையே கூறுவது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றுவதாகும். எந்தச் சந்தர்ப்பங்களில் வேறு விதமாக சொல்லித் தரவில்லையோ அது போன்ற சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறலாம்.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன், அர்ரஹ்மானிர் ரஹீம் மாலிகி யவ்மித்தீன்
ரப்புல் ஆலமீன்
ரஹ்மான்
ரஹீம்
மாலிகி யவ்மித்தீன்
ஆகிய நான்கு பண்புகளைக் கொண்ட அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பது இதன் கருத்து. இந்நான்கு பண்புகளிலும் இறைவனுக்குரிய அனைத்து இலக்கணங்களும் அடங்கியுள்ளன. இப்பண்புகளைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளும் எவரும் அல்லாஹ்வை முழுமையாகப் புரிந்து கொள்கின்றனர்.
இந்த நான்கு பண்புகளுக்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று இங்கே கூறப்படுவதால் அல்லாஹ் எனும் திருப்பெயர் பற்றி முதலில் ஆராய்ந்து விட்டு பின்னர் இந்நான்கு பண்புகளை ஆராய்வோம்.