நாரே தக்பீர் பொருள் என்ன❓
‘நஅர’ (நூன் ஐன் ரா) என்ற அரபுச் சொல்லிலிருந்து பிறந்தது தான் ‘நஃரதுன்’ என்ற சொல். நஅர என்றால் உரத்து சப்த மிட்டான் என்பது பொருள். ‘நஃரதுன்’ என்றால் உரத்துச் சப்தமிடுதல் எனப் பொருள் வரும். நஃரதுன் என்பதை ‘நஃரா’ எனவும் உச்சரிக்கலாம்.
பள்ளிவாசல்களில் ஒரு காலத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வகைக் கொட்டுக்கு ‘நகரா’ என்று கூறுவதும் இந்தச் சொல்லின் மறு உருவம் தான். நஃரா தக்பீர் என்றால் தக்பீரை (அல்லாஹு அக்பர் என்பதை) உரத்த குரலில் கூறுதல் எனப் பொருள் வரும். ஆனால் இதே சொல் அரபு மொழியிலிருந்து பாரசீக, உருது மொழியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அரபு மொழி இலக்கணப்படி உச்சரிப்பதாக இருந்தால் ‘நஃரதுத் தக்பீர்’ என்று கூற வேண்டும். பார்சி மொழியில் ‘நஃரயே தக்பீர்’ என்று கூற வேண்டும். இது தான் ‘நாரே தக்பீர்’ என்று மருவி விட்டது.
‘நாரே தக்பீர்’ என்று கூறும் போது பார்சி, உருது, அரபி ஆகிய மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ‘தக்பீர் கூறுங்கள்’ என்று விளங்கிக் கொள்வார்கள். ஆனால் முஸ்லிம் லீக் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் வடநாட்டிலிருந்து ஜிந்தாபாத் (வாழ்க) என்ற சொல்லைப் போல் நாரே தக்பீர் என்பதும் நுழைந்து விட்டது.
மார்க்க அடிப்படையில் இதைக் கூற வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆர்ப்பாட்டம் போன்ற மக்கள் திரளைக் கூட்டும் போது பெருமை வந்து விடக் கூடாது என்பதற்காக தக்பீர் கூறுங்கள் எனக் கூறும் வழக்கம் வந்தது. தமிழ் மொழியிலேயே ”தக்பீர் கூறுங்கள்” என்று சொல்லியிருந்தால் இதில் எந்தச் சந்தேகமும் ஏற்பட்டிருக்காது. இது இபாதத்தோ இதைக் கூறுவது மார்க்கத்தில் சுன்னத்தோ இல்லை.