நயவஞ்சகர்கள் போரில் பின்வாங்கிய போது இறங்கிய வசனம்
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’ என்றனர்.
அப்போது ‘நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. ‘நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 1884)
4589 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 4:88ஆவது இறைவசனம் குறித்துக் கூறியதாவது:
(உஹுதுப் போருக்காக) நபி (ஸல்) அவர் களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்து விட்டனர். இவர்கள் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர்.
ஒரு பிரிவினர், (நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்றுவிடுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!) என்று கூறினர். மற்றொரு பிரிவினர் (வெளிப் படையில் முஸ்லிம்களாகிய அவர்களைக் கொல்ல) வேண்டாம் என்று கூறினர்.
அப்போது தான் , உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்து விட்டான் எனும் (4:88ஆவது) இறைவசனம் இறங்கிற்று.