மனைவிமார்களுக்காக தேனை ஹராமாக்கிய போது அல்லாஹ் இறக்கிய வசனம்
நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களிடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக அல்லாஹ் ஹலாலாக்கிய தேனை ஹராமாக்கினார்கள். இதனை கண்டித்து அல்லாஹ் பின்வரும் செய்திகளை கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் ‘நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்’ என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.
எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள்.
எனவே, ‘நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கி ‘நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)’ என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
(இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா(ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) ‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்’ என்பது ‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)’ என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 5267