ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு, ஜகாத் உண்டா❓
*நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா❓*
பதில் : இல்லை.
நமது செல்வங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுது கொள்ளுங்கள். உங்கள் மாதம் (ரமலானில்) நோன்பு வையுங்கள். *உங்கள் செல்வங்களுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றுங்கள்.* உங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்கள் இறைவனுடைய சொர்க்கத்தில் நுழைவீர்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : திர்மிதீ (559)
நகைக்கு ஸகாத் கொடுத்து விட்டால் அந்த செல்வத்துக்குரிய கடமை நிறைவேறி விடுகின்றது. இதன் பிறகு *அந்த நகையை விற்று வேறு பொருள் வாங்கினால் பொருள் மாறுபட்டாலும் செல்வம்* என்ற அடிப்படையில் இதற்குரிய கடமை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது.
இப்போது *அதே செல்வம் தான் வேறு வடிவமாக மாற்றப்பட்டுள்ளது.*
எனவே வாங்கப்பட்ட புதிய பொருளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்களிடம் உள்ள பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டு அந்தப்பணத்தில் இருந்து வீடோ வேறு சொத்தோ வாங்கினால் அப்போதும் இது தான் நிலை.