தொழுகையில் இரண்டாம் ரக்அத்
முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல் அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு வர வேண்டும். பின்னர் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்காராமல் நிலைக்கு வர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி),
நூல்: புகாரி 823
முதல் ரக்அத்தில் ஓதிய அனைத்தையும் இரண்டாம் ரக்அத்திலும் ஓத வேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் ஸூரத்துல் ஃபாத்திஹாவிற்கு முன் ஓதிய ஆரம்ப துஆக்கள் இரண்டாம் ரக்அத்தில் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 941
இரண்டாம் ரத்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும், துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும், சுப்ஹிலும் செய்வார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்கள்: புகாரி 776, முஸ்லிம் 686
பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதில் ஓதவேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும்.
-—————————-
தொழுகை சட்டங்கள்