மார்க்கத்தை மறந்த மங்கையர்
அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களுக்குக் கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான். அவர்களுக்கு உணர்வுகளையும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் பிரித்து அறிவித்து இருக்கின்றான். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்க்கை வழிமுறைகளை இலகுவாகவும் எளிமையாகவும் கண்ணியமாக வாழும் வகையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.
ஆனால் நாம் மார்க்க விஷயத்தில் பெரும்பாலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறோம். முஸ்லிம்கள் பெண்கள் ஆடைகள் விஷயத்தில் மார்க்கம் சொன்ன கட்டுப்பாட்டை மறந்து அலட்சியம் காட்டுகின்றனர். ஹிஜாப் விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
ஒன்று, பர்தா எனும் அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியாமல் அடுத்தவர்களின் கண்களுக்கு மேனியை விருந்தாக்குகின்றனர்.
இரண்டாவது, பர்தா அணிந்து கொண்டு தலையில் முக்காடு இல்லாமல் அரசியல்வாதிகள் துண்டு போடுவது போல் கழுத்தில் மாலை போட்டுக் கொள்கின்றனர். மூன்றாவது, வெளியே தெரியலாம் என்று மார்க்கம் அனுமதித்த பகுதிக்கெல்லாம் கையுறை, காலுறை, முகத்திரை போன்றவற்றைப் போட்டு மறைத்து, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் எது அவசியம் இல்லையோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
சில முஸ்லிமல்லாத சகோதரிகள் கூட அழகான முறையில் ஆடை அணிந்து, வயிறு, இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகளை மூடி கண்ணியமான முறையில் உடலை மறைத்து வாழ்வதை நாம் பார்க்கிறோம்.
இயற்கையாகவே தாய்க்கு மகன் மீதும், தந்தைக்கு மகள் மீதும் மாறுபட்ட பாலினம் காரணமாக ஏற்படும் ஈர்ப்பினால் அன்பு, பாசம், புரிந்து கொள்ளுதல், ஒத்துப் போதல் போன்ற விஷயங்களில் இணைந்து செயல்படுவார்கள். பெண் பிள்ளைகள் தந்தையின் அதீதமான அன்பைக் கையில் எடுத்துக் கொண்டு மார்க்க விஷயத்தில் பேணுதல் இல்லாமல் சுதந்திரமாக உலா வருகின்றனர். ஆண்களும் தங்கள் மகள்களின், மனைவியின், சகோதரிகளின் ஆடைகள் விஷயத்தில் கவனக்குறைவாக உள்ளனர்.
திருமண நிகழ்ச்சிகள் என்றாலும், நான்கு பேர் ஒன்று கூடும் இடமாக இருந்தாலும் வரம்புகளை மீறி, வரைமுறைகளுக்கு உட்படாது ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். மஹ்ரமானவர்களுடனும் அந்நியர்களுடனும் புர்கா போன்ற முழு ஆடைகள் இல்லாமல் அரைகுறையான மெல்லிய ஆடைகளுடன் இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன்:24:31, 32.)
முக்காடுகளைத் தங்கள் மார்பின் மீது போட்டுக் கொள்ளுமாறு வல்ல இறைவன் கூறுகின்றான். கால்களைத் தரையில் அடித்து நடக்க வேண்டாம் என்று கூறுகின்றான். ஆனால் நமது பெண்களோ எந்த டிசைனில் உள்ளாடை அணிந்தால் ஆண்களின் பார்வை தம்மீது படும் என்றும் எவ்வளவு அகலமான சலங்கை அணிந்தால் மற்றவர்களை ஈர்க்க முடியும் என்றும் கால்களைத் தரையில் அடித்து நடப்பதைப் பார்க்கிறோம்.
அல்லாஹ் விடுத்துள்ள எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமல் நமது வீட்டின் மணவிழாக்களையும் விருந்துகளையும் படம் பிடித்து பந்தி வைக்கிறோம். நமது குடும்பத்தினரின் மானத்தையும் கற்பொழுக்கத்தையும் மாற்றான் கண்டு ரசிக்கும் வகையில் சிடிக்களாக, டிவிடிக்களாக மாற்றி மானமிழக்கிறோம்.
தாய்மார்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அவர்களின் ஆடை நிலையும் அப்படித்தான் உள்ளது. பெண்களைப் பொத்தி, பாதுகாத்து வளர்க்க வேண்டிய பெற்றோர்களே வெட்க உணர்வு இல்லாமல், ரோஷம் இல்லாமல் தன் வீட்டுப் பெண்களிடம் அதை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள். வெட்கம் என்பது ஈமானின் கிளைகளில் ஒன்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் யாரை வேண்டுமானாலும், யாராக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றி கயவர்கள் விலைபேசி விடக்கூடிய காலகட்டம் இது. விடலைப் பருவத்தில் பெண் பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் தாய்மார்களுக்கும் பெரும் பங்குண்டு.
முதலில் ஆடை விஷயத்தில் நாம் கண்ணியத்துடன் செயல்பட்டால் நம் பிள்ளைகளையும் செப்பனிட்டு விடலாம். பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் பருவம் அடைந்து விடுவதால் பர்தா அணிந்து வெளியில் செல்ல இந்தப் பெண்கள் சங்கடப்படுகின்றார்கள்.
சிறு வயதிலேயே வெட்க உணர்வையும் கூச்சத் தன்மையையும் ஏற்படுத்தி, அவர்களின் ஆடையை முழுமைப்படுத்தி விட்டால் பிற்காலத்தில் ஏற்படும் பல்வேறு சங்கடங்களையும் சச்சரவுகளையும் நிச்சயமாகத் தவிர்த்துக் கொள்ளலாம். வல்ல அல்லாஹ் சொன்னபடி நாம் நடந்தால் நம்மைக் காக்க அவனே போதுமானவன். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
மார்க்க அடிப்படையில் தனது தந்தை அல்லது சகோதரன் சொல்வதை நல்லொழுக்கம் உள்ள, இறைவனுக்கு அஞ்சிய எந்தவொரு பெண்ணும் மறுக்க மாட்டாள். உலக இன்பங்களுக்காகவும், கல்வி, பொருளாதாரம் திரட்டுவதற்காகவும் உங்கள் பெண்களை வற்புறுத்தும் நீங்கள், படைத்த இறைவன் பற்றியும் அவனது சட்டதிட்டங்கள் பற்றியும், ஆடை விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றியும் நீங்களும் அறிந்து கொண்டு, உங்கள் குடும்பத்தாருக்கும் சொல்லுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüயே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான்.
பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாüயாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி – 5200
ஒரு பொறுப்பாளர் என்ற முறையில் உங்கள் குடும்பத்தாருடன் அழகான முறையில் பொறுமையாகப் பேசுங்கள். இறைவனின் சட்டதிட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள். அப்படிச் சொன்னால் ஆடை விஷயத்தில் அவர்கள் உண்மையை உணர்வார்கள்; ஏற்றுக் கொள்வார்கள்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் அச்சமும் இருக்குமானால் மறுமையில் அவனை சந்திக்கவுள்ளோம் என்பதையும் நமது கேள்வி கணக்கு அவனிடம் உள்ளது என்பதையும் சிந்தியுங்கள்.
தன் மக்களுக்கு மார்க்கத்தை அறிமுப்படுத்தாமல் விட்டு விட்டால் படைத்த இறைவன் உங்களை விட்டுவிடுவான் என்று எண்ணாதீர்கள். அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக என்றும் அழியாது நீடித்து நிற்கும் மறு உலக வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவனை அஞ்சுபவர்களுக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்துவான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
(அல்குர்ஆன்:65:2.)