தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்.
பெரும்பாலும் ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவது உண்டு.
சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும்.
ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.
விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும்.
விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.
🔖அல்லாஹ்வின் தூதரே..! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்.
ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா..? என்று உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம் என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள், பெண்களுக்கும் விந்து வெளிப்படுமா..? என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப் பிறக்கின்றது..? என்று திருப்பிக் கேட்டார்கள்.
🔈அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
📒நூல்கள்:
புகாரீ 3328 முஸ்லிம் 471
🔖நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது, அல்லாஹ்வின் தூதரே..! தன் கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வது போல் ஒரு பெண் கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா..? என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும் என்று விடையளித்தார்கள்.
🔈அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி)
📒நூல்:
அஹ்மத் 25869
விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.