இறை நினைவு
—————————
மனிதனாகப் பிறந்த எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதில்லை.
இது போன்ற சோதனைக் காலங்களில் நமக்கு மன அமைதியைத் தரும் அருமருந்து அல்லாஹ்வை நினைப்பதாகும்.
இறைவனை நினைவு கூர்வதால் எவ்வளவு பெரிய கவலைகளும் இல்லாமல் போய்விடும்.
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
(அல்குர்ஆன்:13:28)
படைத்தவனை நினைவு கூராமல் ஒருவன் இருந்தால் அவன் இறந்த உடலுக்குச் சமம் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
உயிருடன் இருக்கும் காலமெல்லாம் படைத்தவனை நினைவு கூர்வது அவசியமாகும்.
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: புகாரி (6407)
அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: முஸ்லிம் (1429)
மன அமைதியையும் இறையருளையும் அள்ளித் தரும் இறைநினைவு அதிகமதிகம் நம்மிடம் இருக்க வேண்டும். இறைநினைவு அதிகம் இருக்கும் போது ஷைத்தானின் ஆதிக்கம் இல்லாமல் போய்விடும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்!
(அல்குர்ஆன் 33:41)
அல்லாஹ்வை நினைவு கூர்வது சாதாரண விஷயமல்ல. அதில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்! அதனால்தான் அல்லாஹ் இறைநினைவு மிகப் பெரியது என்று குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன்:29:45)
——————————
ஏகத்துவம்