- தியாக உள்ளம் கொண்ட நபித்தோழர்களின்..*
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள்.
அப்போது அவர்கள், எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்? அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?
என்று கேட்டார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (விருந்தளிக்கிறேன்) என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார்.
(மனைவியிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து என்று கூறினார்.
அதற்கு அவரின் மனைவி, நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை என்று கூறினார்.
அதற்கு அந்த அன்சாரித் தோழர், உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு என்று கூறினார்.
அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார்.
பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார்.
பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.
காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான் என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள் என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 3798
தான் வறுமையான சந்தர்ப்பத்தில் கூட நபிகளார் கூறிய விருந்தோம்பல் குறித்து முக்கியத்துவம் அளித்த ஸஹாபிய தம்பதியினரின் செயல்களை பார்த்து அல்லாஹ்வே சிரிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அந்தளவிற்கு அவர்களின் தியாக பண்பு இருந்திருக்கின்றது.
——————
ஏகத்துவம்