அந்நியப் பெண்களுடன் பேசலாமா?

நான் பணிபுரியும் நிறுவனத்தில் பெரும்பாலும் பெண்களே இருக்கின்றனர். அவர்களுடன் நான் பேசலாமா

ஒரு ஆண் அந்நியப் பெண்களிடம் எந்தவிதமான பேச்சுக்களையும் பேசக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தவறான நோக்கமின்றி தேவை ஏற்படும் போது அந்நியப் பெண்களிடம் பேசியுள்ளார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பெண்களிடம் ஆண்கள் அறவே பேசக் கூடாது என்று மார்க்கத்தில் தடுப்பதாக இருந்தால் இத்தா இருக்கும் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் தடுத்திருப்பான். ஏனெனில் இத்தா காலத்தில் அந்தப் பெண்கள் திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் இத்தாவில் இருக்கும் பெண்களிடம் கூட அந்நிய ஆண்கள் பேசுவதை அல்லாஹ் பின் வரும் வசன்ங்களில் அனுமதிக்கிறான்.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ்; அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர் ஆன் 2:234,235

இத்தாவில் இருக்கும் பெண்களிடம் அந்நிய ஆண்கள் திருமணம் குறித்து நேரடியாகப் பேசாமல் சாடைமாடையாக பேசலாம் என்பதையும், மற்ற நல்ல பேச்சுக்களைப் பேசலாம் என்பதையும் இவ்வசனங்கள் அனுமதிக்கின்றன. இத்தாவில் உள்ள பெண்களிடம் பேசலாம் என்றால் மற்ற பெண்களிடம் பேசுவதற்குத் தடை இல்லை என்பது உறுதி.

வேலை தொடர்பாக பெண்களிடம் பேசுவது குற்றமல்ல. அதே நேரத்தில் இந்தப் பேச்சுக்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான பேச்சுக்களைத் தாண்டி பெண்களுடன் கொஞ்சிக் குலாவுவதும் குழைந்து பேசுவதும் கூடாது.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

அல்குர்ஆன் 33:32,33

மேலும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 2611

உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 109

எனவே இந்த ஒழுங்குமுறைகளுடன் பெண்களிடம் பேசலாம்.
—————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *