இறைநினைவே நிம்மதிக்கான வழி
—————————————————-
இறை நினைவில்தான் நிம்மதியுள்ளது என்ற அந்த வழிமுறைகளின் ஒட்டுமொத்த சாரம்சத்தைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியுறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் நிம்மதியுறுகின்றன.

(அலகுர்ஆன்:13:28.)

எல்லா மதங்களும் கூறுவது போன்று, ஆன்மீக தியானத்தில் மன நிம்மதி ஏற்படும்; அதனால் தனியாக அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்யுங்கள் என்று பொதுவாக இஸ்லாம் சொல்லவில்லை.

இதில் கூறப்படும் இறை நினைவு என்பது தியானத்தை மாத்திரம் குறிக்கும் நினைவல்ல. இறை நம்பிக்கை, அச்சம், வழிபாடு, மறுமை சிந்தனை என்று அல்லாஹ் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை முறைப்படி வாழ்வின் ஒவ்வொரு நேரத்தையும் இறை நினைவுடன் வாழக்கூடிய வாழ்க்கை முறையாகும்.

ஆழமான இறைநம்பிக்கை நம் வாழ்வில் எப்போது நிம்மதியை இழக்கிறோம் எனில் ஒரு சோதனை, கஷ்டம் நமக்கு வருகிற போதுதான்.

வாழ்வில் எந்தவொரு கஷ்ட நஷ்டம் வந்தாலும் இறைவன் நிச்சயம் நமக்கு இதிலிருந்து ஒரு விடியலைத் தருவான் என்ற நம்பிக்கை வேண்டும்.

சிலர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு அதற்காக உதவ நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் முன்வராவிட்டால் உலகமே சுருங்கி விட்டதைப் போல் இடிந்துவிடுகிறார்கள்.

அந்தக் கலக்கம் நம் வாழ்வின் நிம்மதியைக் குலைத்துவிடுகிறது. குடும்பத்தில் உள்ள சந்தோஷத்தைக் கெடுத்துவிடுகிறது. நெருக்கத்தை அழித்துவிடுகிறது. நான்கு மனிதர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கை வைத்து, அவர்கள் உதவ முன்வராததால் இடிந்து போகின்றோம்.

அந்த நான்கு பேர் இல்லை என்றதும் அவ்வளவுதான் முடிந்தது என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். நான்கு நபர்களின் மீது வைத்த நம்பிக்கை, படைத்த இறைவனின் மீது இல்லாமல் போனதையே இந்த நிலை படம் பிடித்துக் காட்டுகிறது.

இத்தகைய பலவீனமான இறை நம்பிக்கை இருக்கும் என்றால் சிறு கஷ்டம் கூட பூதாகரமாக நமக்குத் தெரியும். ஆழமான இறைநம்பிக்கை இருக்கும் எனில் பெருங்கஷ்டங்கள் கூட இறைவன் எனக்கு உதவுவான் என்ற நம்பிக்கையால் சுக்கு நூறாக்கப்படும். நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இதற்கு சான்றாகப் பார்க்கலாம்

\இறைஉதவியும் நிம்மதியளிக்கும்\

நீங்கள் (இறைத்தூதராகிய) இவருக்கு உதவி செய்யாவிட்டால், இருவரில் ஒருவராக அவர் இருக்கும் நிலையில், இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரிலிருந்து) வெளியேற்றிய போது அவருக்கு அல்லாஹ் உதவி செய்திருக்கிறான்.

இருவரும் (ஸவ்ர்) குகையில் இருக்கும் சமயத்தில் நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று அவர் தமது தோழரிடம் கூறினார்.

அப்போது அல்லாஹ் அவர் மீது தனது அமைதியை இறக்கிவைத்தான். நீங்கள் காண முடியாத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். இறைமறுப்பாளர்களின் கொள்கையை தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வுடைய கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன்.

(அல்குர்ஆன்:9:40.)

நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி) அவர்களையும் எதிரிகள் துரத்துகின்றனர். அப்போது இருவரும் ஒரு குகையில் தஞ்சம் அடைகிறார்கள். இருவரும் எதிரிகளிடம் பிடிபடுகின்ற சூழல் நிலவுகிறது. எதிரிகளிடமிருந்து காப்பாற்ற உதவிக்கு யாரும் அங்கிருக்கவில்லை.

அந்த நிலையிலும் உலகமே இருண்டு விட்டதைப் போன்று இடிந்துபோய்விட வில்லை. இரும்பின் திடத்தை விட பலமான நம்பிக்கை கொண்டு இறை உதவியை எதிர்பார்த்தார்கள்.

இறைவன் நம்மைப் பாதுகாப்பான் என்ற சிந்தனை, நெருக்கடியான நிலையையும் கூட அவர்களுக்கு நிம்மதியாக மாற்றியது.

ஆனால், இன்று சிறுசிறு கஷ்டங்கள் வந்ததும் கலக்கம் கொண்டு கவிழ்ந்துவிடுகிறோமே! அதுவே நிம்மதியற்ற வாழ்வின் பிறப்பிடம். இறைவன், தான் விரும்புகின்ற அடியார்களின் நம்பிக்கையின் ஆழத்தை அளக்க கஷ்டங்களைக் கொடுப்பான் என்பதை மனிதன் மறந்துவிடுகிறான்.

\விதியின் நம்பிக்கை\

இந்த உலகத்திலேயே ஒரு பொருளாதாரம் நமக்குக் கிடைக்கிறது என்றால் அதற்காக எவ்வளவோ கஷ்டம் கொள்கிறோம்.

நாளை மறுமையில் நாம் இந்த உலகத்தில் அடைகின்ற கஷ்டத்திற்காக நன்மைகள் கிடைக்கிறது எனும் நம்பிக்கை ஆழமாகும் போது கஷடங்கள் எல்லாம் தூசுகளாகும்.

எல்லாம் நன்மைக்கே! எல்லாவற்றிற்கும் மேலாக விதி தொடர்பான நம்பிக்கை சரியாக இருந்து விட்டால் கவலைகள் நீங்கி, நிம்மதி பெறலாம்.

எதிர்காலத்திற்காக முயற்சி செய்ய வேண்டும். இறந்த காலத்திற்காகக் கவலைப்படக்கூடாது. எது கிடைத்தாலும் அல்லாஹ் வழங்கியது என்ற பணிவு வேண்டும்.

தன்னால் கிடைத்தது என்ற அகந்தை கூடாது. தவறிவிட்டால் அதற்காகக் கலங்கக் கூடாது என்பதற்காகவே விதி ஏற்பாடு.

அதில் கடைசி எல்லை வரை தாக்குப் பிடிக்கிறோமா என்பதுதான் இறைவன் நமக்கு கொடுக்கும் சோதனை.

அத்தகைய கட்டங்களில், எத்தனை கஷ்டங்கள் வந்தாலென்ன? அல்லாஹ் இருக்கிறான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தான் உள்ளத்தைக் கலக்கம் கொள்ளாமல் நிம்மதியுடன் பெருமூச்சு விட வைக்கிறது.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்).

கர்வமும், பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்:57:22, 23.)
——————————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *