ஆணவத்தால் அழிக்கப்பட்டவர்கள் .!

மனிதன் இவ்வுலகில் வாழும் போது தன்னை அனைத்திலும் முன்நிருர்த்திக் கொள்கிறான். தான் என்கிற அகம்பாவம் கொண்டவனாக பெருமையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன்னிடம் உள்ளதை வைத்துக்கொண்டு ஆணவத்தை வெளிப்படுத்துகிறான்.அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆணவத்தால் அழிந்துபோனவர்களைப் பற்றி கூறுகிறான்.

//கடுகளவும் இருக்கக் கூடாது//

‘தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் (148)

//பெருமை இறைவனுக்கு மட்டுமே உரியது//

வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(திருக்குர்ஆன்:45:37.)

பெருமை என்பது இறைவனுக்கு மட்டுமே உரியது. அதற்குத் தகுதியுள்ளவன் இறைவன் மட்டுமே! இறைவனுக்கு மட்டுமே உரித்தான பண்பை எவரும் செய்யத் துணிந்தால் அவர் இறைவனால் வேதனை செய்யப்படுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியம் அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறுகிறான்:) ஆகவே (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்லிம் (5114)

//அல்லாஹ் நேசிக்க மாட்டான்//

(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 31:18.)

//ஆனவக்கரர்களுக்கு இறைவன் விடும் சவால்//

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

(அல்குர்ஆன்:17:37.)

//ஆணவத்தால் அழிக்கப்பட்ட காரூன்//

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்பமாட்டான்” என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது” என்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்” என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 28:76-78)

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

(அல்குர்ஆன்:28:81.)

ஆணவத்தால் அழிக்கப்பட்ட ஆது சமூதாயம்

அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் – அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.

(அல்குர்ஆன்:41:15.)

தாங்களின் வலிமையின் மூலம் அவர்கள் ஆணவம் கொண்டார்கள். அல்லாஹ் அவர்களின் அழிவை எப்படி ஆக்கினான்.என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
(அல்குர்ஆன்:69:7.)

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (அல்குர்ஆன்:69:8.)


//ஃபிர்அவ்னின் அழிவு
//

அவனும், அவனது படையினரும் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தனர். நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் எனவும் நினைத்தனர்.

எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். “அநீதி இழைத்தோரின் முடிவு எப்படி இருந்தது?” என்று கவனிப்பீராக!

(அல்குர்ஆன்:28:39,40.)

ஆணவம் கொண்டவர்கள் எங்கே?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமைநாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக்கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக்கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்கு முறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5376)

ஆணவக்காரரின் இருப்பிடம் நரகமே.!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், “அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. சொர்க்கம், “பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், “நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்” என்றும், சொர்க்கத்திடம், “நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்” என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), “உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்” என்று சொன்னான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5469)

எனவே ஆணவம் கொள்ளாமல் இவ்வுலகில் வாழ்ந்து மறுமையில் சுவனத்தை அடைவோமாக.!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed