நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் 

 

பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி)

அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள்.

பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை வள்ளலாக இருப்பினும், தன் மூலம் உதவி பெறும் ஒருவர், தனக்கோ தனது குடும்பத்திற்கோ கேடு விளைவிக்கிறார் எனில் அவர் மீது கடும் கோபம் கொள்வார்; தனது உதவிகளை நிறுத்திக்கொள்வார்.

அதே போன்றுதான் அபூபக்ர் (ரலி) அவர்கள், தனது அன்பு மகளாரும் முஃமின்களின் தாயாருமான ஆயிஷா (ரலி) அவர்களின் கற்பொழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் அவதூறு பரப்பப்பட்ட போது அந்த அவதூறைப் பரப்பியவர்களில் தன்னிடம் உதவிபெறும் மிஸ்தஹ் என்பாரும் ஒருவர் என்று அறிந்து, அவருக்குச் செய்து வந்த உதவிகளை நிறுத்திக் கொண்டார்கள்.

உடனே இறைவன் திருக்குர்ஆனில், ‘உதவிகளை நிறுத்த வேண்டாம்’ என்று கட்டளை பிறப்பித்ததும், தனிப்பட்ட கோபம் எவ்வளவு இருப்பினும் இறை வசனத்துக்குப் பணிந்தார்கள். உள்ளத்தில் குடிகொண்ட குரோதமும், பகைமையும் அகன்றது.

அல்லாஹ், “அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்’’ என்று தொடங்கும் (24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிட மாட்டேன்’’ என்று கூறினார்கள்… மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்……

உடனே அல்லாஹ், “உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். ‘அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்னும் (24:22) இறைவசனத்தை அருஜனான். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2661 (ஹதீஸின் சுருக்கம்)

கோபத்தை மென்று விழுங்கிய உமர் (ரலி)

நபித்தோழர்களில் உமர் (ரலி) அதிகம் கோபம் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி.

அந்தக் கோபத்தை அல்லாஹ்வின் வார்த்தையைக் கேட்டதும் விட்டொழிப்பவராக மாறியிருக்கிறார் உமர் (ரலி).

உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார்.

முதியவர்களோ, இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும், ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா’’ என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’’ என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.

உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’’ என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள்.

உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’’ (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்’’ என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: புகாரி 4642

 

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி)

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

“நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்’’ என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (மறுமைக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே “அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ எனக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்’’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!’’ எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 1461

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *