ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து விட்டேன் எனக்கு மன்னிப்பு உண்டா?
ஒரு பாவத்தைச் செய்து திருந்தி விட்டால் அந்தப் பாவத்தை பிறரிடம் பகிரங்கப்படுத்தக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, “இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (6069)
பொதுவாக ஆணும் பெண்ணும் தவறிழைப்பவர்களாகவே உள்ளனர். ஒழுக்க விஷயங்களிலும் இந்தத் தவறுகள் ஏற்படவே செய்கின்றன.
திருமணத்துக்கு முன்பு தன் வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் இந்தத் தவறுகளை வெளிப்படுத்தினால் பெரும்பாலும் யாரும் திருமணத்துக்கு உடன்பட மாட்டார்கள். இதனால் பலருக்குத் திருமணமே ஆகாத நிலை ஏற்படும்.
அப்படியே உடன்பட்டாலும் ஒரு நெருடல் அவருடைய மனதில் இருந்து கொண்டே இருக்கும். நாளடைவில் இதுவே குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகக் காரணமாகலாம்.
எனவே ஒருவர் தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி திருந்தி விட்டால் அவர் அத்தவறை செய்யாதவரைப் போன்றவராகி விடுகின்றார். இத்தவறைப் பிறரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது.
விபச்சாரம் செய்தவருக்குத் தண்டனை என்பது இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலே அத்தண்டனையை நிறைவேற்றும். இந்தியாவில் இஸ்லாமிய அரசு இல்லை என்பதால் இதற்கான தண்டனையை இங்கு நிறைவேற்ற முடியாது.
அதே நேரத்தில் இந்தப் பாவத்தை மன்னிப்பதும் மன்னிக்காமால் தண்டிப்பதும் இறைவனுடைய நாட்டத்தைப் பொறுத்து உள்ளது. எனவே நீங்கள் இந்தத் தவறுக்காக இறைவனிடம் அதிகமாக மன்னிப்புக் கேளுங்கள்.
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்க மாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்ய மாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்!
உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும்.
இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்ற சொன்னார்கள்.உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
நூல் : புகாரி (18)