நற்காரியங்களில் நிலைத்திருப்போம்
நேற்று தானே செய்தோம் என்றோ அல்லது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றோ எண்ணிக் கொண்டு எந்த நற்செயலையும் தள்ளிப்போடாமல், இயன்ற வரை அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடிக்கும். இது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்வதைப் பார்ப்போம்.
நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (1436)
‘நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்?’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்கமா
நூல்: புகாரி (1987)
நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் சிறப்பை எடுத்துக் கூறிய நபியவர்கள், அதற்கு முன்மாதியாகவும் திகழ்ந்தார்கள். அவ்வாறு நாமும் நமது செயல்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.