பரப்பப்பட்ட புழுதியாக மாற்ற வேண்டாம்

இந்த உலகத்தில் வாழும் போது, வெளிப்படையாக நல்லவனாகவும், மக்களுக்கு மத்தியில் சிறந்தவனாகவும், மிகச் சிறந்த இறையச்சவாதியாகவும் நடித்து விட்டு, மறைவில் இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் கேடுகெட்ட காரியங்களை அரங்கேற்றுபவர்களாக நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் என்னதான் வெளிப்படையாக நல்ல பல அமல்களை செய்தாலும், நல்லவனாக வலம் வந்தாலும், பிறருக்கு அறிவுரை கூறும் போது, தேன் போன்ற தித்திக்கின்ற வார்த்தைகளைக் கொட்டினாலும், தனிமையில் மறைவான சூழலில் இருக்கும் போது இறைவனுக்கு அஞ்சி நடக்கவில்லையென்றால், மறுமையில் நாம் அடைகின்ற கைசேதம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

“எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் ‘திஹாமா’ மலைகள் போன்ற நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!” என்றோம்.

அதற்கு நபியவர்கள் “அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: இப்னுமாஜா 4245

இந்தச் செய்தியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற மிக முக்கியமான வாசகத்தை நாம் உற்று நோக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அதாவது, திஹாமா மலை அளவுக்கு நன்மை செய்தவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக மாற்றி விடுவான். அத்தகைய கைசேதப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து நபித்தோழர்கள் கேட்கும் போது, ஒற்றை வார்த்தையில், இரத்தினச் சுருக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தார்கள்.

அதாவது, மக்களுக்கு மத்தியில் நல்லவன் போன்று நடந்து கொள்வார்; தொழுகையை நிறைவேற்றுவார்; அதிகமான உபதேசங்களை மக்களுக்கு எடுத்துரைப்பார்; இரவு வணக்கத்தில் ஈடுபடுவார்; ஆனால் தனித்திருக்கும் போதும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதும் தடை செய்யப்பட காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பார்.

இத்தகைய குணம் படைத்தவர்கள் எவ்வளவு பிரம்மாண்டமான, ஊர் மெச்சக்கூடிய அளவுக்கு அமல்கள் செய்தாலும் சரிதான், நெடுங்காலம் மார்க்கத்திற்காக தியாகம் செய்து, மார்க்கப் பணிகளைச் செய்து, அமல்களை சேர்த்து வைத்தாலும் சரிதான், எத்தனை பேர் சத்தியத்தை ஏற்பதற்குக் காரணமான இருந்தாலும் சரிதான். அத்தகைய நற்காரியங்கள் பரப்பப்பட்ட புழுதிக்குத்தான் சமம்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *