மன்னிப்பே சிறந்தது
சண்டையிட்டுப் பிரிந்து கிடப்பவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கிடையேயான ஈகோ பெரும் தடைக்கல்லாக நிற்கின்றது. தாமாக முன்வந்து சமாதானம் செய்து கொண்டால் மதிப்பிருக்காது, கவுரவம் குறைந்து விடும் என்று எண்ணியே பகைமை பாராட்டுகின்றார்கள்.
அவர்கள் தானே முதலில் சண்டை போட்டார்கள், அவர்களே முதலில் வந்து பேசட்டும், நான் ஒருபோதும் இறங்கிப் போக மாட்டேன் என்று வறட்டுக் கவுரவம் பார்ப்பவர்கள் ஏராளம்.
ஒருவரது தவறை மன்னிப்பது தான் சிறந்தது என்பதுடன், பிறரது தவறை நாம் மன்னிக்கும் போது நமது தவறை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று மார்க்கம் கூறுகின்றது.
அபூபக்ர் (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்’ என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்.
உடனே அல்லாஹ், “உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான்.
அதன் பிறகு அபூபக்ர்(ரலி), ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2661
நன்மையை நீங்கள் வெளிப்படையாகச் செய்தாலோ, அதை ரகசியமாகச் செய்தாலோ அல்லது (மற்றவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலோ அல்லாஹ் மன்னிப்பவனாகவும் ஆற்றல் மிக்கவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:149
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
அல்குர்ஆன் 42:43
கண்ணியத்தை உயர்த்திக் கொள்ளும் வழி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5047