அல்லாஹ்வினால் அதிகம் வலியுறுத்தப்பட்ட, அல்லாஹ்வின் தூதரால் அதிகம் உபதேசிக்கப்பட்ட உறவுகள்
மார்க்கத்தைக் கற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உறவைப் பேணி வாழ்வது குறித்தும், உறவைப் பேணி வாழாவிட்டால் ஏற்படும் விளைவு குறித்தும் அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:54
மனித வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழும் இந்த உறவுகளின் முக்கியத்துவம் குறித்து வல்ல இறைவன் கூறுகிறான்.
இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானவர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 8:75
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர். நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
அல்குர்ஆன் 33:6
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி)
நூல்: புகாரி 5984
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப் படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5985
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று இறைவன் சொன்னான்).
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5989