ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ்
49:2. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
(49:2 வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், “அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகின்றேன், அல்லாஹ்வின் தூதரே’’ என்று கூறினார். ஸாபித் பின் கைஸிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையுடன்) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி)யிடம், “உங்களுக்கு என்ன ஆயிற்று?’’ என்று கேட்டார். அதற்கு ஸாபித் பின் கைஸ் (ரலி), “மோசம் தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி வந்தேன். நான் நரகவாசிகளில் ஒருவன் தான்’’ என்று கூறினார். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்’’ என்று தெரிவித்தார்.
அந்த மனிதர் (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஸாபித் பின் கைஸ் (ரலி)யிடம் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸாபித் பின் கைஸிடம் சென்று, “நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்வீராக’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 4846, 3613
இந்த ஹதீஸை அறிவிப்பவர் அனஸ் (ரலி) அவர்கள் ஆவார்கள். அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான முன்னறிவிப்பு நிறைவேறியதை நேரில் காணும் பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.
மூஸா இப்னு அனஸ்(ரஹ்) யமாமா போரை நினைவு கூர்ந்த வண்ணம் கூறினார்.
(என் தந்தை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக் கொண்டிருந்தார்கள். அனஸ்(ரலி), ‘என் சிறிய தந்தையே! நீங்கள் (யமாமா போருக்கு) ஏன் வரவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இதோ! இப்போது வருகிறேன்’ என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கிவிட்டார்கள்.
பிறகு வந்து (போர் வீரர்களுடன்) உட்கார்ந்துவிட்டார்கள்.
அப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள் – (மக்கள் தோற்றுப் பின்வாங்குவதைக் கண்ட) ஸாபித்(ரலி), ‘எனக்கு விலகி வழிவிடுங்கள். நான் எதிரிகளுடன் போரிடுவேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இருந்த பொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் மிக மோசமானது’ என்று கூறினார்கள்.
இதை ஹம்மாத்(ரஹ்) அவர்களும் ஸாபித் அல் புனானி(ரஹ்) என்பவர் வாயிலாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்.
நூல்: புகாரி 2845
இது அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற நேர்முகமாகும். இந்த முன்னறிவிப்பை அறிவித்த அனஸ் (ரலி) அவர்களே களத்தில் அது நிறைவேறுவதைக் காணும் போது அவர்களைப் போன்ற இந்த நேர்முகம் நெகிழவைக்கின்றது.
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் தியாக மரணத்தில் இன்னொரு தகவுப் பொருத்தத்தையும் நாம் பார்க்க முடிகின்றது. அது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பேச்சாளராக ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் இருந்த நிகழ்வை நாம் புகாரியில் பார்க்க முடிகின்றது
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட) ‘முஸைலிமா’ எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், ‘முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன்’ என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது.
முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி(ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, ‘இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்க மாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத் தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர் தாம் ஸாபித், இவர் என் சார்பாக உனக்குப் பதிலளிப்பார்’ என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 4373