அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம்! அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்ற மகத்துவம் நிறைந்த ஓரிறைக் கொள்கையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் அருளால் பல்வேறு விதமான பொறுப்புகளையும், பதவிகளையும், அந்தஸ்துகளையும் மனிதர்களில் பெரும்பாலோர் பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
இந்தப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அனைவரும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொறுப்பை இறைவனின் புறத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்ற அமானிதம், சோதனை, இறைக்கட்டளை என்றே நம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம் .
பொதுவாகவே, ஒருவருக்கு கிடைக்கின்ற பதவி, அந்தஸ்து, அதிகாரம் இவைகளெல்லாம் நம்முடைய அறிவினாலோ, ஆற்றலினாலோ, திறமையினாலோ நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றது என்று ஒருவன் நம்பினால் அவனை விட மிகப்பெரிய முட்டாள் யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
மாறாக, நமக்குக் கிடைக்கின்ற பதவியாக இருந்தாலும், அந்தஸ்தாக இருந்தாலும், அதிகாரமாக இருந்தாலும், மக்களை நிர்வகிக்கின்ற எந்தப் பொறுப்பாக இருந்தாலும் இறைவனின் தனிப்பெரும் கிருபையினால் நமக்குக் கிடைத்திருக்கின்றது; எத்தனையோ அறிவிற் சிறந்தவர்கள், பட்டம் படித்தவர்கள், பணக்காரர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நம்மை இறைவன் தேர்ந்தெடுத்து இந்தப் பதவியைக் கொடுத்திருக்கின்றான்.
இது இறைவனின் மகத்தான கிருபை என்றே நம்முடைய உள்ளத்தில் ஆழப்பதிய வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். இன்றைக்குப் பெரும்பாலானோர் தனக்குக் கிடைத்திருக்கின்ற பதவி, அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றை புகழுக்காகவும், பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் பயன்படுத்திக் கொண்டு, மக்களை நம்ப வைத்து அரசியல் செய்து கழுத்தறுப்பதைப் பார்க்கின்றோம். ஆகவே இஸ்லாம் பொறுப்பு என்பது ஓர் அமானிதம் என்றும் அதை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. அவ்வாறு இஸ்லாம் விலியுறுத்தும் பொறுப்பை பற்றி காண்போம்..
பெரும்பாலான மக்கள் பதவியை ஒரு அதிகாரமாக கருதிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் . ஆனால் பதவி என்பது அமானிதம். அமானிதத்தை உரிய முறையில் பேணி மக்களின் நன்னம்பிக்கையைப் பெற வேண்டும்.
இன்னும் சொல்வதாக இருந்தால், பொறுப்புகளைப் பெறுகின்றவர்கள் புகழ், அதிகாரம், செல்வம் மற்றும் பல்வேறு உலக இன்பங்கள் ஆகிய காரணங்களுக்காகவே அந்த பொறுப்புக்கு ஆசைப்படுகின்றனர். இந்த அம்சங்களும் மிகச்சரியான முறையில் பயன் படுத்தப்படுமேயானால் பொறுப்பு வகிப்பவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் இறைவனைச் சந்திப்பார்கள்.
பொறுப்பு எனும் அமானிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பொறுப்பு ஓர் அமானிதம் என்றும், அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாளத் தவறினால் மறுமையில் மிகப்பெரும் இழிவையும், கைசேதத்தையும் சந்திக்க நேரிடும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
மேலும், அமானிதத்தை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் பற்றி நபி (ஸல்) அவர்கள் ஆழமாக வலியுறுத்துகின்றார்கள்.
துன்பத்தில் மிகப்பெரும் துன்பம்:
ஒருவர் ஆட்சிப் பதவியை அடைய போட்டி போடுகின்றார் , அல்லது தனக்கு மக்களை நிர்வகிக்கின்ற பதவி பல்லாண்டு காலம் கிடைக்க வேண்டும் என்று பேராசைப்படுகின்றார் . இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களுக்கு அந்தப் பதவி வெறி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, மறுமையில் பயங்கரமான துன்பமாக அமைந்து விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ القِيَامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وَبِئْسَتِ الفَاطِمَةُ»، وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُمْرَانَ، حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عُمَرَ بْنِ الحَكَمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَوْلَهُ
நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி(ப் பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது .
ஆதாரம்: புகாரி 7148
பால்குடியை மறக்கடிப்பதில் பதவிப்பால் தான் நிறுத்தவே முடியாத மோசமான துன்பம். பதவிக்காக ஆசைப்படுவோர் மறுமை நாளில் கடுமையான முறையில் வருத்தப்படுவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை பகர்கின்றார்கள்.
பதவியை கேட்டுப் பெறாதே!
ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَرَجُلاَنِ مِنْ قَوْمِي، فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ: أَمِّرْنَا يَا رَسُولَ اللَّهِ، وَقَالَ الآخَرُ مِثْلَهُ، فَقَالَ: «إِنَّا لاَ نُوَلِّي هَذَا مَنْ سَأَلَهُ، وَلاَ مَنْ حَرَصَ عَلَيْهِ
நானும் என் சமூகத்தாரில் இரண்டு பேரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்கமாட்டோம்’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரி 7149
பதவியை எனக்குத் தாருங்கள் என்று கேட்பவருக்கும், பதவி வெறி பிடித்து நிர்வாகப் பொறுப்பை ஆசைப்படுவோருக்கும் ஒருபோதும் இந்தப் பதவி வழங்கப்படக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் இந்த பதவி மோகத்தில் இருந்து காப்பாற்றி, உன்மையான இறையச்சத்தோடு பணிகள் செய்திட அருள் புரிவானாக.