மஹ்ரமான உறவுகள்
விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுவதைப் நாம் அறிவோம்.
இறைவன் முஃமின்களைப் பற்றிப் பேசும் போது சில பண்புகளைச் சொல்லிக் கொண்டே வந்து தங்களது கற்புக்களையும் பேணுவார்கள் என்று சொல்கிறான்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.
(அல்குர்ஆன்:23:1-7.)
கணவன், மனைவி மூலமாகவும் மனைவி, கணவன் மூலமாகவுமே தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வார்கள். இதுவல்லாத வேறு வழிகளைத் தேடமாட்டார்கள். அப்படித் தேடினால் அவர்கள் வரம்புகளை மீறியவர்கள், பாவிகள் என்று கடுமையாக எச்சரிக்கிறான்.
நாம் என்ன நிலைக்குச் சென்றாலும் குடும்ப அமைப்பில் இல்லறம் என்கிற முறையில் மாத்திரமே நம்முடைய உடல் சுகத்தை அனுபவிக்க வேண்டும். அதைத் தவிர வேறெந்த வழிமுறைகளிலும் முயற்சி செய்யவே கூடாது. இன்னும் இதில் விரிவாகச் சொல்வதாக இருந்தால், ஒழுக்கக் கேட்டைச் செய்யக் கூடாது என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதன் பக்கம் கூட நெருங்கவே கூடாது என்று மார்க்கம் சொல்லித் தருகிறது.
நெருங்குதல் என்பது எப்படியெல்லாம் ஏற்படும் என்றும், அந்த நிலைகளில் நம்மை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே மனித சமூகத்திற்கு இஸ்லாம் சொல்லித் தருகிறது. கணவன் மனைவி என்ற உறவு இல்லாத ஆண்களும் பெண்களும் தனித்திருப்பதை இஸ்லாம் இரு வகைகளில் பிரித்துப் பார்க்கிறது.
ஒரு ஆணோ பெண்ணோ யாரைத் திருமணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மஹ்ரம் என்ற உறவினர்கள் எனவும், மற்றவர்கள் மஹ்ரம் அல்லாத உறவினர்கள் எனவும் இஸ்லாம் பிரித்துப் பார்க்கிறது. யாரைத் திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுடன் தனியாக இருக்கலாம்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன்:4:23.)
உங்கள் அன்னையர் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் தன் தாயைத் திருமணம் முடிக்க முடியாது. அப்படியெனில் தாயும் மகனும் தனியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதேபோன்று ஒருவன் தனது மகளைத் திருமணம் முடிக்க முடியாது.
“உங்களது சகோதரிகள்’ என்றால் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி, தந்தை இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து அந்த மனைவியின் மூலம் பிறந்த பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி. தாய் இன்னொரு கணவனைத் திருமணம் முடித்து அவர் மூலமாகப் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி! இவர்கள் மூன்று பேருமே சகோதரிகளாவார்கள். இதுபோன்ற சகோதரிகளுடன் ஒரு ஆண் தனியாக இருந்து கொள்வது அந்த ஆணுக்குக் குற்றமில்லை.
தகப்பனுடைய சகோதரிகள் என்றால் மாமிகள், அத்தை என்றெல்லாம் சொல்கின்ற உறவு. யாரையாவது மாமி என்று சொல்லிக் கொண்டு அவர்களுடன் தனிமையில் அமரக் கூடாது. இங்கே சொல்லப்படுகிற மாமி என்பவர்கள் தந்தையுடன் பிறந்த அக்கா தங்கைகளைத் தான் குறிக்கும்.
அதேபோன்று அம்மாவுடைய சகோதரிகளுடன் தனியாக இருக்கலாம். அதாவது சிறிய தாயார், பெரிய தாயார் என்று அர்த்தம். அண்ணன் தம்பியின் பெண் பிள்ளைகள், அக்கா தங்கையின் பெண் பிள்ளைகளுடன் தனிமையில் அமரலாம், பேசலாம். நம் பிள்ளைகளைப் போன்று அவர்களைப் பார்த்து வரலாம். இவர்கள் அனைவரும் மஹ்ரமானவர்கள் தான்.
பாலூட்டிய தாயையும் திருமணம் முடிக்க முடியாது. அவர்களுடனும் தனிமையில் இருக்கலாம். பேசலாம். பாலூட்டிய தாய் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தால், பால்குடிச் சட்டத்தைத் தெரிய வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தில் பால்குடிச் சட்டம் என்பது, இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு, அக்குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அல்லாத வேறொரு பெண் பால் கொடுத்தால் அந்தக் குழந்தை பெரியவனாக மாறி திருமண வயதை அடைந்தால் அப்போது பால் கொடுத்த இந்தத் தாயைத் திருமண முடிக்க முடியாது.
பால் கொடுத்த இந்தத் தாய் அவளைப் பெற்றெடுத்த தாயின் அந்தஸ்தில் வைத்து பார்க்கப்படுகிறாள். அதே நேரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை அல்ல, குறைந்தது 5 தடவையாவது பால் அருந்திருக்க வேண்டும். அதேபோன்று பால்குடிச் சகோதரிகள் என்றால், எந்தத் தாயாரிடம் பால் குடிக்கிறோமோ அந்தத் தாய்க்குப் பிறந்த பெண் பிள்ளைகள் நமக்கு பால்குடிச் சகோதரிகள் ஆவர்.
அவர்களிடமும் சர்வ சாதாரணமாக இருந்து கொள்ளலாம். அதேபோன்று மனைவியின் தாயாராகிய மாமியார்கள் மஹ்ரமாவார்கள். மாமியார் வீட்டில் மருமகன் சாதாரணமாக இருக்கலாம். மாமியாருடன் தனிமையில் இருந்தாலும் தவறு என சொல்ல முடியாது.
ஆனால் நடைமுறையில் பெண்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட இந்தச் சட்டத்தை விளங்காமல் யார் யாரையெல்லாமோ அனுமதித்து விட்டு, மருமகனை அந்நியராகப் பார்க்கிற பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இது தவறான நடைமுறையாகும். மாமியாருக்கு மருமகன் என்பவர் பெற்றெடுத்த பிள்ளை போன்று பார்க்க வேண்டும்.
உங்கள் மனைவியின் மகளும் உங்களுக்கு மஹ்ரம் தான். உங்கள் மனைவியரின் மகள் என்றால், உங்களது மனைவி ஏற்கனவே ஒருவரைத் திருமணம் முடித்து மனைவியாக வாழ்ந்து அவர் மூலம் பெற்றெடுத்த பெண் பிள்ளை உங்களுக்கும் பிள்ளை அந்தஸ்து தான். அதேபோன்று மகனுடைய மனைவியும் மஹ்ரமானவள் தான். அதாவது மருமகள். இவர்களிடமும் தனியாக இருக்கலாம். பேசலாம். பழகலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கிறது.
எனவே மேற்சொல்லப்பட்ட உறவு முறைகளைத் தவிர்த்து வேறெந்த பெண் தனியாக இருந்தாலும் அவர்களிடத்தில் செல்ல முடியாது. பேசமுடியாது. பழக முடியாது. இதுதான் மஹ்ரம் என்பதற்கான சட்டமாகும்.
இந்த வசனத்தில் ஆண்களை மையமாக வைத்துத் தான் சட்டம் சொல்லப்படுகிறது. இதில் சொல்லப்பட்ட அதே உறவு முறைகளில் பெண்களுக்கும் இந்தச் சட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பெண் மகனுடன் தனிமையில் பேசலாம், பழகலாம். அதேபோன்று பெண் தனது தகப்பனாருடன் தனிமையில் இருக்கலாம், பேசலாம், பழகலாம்.
ஒரு பெண் தன்னுடைய அண்ணண் தம்பியுடன் தனிமையில் இருக்கலாம். அதேபோன்று பெண்ணுக்கு அவளது சகோதரர்களுடைய மகன்களுடன் தனிமையில் இருக்கலாம். அக்காள் தங்கையின் மகன்களும் மஹ்ரமாவார்கள்.
ஒரு பெண், தன் தந்தையுடன் பிறந்தவர்களான சித்தப்பா பெரியப்பா உடன் சாதாரணமாக இருந்து கொள்ளலாம். அதேபோன்று தன் தாயாருக்கு அண்ணன் தம்பிகளான மாமாவுடன் பேசிக் கொள்ளலாம்; தனிமையில் இருந்து கொள்ளலாம். அதேபோன்று பால்குடிச் சகோதரனுடனும் தனிமையில் இருக்கலாம்.
ஒரே தாயிடம் பால் குடித்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளைப் போன்றவர்களாவர். இவர்களுக்குள் திருமண உறவு கூடாது. இப்படி பால் குடிப்பது வெவ்வேறு காலகட்டமாக இருந்தாலும் சரி தான். பால்குடிச் சகோதரன் என்கிற அடிப்படை மாறாது.
தாயுடைய கணவனிடத்திலும் சாதாரணமாக நடந்து கொள்ளலாம். தாயுடைய கணவன் என்றால் முதல் கணவன் மூலம் பெற்றெடுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்குத் தாயாராக இருப்பவள் இன்னொரு கணவரைத் திருமணம் முடித்தால் அந்தக் கணவர் இந்தப் பெண்ணுக்கு தந்தை என்கிற அந்தஸ்தில் வந்து விடுவதினால் இவரிடத்திலும் சாதாரணமாக நடந்து கொள்ளலாம். தவறில்லை. அந்நிய உறவு என்று கருதக்கூடாது. அதேபோன்று கணவனின் தகப்பனராகிய மாமனாரிடத்திலும் அந்நிய உறவு என நினைக்கத் தேவையில்லை.
மேலே சொல்லப்பட்ட இந்த உறவு முறைகள் தான் ஓர் ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்டவர்கள். இவர்களல்லாத மற்ற எந்த உறவு முறைகளாக இருந்தாலும் அவர்கள் அந்நியர்களாவர். அவர்களுடன் தனிமையில் பேசவோ, அமரவோ, பழகவோ கூடாது என இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கின்றது.
ஏனெனில் குடும்ப அமைப்பு சிதைந்து நாசமாவதற்கும் ஒழுக்கங்கெட்டு இந்தச் சமூகம் மாறுவதற்கும் அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பது தான் காரணம் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே எச்சரித்துள்ளது.
தனிமையில் இருப்பது சம்பந்தமான எல்லைக் கோடு தான் திருக்குர்ஆனின் இந்த 4:23 வசனமாகும்.