பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்
பாவமானதையும், உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும் ஒப்புக் கொள்ளப்படும் என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடமையான தொழுகைக்குப் பின்..
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவில் கடைசியிலும் கடமை யாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள்.
அறி: அபூஉமாமா (ரலி),
நூல்: திர்மிதீ 3499
ஸஜ்தாவின் போது…
ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.
ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 482
இரவின் கடைசி நேரத்தில்…
இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகின்றான்.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 6321
மறைமுகமான பிரார்த்தனை
நாம் யார் மீது அதிகப் பிரியம் வைத்திருக்கிறோமோ அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நினைப்போம். அப்போது அவர்கள் முன்னிலையிலேயே பிரார்த்திப்பதை விட அவர்களுக்குத் தெரியாமல் மறைமுகமாகப் பிரார்த்திக்கும் போது அது கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்படும்.
நான் ஷாமுக்கு வந்து அபூதர்தாவிடம், அவரது வீட்டிற்குச் சென்றேன். அவரை நான் காணவில்லை. உம்மு தர்தாவை நான் கண்டேன். அப்போது அவர், “இந்த வருடம் நீங்கள் ஹஜ் செய்ய நாடுகின்றீரா?” என்று கேட்டார். அதற்கு நான், ஆம் என்றேன். அப்போது அவர், “நீங்கள் எங்களது நன்மைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்.
ஒரு முஃமினான மனிதர் தன்னுடைய சகோதரனுக்காக மறைமுகமாகப் பிரார்த்தித்தால் அவருக்கென்று சாட்டப்பட்டுள்ள மலக்கு பதிலளிக்கின்றார். அவர் தன்னுடைய சகோதரரின் நன்மைக்குப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அவருக்காக சாட்டப் பட்ட மலக்கு, “ஆமீன், உங்களுக்கும் அவ்வாறே ஆகட்டும்’ என்று கூறுவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : ஸவ்பான் (ரலி),
நூல் : முஸ்லிம் 2733
ஜும்ஆ நாளில்…
“வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் (அத்தஹியாத் இருப்பில்) அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை” என்று அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 6400
எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து பிரார்த்திப்போமாக!
ஏகத்துவம்