ஜனாஸா அடக்க சர்ச்சையும் விளக்கமும்
••••••••••••••••••••••••••••••••••
ஏகத்துவ கொள்கையை உயிர் மூச்சாக கொள்கின்ற அடிப்படையை பிரச்சாரம் செய்வது ஒரு பக்கம் என்றால், இறைப்பணிக்கு நிகராக சமூக/மனித நேய பணிகளும் இன்றியமையாதது என்று செயல்படுவதே தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை.
மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தற்போது நம் நாட்டையே உலுக்கியுள்ள கொரோனா பெருந்தொற்று காலத்திலும், சாதி, மத பாகுபாடு கடந்து அனைத்து மக்களுக்கும் நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும்.. அதன் மூலம்
சமூக நல்லிணக்கம் உருவாக வேண்டும், உண்மை இஸ்லாம் எது என்பதை இந்த சமூகம் உணர வேண்டும் என்பதே இந்த ஜமா அத்தின் குறிக்கோள்.
அந்த வகையில், மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், இரத்த தானம் என எண்ணற்ற பொது சேவைகளை நாம் செய்கிறோம்.
மத பேதமை கடந்து நற்பணிகள் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நாம் செய்கின்ற பணிகளில் மார்க்க விரோத காரியங்களோ இஸ்லாம் அங்கீகரிக்காத விஷயங்களோ கலந்து விடக் கூடாது என்பதும் முக்கியமாகும் என்பதை நாம் அறியாமலில்லை..
அந்த அடிப்படையில், இந்த கொரோனா பெருந்தொற்று கால பணிகளில் ஈடுபடுகின்ற மாவட்ட, கிளை நிர்வாகத்திற்கு மார்க்க ரீதியிலான சீரிய வழிகாட்டல்கள் மாநில தலைமை மூலம் வழங்கப்பட்டு தான் வருகின்றன.
குறிப்பாக, ஜனாஸா அடக்கம் என வருகின்ற போதும், ஏகத்துவ கொள்கை கொண்டவர்களின் மய்யித்தை அடக்கம் செய்வதற்குரிய வழிமுறைகளை மார்க்க அடிப்படையில் செய்வதைப் போல இணை வைப்பவர்கள் விஷயத்திலும் மார்க்க பேணுதல்கள் வழிகாட்டுதலாக தரப்பட்டன.
இணை வைத்த நிலையில் மரணித்தவராக இருந்தால் அவருடைய தொழுகையில் பங்கு கொள்ளக் கூடாது என்பது போல், இன்னபிற பித் அத்தான சடங்குகளிலும் நாம் பங்கு கொள்ளக் கூடாது என்பதை அனைவரும் அறிந்து தான் வைத்திருக்கிறார்கள்.
அதே போல் மாற்று மதத்தவர்களின் மய்யித்தாக இருந்தாலும், எவ்வித ஆதரவுமின்றி உற்றார், உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட மய்யித்தாக அது இருப்பின், அவற்றை, மார்க்க விரோத செயல்களுக்கு இடம் தராமல், எவ்வித பித் அத்துகளும் இல்லாமல் நாமே பொறுப்பெடுத்து அடக்கம் செய்யலாம் எனவும்,
உற்றார், உறவினர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் செய்கின்ற சடங்கு, சம்பிரதாயங்களுக்கு நாம் ஆதரவளிக்கும் வகையில் அந்த சபையில் நிற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தல்கள் தரப்பட்டன.
சடங்குகள் செய்து, மாலையுடனோ, மரப் பெட்டியில் (காஃபின் பாக்ஸ்) வைக்கப்பட்ட நிலையிலோ தரப்படும் ஜனாசாக்களையும் நாம் அடக்கம் செய்தல் மார்க்க விரோதமாகி விடும் எனவும் தெளிவான அறிவுறுத்தல்கள் கடந்த முதல் அலையின் போதே சுற்றறிக்கையாக சொல்லப்பட்டு தான் இருந்தன.
ஆனால்
மனிதர்கள் தவறிழைப்பவர்கள் என்கிற வகையில், தவறுக்கு கூட்டு நிற்பது என்கிற நோக்கமின்றி, கவனக்குறைவாக சில வரம்பு மீறல்கள் ஆங்காங்கே நடைபெறுவது என்பது சில சந்தர்ப்பங்களில் கொள்கை எதிரிகளால் பெரிதுப்படுத்தப் படும் போது,
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எவரும் 100% தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.
பித் அத்களை கடந்த 30 ஆண்டுகளாக எதிர்த்து பிரச்சாரம் செய்த ஜமாஅத்தினர், தற்போது அதற்கு ஆதரவாக தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
மணமகன் மாலை அணிந்திருந்த காரணத்தால் அப்படியான திருமணங்களை புறக்கணிப்போம் என சொல்லும் ஜமா அத்தினர், மாலையுடன் இருக்கும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் தயக்கம் காட்டவில்லை என்பதாக விமர்சிக்கின்றனர்.
நெருங்கிய சொந்தங்களின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் மனக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள், வேறெந்த உலக ஆதாயங்களை எதிர்பார்த்து இது போன்ற ஜனாசா விஷயங்களில் இருப்பார்கள்?
ஏனைய தன்னார்வ அமைப்புகளைப் போன்று ஜனாஸா அடக்கத்திற்கு குடும்பத்தாரிடமிருந்தோ அரசிடமிருந்தோ பணம் கூட இந்த ஜமா அத் வாங்குவதில்லை.
ஆக, தூய எண்ணத்துடன் செய்கின்ற செயலில் இது போன்ற வரம்பு மீறல் காணப்பட்டால் கவனக் குறைவு தான் காரணம் என்று இங்கு நல்லெண்ணம் கொள்ள முடியாதா??
பிறர் நலன் நாடுதலே இஸ்லாம் என்கிற அடிப்படை புரிதலில், மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் எனும்
நல்ல நோக்கத்தில்
ஆயிரக்கணக்கான நல்லமல்கள் மாநிலம் தழுவிய அளவில் நிகழும் போது, ஒரு சில சகோதரர்கள் ஆர்வமிகுதியால் மார்க்க வரம்பு மீறல்களை கவனிக்க தவறுவது என்பது நம் கட்டுப்பாட்டையும் மீறி நிகழ்ந்து விடும்.
அது தெரிந்தே செய்கின்ற தவறல்ல.. தவறு என்று அவர்களுக்கு போதிக்கப்படும் போது திருத்தில் கொள்ளக்கூடியதான பிழைகள் தாம்.
அதை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த ஜமா அத்தே வழி தவறி விட்டது என்று விமர்சிப்பது காழ்ப்புணர்வு மிகுதியால் செய்யப்படும் விமர்சனமாகவே கருதப்படும்.
ஜனாஸா விஷயத்தில் நடந்த மார்க்க வரம்பு மீறலை ஜமா அத் ஒப்புக் கொள்கிறது, அதை சரி காணவில்லை, நியாயப்படுத்தவுமில்லை.
அப்படியிருக்கையில், ஏதோ ஒட்டு மொத்த ஜமா அத்தே வழிதவறி சென்று விட்டதாக காட்ட நினைப்பதை காழ்ப்புணர்வின் வெளிப்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
கடந்த 2015 சென்னை புயல் நிவாரணப் பணிகளின் போதும் இதே போன்ற அற்பணிப்பு உணர்வோடு பல நிவாரணப் பணிகளை ஜமா அத் சகோதரர்கள் செய்தார்கள்.
ஒரு சில சகோதரர்கள் அதில் வரம்பு மீறுகின்ற வகையில் ஆர்வமிகுதியால் கோவிலை சுத்தப்படுத்துகிறோம் என்று புறப்பட்டதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
பிறருக்கு உதவுவதில் கூட மார்க்க வரம்புக்குள் நிற்க வேண்டுமே தவிர, கோவிலை சுத்தப்படுத்திக் கொடுப்பது என்பது மார்க்க அடிப்படையில் ஏற்கத்தக்க காரியமல்ல என்பது தான் அன்றைக்கும் ஒட்டு மொத்த ஜமா அத்தின் நிலைபாடாக இருந்தது.
ஒரு சிலரின் செய்கைகள் ஒட்டு மொத்த ஜமா அத்தோடு அன்று முடிச்சிப் போட்டுப் பார்க்கப்படவில்லை.
இன்றைக்கு ஜமா அத்தை விட்டு வெளியேறி, நம்மை விமர்சிக்குக் கூட்டத்தினர் அனைவரும் 2015ல் நம்மோடு பயணித்தவர்கள் தாம்.
ஆனால் அப்போது இது போன்ற காரியங்களை ஒருவர் கூட விமர்சிக்கவில்லை.
மாறாக..இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டதைப் போன்று எதிரிகளுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
காரணம், அன்றைக்கு மேற்சொன்ன அடிப்படையை அவர்கள் புரிந்திருந்தனர்.
இன்றைக்கு குரோதமும் காழ்ப்பும் அவர்கள் கண்ணை மறைக்கிறது !