மரணத்தருவாயில் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல்

ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1523, 1524

மேற்கண்ட நபிமொழிக்கு வேறு விதமாகப் பொருள் கொண்டு சிலர் குழப்புவதால் இது பற்றி சற்று அதிகமாக அறிந்து கொள்வது நல்லது.

மேற்கண்ட நபிமொழியில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் மவ்த்தா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு மரணித்தவருக்கு என்பதே நேரடிப் பொருளாகும். இதை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் இறந்த பின் அவருக்கு அருகில் லாயிலாஹ இல்லலல்லாஹ் என்று கூறிக் கொண்டு இருக்க வேண்டும் என்று குழப்பி வருகின்றனர்.

மவ்த்தா என்ற சொல்லின் நேரடிப் பொருள் மரணித்தவர் என்பது தான். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனாலும் சில சொற்களுக்கு நேரடிப் பொருள் கொள்ள இயலாத நிலை ஏற்படும் போது அதற்கு நெருக்கமான வேறு பொருள் கொள்வது எல்லா மொழிகளிலும் உள்ளது போலவே அரபு மொழியிலும் உள்ளது.

சிங்கத்தின் வீர முழக்கம் என்ற சொற்றொடரில் சிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் குறிப்பிட்ட வனவிலங்கு என்றாலும் அத்துடன் இணைந்துள்ள வீர முழக்கம் என்ற சொற்றொடர் சிங்கத்துக்கு நேரடிப் பொருள் கொள்வதைத் தடுக்கிறது. வனவிலங்கு எந்த முழக்கமும் செய்யாது என்பதால் வீரமிக்க ஒரு மனிதரைப் பற்றித் தான் பேசப்படுகிறது என்று புரிந்து கொள்வோம்.

அகராதியில் வனவிலங்கு என்று தானே பொருள் செய்யப்பட்டுள்ளது என்ற வாதம் இந்தச் சொற்றொடருக்குப் பொருந்தாது. இது போல் ஆயிரமாயிரம் உதாரணங்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. இதே அடிப்படையில் தான் மேற்கண்ட ஹதீஸும் அமைந்துள்ளது.

மரணித்தவரிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் கூறுங்கள் என்று சொல்லப்பட்டால் இவர்கள் செய்கின்ற வாதம் பொருந்தலாம்.

மரணித்தவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லிக் கொடுங்கள் என்பது தான் ஹதீஸின் வாசகம். சொல்வது வேறு! சொல்லிக் கொடுப்பது வேறு! சொல்லிக் கொடுப்பது என்றால் அவர் முன்னே நாம் ஒன்றைச் சொல்லி அவரையும் சொல்ல வைப்பதாகும்.

மரணித்தவருக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதால் இந்த இடத்தில் மரணத்தை நெருங்கியவருக்கு என்று தான் பொருள் கொண்டாக வேண்டும்.

(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்பவர்களே என்று திருக்குர்ஆன் (39.20) கூறுகிறது.

இதிலும் மய்யித் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை மய்யித் என்று அல்லாஹ் கூறுகிறான். இனி மரணிக்கப் போகிறவர் என்று இதை நாம் புரிந்து கொள்கிறோம். இந்த வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்திருந்தார்கள் என்று ஒருவர் கூட புரிந்து கொள்ள மாட்டோம்.

சொல்லிக் கொடுங்கள் என்று கூறுவதாக இருந்தால் செவியேற்பவருக்குத் தான் சொல்லிக் கொடுக்க முடியும்.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது. (27.80) என்று அல்லாஹ் கூறுவதால் மரணத்தை நெருங்கியவருக்கு சொல்லிக் கொடுங்கள் என்று தான் மேற்கண்ட நபிமொழியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இப்னு ஹிப்பான் என்ற நூலில் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு நபிமொழி நாம் கூறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான் 7/272

இந்த ஹதீஸிலும் மவ்த்தா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிற்பகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தை மவ்த்தா என்பதற்கு நாம் என்ன பொருள் செய்ய வேண்டும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. யாருடைய கடைசி வார்த்தை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைகிறதோ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மரணித்தவர் அருகில் மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்பது இதன் பொருளல்ல என்பதையும், மரணத்தை நெருங்கியவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்பதையும் இதிலிருந்து றிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த செயல் விளக்கமும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்சார்களில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது (அவரை நோக்கி) மாமாவே! லாயிலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்வீராக! எனக் கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர் (நான் உங்களுக்கு) மாமாவா? சிறிய தந்தையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் மாமா தான் எனக் கூறினார்கள்.

பிறகு அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது எனக்கு நன்மை பயக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12104, 13324

மரணத்தை நெருங்கியவர் அருகில் நாம் தான் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மரணத் தறுவாயில் உள்ளவரைச் சொல்லுமாறு நேரடியாகக் கூறக் கூடாது என்று சிலர் தவறாக நினைக்கின்றனர்.

நாம் இவ்வாறு கூறச் சொல்லும் போது அவர் மறுத்து விட்டால் அவர் இறை மறுப்பாளராக மரணிக்கும் நிலை ஏற்படும் என்று காரணம் கூறுகிறார்கள்.

இவர்கள் கூறுவது தவறு என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கலாம். மேலும் சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டுள்ளதால் நேரடியாகச் சொல்லிக் கொடுப்பதே நபிவழியாகும்.
——————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *