பெருமை
—————-
ஒருவர் சொர்க்கம் செல்ல விரும்பினால் முக்கியமான மூன்று பண்புகளுக்குத் தமது வாழ்க்கையில் இடமளித்து விடக்கூடாது என்ற அறிவுரையை வழங்கி அதில் முதலாவதாக பெருமை கூடாது’ என்ற நபிமொழி எடுத்துரைக்கின்றது.
பெருமை என்பது மனிதனுக்குத் தகுதியானதல்ல. அது முழுக்க முழுக்க இறைவனுக்கு உரிய பண்பாகும். எச்சமயத்திலும் மனிதன் பெருமை கொள்ளலாகாது.
வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 45:37
பூமியில் ஆணவத்தையும் குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு இறையச்சமுடையவர்களுக்கே!
(அல்குர்ஆன் 28:83)
பெருமை என்ற குணத்திலிருந்து விலகாத நிலையில் மரணத்தைத் தழுவினால் அத்தகையோர்க்கு நரகமே பரிசு என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.
தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரத்தில் நுழையமாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் (148)
எவனது உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளதோ அவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், ஒருவரின் ஆடையும் காலணியும் அழகானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். (இது பெருமையாகுமா?) என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும் மக்களை இழிவாகக் கருதுவதும் தான்
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் (147)
மனிதன் பெருமை கொள்வதற்குக் கல்வி, பொருளாதாரம், அழகு, அந்தஸ்து போன்றவை காரணங்களாக ஆகிவிடுகிறது.
இவையனைத்தையும் அல்லாஹ்வே நமக்கு வழங்கினான் என்ற உணர்வு மேலிட்டால் பிற மனிதர்களை அற்பமாகக் கருதும் மனப்பாங்கிலிருந்து விடுபட்டு, பெருமையை நமது வாழ்விலிருந்து இல்லாமல் ஆக்கலாம்.
———————
ஏகத்துவம்