தவறுகளின் பிறப்பிடம்
பொதுவாகவே மனிதன் செய்கின்ற தவறுக்கு மிக முக்கியக் காரணம் அவனது உடலிலே உள்ள ஒரு உறுப்பு தான். அந்த உறுப்பு விஷயத்தில் மனிதர்கள் கன கச்சிதமாகப் பாதுகாப்போடு நடந்து கொண்டால் மனிதனை வழி தவறச் செய்வதற்கு யாராலும் முடியவே முடியாது. அந்த உறுப்பு தான் உள்ளம். இந்த உள்ளத்தை எல்லா மனிதர்களுக்கும் இறைவன் பலவீனமாகவே படைத்திருக்கின்றான்.
இந்த உள்ளம் நன்மையான காரியங்களை அதிகம் செய்யத் தூண்டுவதை விட தீமையான காரியங்களைத் தான் அதிகமதிகம் செய்யத் தூண்டுகிறது. இந்த உள்ளம் எல்லா மனிதர்களுக்கும் மிக மிகப் பலவீனமானதாகவே படைக்கப்பட்டிருக்கின்றது.
பலவீனமான இந்த உள்ளத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்’’ என்று கூறி விட்டு, “இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 5161
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
உள்ளம் என்பது அல்லாஹ்வின் கரத்திலே இருக்கின்றது. அல்லாஹ் அந்த உள்ளத்தைப் புரட்டுகின்றான்.
நூல்:அஹ்மத் 13721
இன்னும் கூறுகிறார்கள்:
உள்ளம் என்பது பூமியிலே கிடக்கின்ற ஒரு இறகைப் போன்றது. எந்தத் திசையில் காற்று வீசுகிறதோ அந்தத் திசையை நோக்கி அது செல்கிறது.
நூல்: அஹ்மத்
மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பூமியிலே கிடக்கின்ற ஒரு இறகோடு ஒப்பிடுகிறார்கள். காற்று வீசும் திசையில் பறக்கும் இறகு போல் பலவீனமாக மனித உள்ளங்கள் இருக்கின்றன என்பதை இதிலிருந்து அறியலாம்.
வருந்தி, திருந்துவோருக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்
மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நாம் செய்கின்ற தவறுகளை எண்ணி வருந்தி, திருந்தி அந்தத் தவறுகளுக்காக இறைவனிடத்திலே சரணடைந்து மன்னிப்புக் கேட்டு விட்டால் நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். நாம் திருந்தியதற்காக நம்மைக் கண்ணியப்படுத்துகின்றான்.
இன்னும் கூடுதலாகச் சொல்வதென்றால், இறைவனுக்கு அஞ்சி நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற காரியங்களில் நான் ஈடுபட மாட்டேன் என்று உளப்பூர்வமாக உறுதி கூறினால் நமக்கு வழங்குகின்ற கண்ணியம், மகத்துவம், சிறப்பைப் போன்று வேறு யாருக்கும் இறைவன் வழங்கவில்லை என்று சொல்கின்ற அளவுக்கு இறைவன் நம்மைக் கண்ணியப்படுத்துகின்றான்.
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர்ஆன் 39:53