லைலத்துல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள்
இந்தத் தலைப்பிட்ட பிரசுரங்கள் ரமளான் மாதத்தில் எல்லா மஸ்ஜிதுகளிலும் பரவலாக வழங்கப்படுவதைக் காணலாம். அந்தப் பிரசுரங்களில் ஏராளமான வணக்கங்களைக் கூறியிருப்பார்கள். அதன் அடிப்படையில் குல்ஹுவல்லாஹு சூராவை நூறு தடவை ஓதி தொழுதல், தஸ்பீஹ் தொழுகை, கூட்டாக சப்தம் போட்டு திக்ரு செய்தல் என பல்வேறு வணக்கங்களை மக்கள் செய்து வருகின்றார்கள்.
இவை எதற்குமே ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.
பாக்கியமிக்க இந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தராத,பித்அத்தான செயல்களைச் செய்து நம்முடைய அமல்களை நாம் பாழாக்கி விடக் கூடாது.
லைலத்துல் கத்ரில் தொழ வேண்டியவை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ஒரு தனிப்பட்ட தொழுகையையும் கற்றுத் தரவில்லை.
ரமளானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவர்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவர்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள்‘ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸலமா,
நூல் : புகாரி 1147
லைலத்துல் கத்ருக்கு என பிரத்தியேகமாக எந்தத் தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக எடுத்துரைக்கின்றது. வழக்கமாக தொழும் இரவுத் தொழுகை 8+3 பதினொரு ரக்அத்துகளைத் தான் நபி (ஸல்) அவர்கள் நிறுத்தி, நிதானமாகத் தொழுதுள்ளார்கள்.
லைலத்துல் கத்ரில் சொல்ல
வேண்டிய துஆ
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கற்றுத் தந்தார்கள்.
அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ
பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதீ 3435
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் *லைலத்துல் கத்ரில் செய்வதெற்கென பிரத்தியேகமாகக் கற்றுத் தந்த ஒரு வணக்கம் உண்டென்றால் அது இந்த துஆ தான். *
எனவே இந்த துஆவை பிந்திய பத்து இரவுகளில் அதிகமாகச் செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி பிந்திய பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்து, அந்த இரவுகளில் நின்று வணங்கி ஆயிரம் மாதங்களை விட மேன்மையான அந்த லைலத்துல் கத்ரை அடைவோமாக!
——————-
ஏகத்துவம்