தவ்ஹீத் ஜமாஅத் நபிகளாரை இழிவுபடுத்தியதா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சொல்லப்படும் அவதூறுகளில் முக்கியமானது நாம் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்திப் பிரச்சாரம் செய்கிறோம் என்ற அவதூறாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, மூடநம்பிக்கையில் இருந்த மக்களை நபிவழியின் பக்கமும், இறைவனின் அருளால் நேர்வழியின் பக்கமும் நாம் அழைத்துப் பிரச்சாரம் செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளோம்.
சினிமா கூத்தாடிகளை தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வழிகேட்டின் பக்கம் சென்றவர்களெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் தனது இந்தப் பிரச்சாரத்தால் நபிகளாரை தங்களது ஹீரோவாக ஏற்று அவர்களைத் தங்களது வாழ்வின் வழிகாட்டியாகப் பின்பற்றி நடக்கும் இளைஞர் படையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில்தான் நபிகளாரை நாம் இழிவு படுத்திவிட்டதாக ஒரு அபாண்டத்தை நம்மீது நமது எதிரிகள் வீசுகின்றார்கள்.
அவதூறின் பின்னணி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களது மனைவியின் மீதும் பல்வேறு இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை ஆதாரப்பூர்வமான செய்தி என்ற பெயரில் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அந்தச் செய்திகள் திருக்குர்ஆனுக்கு முரணாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இன்னபிற போதனைகளுக்கு மாற்றமாகவும் இருப்பதால் அதுபோன்ற செய்திகளை பொய்யானவை என்று நாம் மறுக்கின்றோம்; இதனால் தான் நம்மீது இந்த அவதூறு சொல்லப்படுகின்றது.
இதைத்தான் நபிகளாரை நாம் இழிவுபடுத்துவதாக ஏகத்துவ எதிரிகள் பொய் பரப்பி வருகின்றனர்.
உதாரணத்திற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்தியை நாம் எடுத்துக் கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியை நாம் பொய் என்று கூறுகின்றோம்.
அது திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது மட்டுமல்லாமல், நபிகளார் குறித்து மக்கத்து காஃபிர்கள் என்ன குற்றச்சாட்டை, எந்த அவதூறைச் சொன்னார்களோ அந்த அவதூறை உண்மைப்படுத்தும் விதத்தில் அந்தச் செய்தி அமைந்துள்ளது என்றும் நாம் கூறுகின்றோம்.
நபிகளாரை மனநோயாளி என்று மக்கத்து காஃபிர்கள் அவதூறு பரப்பினார்கள். அவர்களது அந்த அவதூறை உண்மைப்படுத்தும் விதத்தில்தான் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.
இது குறித்து புகாரியில் இடம் பெறும் செய்திகளின் தொகுப்பை முதலில் பாருங்கள்; அதை வாசித்தாலே நபிகளாரின் கண்ணியம் எந்த அளவிற்குக் குலைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
முதல் செய்தி:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப் பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.
இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார்.
ஒருவர் மற்றொருவரிடம்
مَا وَجَعُ الرَّجُلِ
இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.
(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.
நூல்: புகாரி – 3268
மேற்கண்ட செய்தி நபிகளாரை எந்த அளவிற்கு இழிவுபடுத்துகின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
அதாவது ஒரு செயலைச் செய்திருக்க மாட்டார்கள்; ஆனால் அந்த செயலைச் செய்து கொண்டே இருப்பது போல அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது என இந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவர் ஒரு செயலைச் செய்யாமல் இருக்கும் நிலையில், அந்தச் செயலை, தான் செய்து கொண்டே இருப்பது போல அவர் நினைத்தால் அதற்குப் பெயர் என்ன?
ஒருவர் சாப்பிடவில்லை; அவர் முன்னிலையில் சாப்பிடுவதற்காக எதுவும் வைக்கப்படவில்லை; இந்நிலையில் வெறும் தட்டை மட்டும் எடுத்து கையில் வைத்துக் கொண்டு உணவுகளை அள்ளி அள்ளி வாயில் வைப்பது போல திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருக்கின்றார். இவரை நாம் என்ன சொல்வோம்? இவருக்கு மனநோய் முற்றிவிட்டது என்று சொல்வோமா இல்லையா?
இது போன்ற வேலையைத்தான் நபிகளார் செய்து கொண்டிருந்தார்கள் என்று அந்தச் செய்தி சொல்கின்றது.
இதை ஓர் இறைநம்பிக்கையாளன் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
இதுதான் நமது கேள்வி.
அதனால் தான் இந்தச் செய்தியை நாம் பொய் என்று சொல்கின்றோம்.
இதைத்தான் நாம் நபிகளாரை இழிவுபடுத்துவதாக பொய்யர் கூட்டம் பரப்பி வருகின்றது.
இதுமட்டுமல்ல, இது குறித்து வரும் வெவ்வேறு அறிவிப்புகளின் வாசகங்களை நாம் வாசித்தால் இதன் பாரதூரத்தை நாம் இன்னும் விரிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முதல் செய்தி :
எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டு இருந்தது
நூல்: புகாரி 3268
இரண்டாவது செய்தி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டவர்களாக ஆனார்கள்
நூல்: புகாரி 5763
மூன்றாவது செய்தி:
தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்
நூல்: புகாரி 5765
நான்காவது செய்தி:
இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது
நூல்: புகாரி 5766
ஐந்தாவது செய்தி:
அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்து விட்டதாகப் பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.
நூல்: புகாரி 6063
ஆறாவது செய்தி:
இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது
நூல்: புகாரி 6391
நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்தது
நூல்: அஹ்மத் (23211)
நபிகளாருக்கு லபீத் பின் அஹ்சம் என்ற ஒரு யூதன் வைத்த சூனியத்தின் காரணமாக 6 மாத கால அளவிற்கு அவர்கள் தான் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருக்கும் நிலையிலேயே அந்தச் செயலை, செய்து கொண்டு இருப்பது போல பிரம்மையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் தனது மனைவிமார்களிடத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளாத நிலையிலேயே தான் அவர்களுடன் உடலுறவு கொண்டு இருப்பது போல அவர்களுக்கு பிரம்மை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்ற பாரதூரமான அவதூறை அல்லாஹ்வின் தூதர் மீது சொல்வது நபிகளாரை இழிவுபடுத்துவதா? அல்லது அப்படி நடக்கவே இல்லை; இது பொய்; நபிகளாருக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்படவே இல்லை என்று சொல்வது நபிகளாரை இழிவுபடுத்துவதா என்பதை நம் மீது அவதூறு பரப்புவோர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
உதாரணத்திற்கு,
இஸ்மாயில் என்பவர் சிறந்த பேச்சளராக இருக்கும் நிலையில் நல்ல நபர் என்று அறியப்பட்ட நிலையில், தான் வேலை பார்க்கும் கடையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்றுவிட்டார் என்று குற்றச்சாட்டு சொல்லப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். நாம் அதை ஆய்வு செய்கின்றோம்; இஸ்மாயில் என்ற அந்த நபர் மீது சொல்லப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது என்பதை நாம் விளங்கிக் கொள்கின்றோம்.
இப்போது இஸ்மாயில் அவர்கள் இந்தச் செயலைச் செய்யவே இல்லை என்று நாம் சொல்கின்றோம்.
இப்போது இஸ்மாயில் அவர்களைக் கண்ணியப்படுத்துவது யார்?
இழிவுபடுத்துவது யார்? என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இஸ்மாயில் அவர்கள் இந்த திருட்டுச் செயலை செய்யவே இல்லை என்று சொல்வது அவரைக் கண்ணியப்படுத்துவது ஆகும். அதே நேரத்தில் குறிப்பிடப்பட்ட அந்தத் திருட்டுச் செயலை அவர் 6 மாத காலமாக மட்டும் தான் செய்தார் என்று சொல்வது அவரை இழிவுபடுத்துவதாக ஆகும்.
இதுபோன்றுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்வது அவர்களை இழிவுபடுத்துவதாக ஆகும். அவ்வாறு நபிகளாருக்கு நடக்கவே இல்லை; ஏனெனில் நபிக்கு எவ்வித பைத்தியமும் இல்லை; பைத்தியத்தின் சிறு தாக்கம் கூட அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளதன் அடிப்படையில் புகாரியில் வரும் இந்தச் செய்தி பொய் என்று சொல்வது தானே அவர்களை கண்ணியப்படுத்துவது ஆகும்.
இப்போது சொல்லுங்கள். தவ்ஹீத் ஜமாஅத் நபிகளாரை இழிவுபடுத்துகின்றதா? இல்லையே!
நபிகளாரை அல்லாஹ் எவ்வாறு திருக்குர்ஆனில் கண்ணியப்படுத்தியுள்ளானோ அந்த அடிப்படையில் கண்ணியப்படுத்தும் நம்மைப் பார்த்துத்தான் இவர்கள் இந்த அவதூறை அள்ளிவீசுகின்றார்கள்.
‘‘நபிகளாரை மனநோயாளி என்று நாங்கள் சொன்னோமா?’’
இது நமது எதிர்க் கொள்கையில் இருக்கக் கூடியவர்கள் நம்மைப் பார்த்து எழுப்பும் கேள்வி.
‘‘நாங்கள் நபிகளாரை மனநோயாளி என்று சொல்லவே இல்லை; நீங்கள் தான் அவ்வாறு சொல்கின்றீர்கள்’’ என்பது அவர்களது அடுத்த கேள்வி.
இது பொய்யான வாதமாகும்.
ஒருவரை மனநோயாளி என்று வெளிப்படையாகச் சொன்னால் தான் அவர் மீது அந்தக் குற்றச்சாட்டு சொல்வதாக அர்த்தம் இல்லை; மனநோயாளிக்குரிய வேலைகளை அவர் செய்வதாகச் சொன்னாலே அந்தக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்துவதாகத்தான் அர்த்தம்.
உதாரணத்திற்கு ஒருவர் மீது கீழ்க்கண்டவாறு குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது, ஒருவரது வீட்டில் நள்ளிரவில் நுழைந்து அவரது வீட்டில் உள்ள பீரோவில் 1 லட்சம் ரூபாயை எடுத்துவிட்டுச் சென்றுள்ளார் என்று சொல்லப்படுகின்றது என வைத்துக் கொள்வோம், இவரை நாம் என்ன சொல்வோம்? திருடன் திருடிவிட்டானா என நாம் கேட்போம்.
இப்போது நம்மிடம் இந்தச் செய்தியைச் சொன்ன நபர் கேள்வி எழுப்புகின்றார். நான் அவரைத் திருடன் என்று சொன்னேனா? வீட்டில் நுழைந்து யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்ததாகத் தானே சொன்னேன்; திருடியதாகச் சொல்லவில்லையே என்று சொன்னால் அதை எப்படி நாம் எடுத்துக் கொள்வோமோ அதுபோலத்தான் இதுவும்.
ஒரு மனநோயாளிக்குரிய அனைத்து அடையாளங்களும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் இருந்ததாகச் சொல்லிவிட்டு நாங்கள் நபிகளாரை மனநோயாளி என்று சொல்லவில்லை என்று சொல்வது இதுபோலத்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக, (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
திருக்குர்ஆன் 68:2-6
அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.
திருக்குர்ஆன் 7:184
‘‘நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் ‘உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை’ என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்’’ எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 34:46
‘‘சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்’’ என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.
திருக்குர்ஆன் 17:47
மேற்கண்ட வசனத்தில் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக சொல்பவர்கள் அநியாயக் காரர்கள் என அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
மேலும் நபிக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்றும் அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கின்றான்.
இந்த திருக்குர்ஆன் வசனங்களை மறுத்துவிட்டு நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர்கள் புத்தி பேதலித்தவர்களாக ஆகியிருந்தார்கள் என்றும் நாம் சொல்வோமேயானால் அதுதான் நபிகளாரை இழிவுபடுத்துவதாக ஆகும். அத்தகைய அநியாயக்காரர்களாக நாம் மாறிவிடக்கூடாது.
அல்லாஹ் பாதுகாப்பானாக!