மார்க்கச் சட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது
மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள், அம்மக்களுக்கு உரிமைப்பட்டவராக (உறவினராக) இருந்தால் தாம் சொல்வதை அவர்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைக் காண்கின்றோம். எடுத்துச் சொல்வது நம் கடமை. அதே சமயம் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அதற்காக அவர்களை நாம் நிர்பந்திக்கக் கூடாது.
இந்த வேளையில் அவர்கள் எதையேனும் நல்லறத்தை நிர்பந்திக்கப்பட்டுச் செய்வார்களே யானால் அதை இறைவனுக்காகச் செய்யாமல் உங்களது பார்வையில் நல்லவர்களாக இருக்க வேண்டும்; உங்களிடத்தில் நல்லபேர் எடுக்க வேண்டும்; நீங்கள் அவர்களைக் கண்டித்து விடக்கூடாது என்பதற்காகவே செய்கின்றனர். நீங்கள் இல்லையென்றால் அவர்கள் அந்த நல்லறத்தைச் செய்வதில்லை. அதை மூட்டை கட்டி வைத்துவிடுவதைப் பார்க்கின்றோம். எனவே நாம் அவர்களுக்கு வலியுறுத்தலாம். ஆனால் அவர்களை வற்புறுத்தக்கூடாது.
அவர்கள் நல்லறங்களை எல்லாக் காலங்களிலும் இறைவனுக்காகச் செய்கின்ற சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். நான் சொன்னால் தான் அவன் கேட்பான். என்னால் தான் அவனைத் திருத்த முடியும் என்ற நிலையையும் நாம் தவிர்க்க வேண்டும்.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.
அல்குர்ஆன் 2:256
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் நம்பிக்கை கொள்ள முடியாது. இதை விளங்காதோருக்கு வேதனையை அவன் அளிப்பான்.
அல்குர்ஆன் 10:99,100
“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது’’ என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும்.
அல்குர்ஆன் 18:29
___________________________________
ஏகத்துவம்