பிறை என்றால் என்ன?
பிறையை மட்டும் ஏன் கணக்கிடக்கூடாது
இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளும் முன் பிறை என்றால் என்னவென்று தெரிந்து கொள்வது முக்கியம். எந்த மொழியாக இருப்பினும் அதில் சந்திரன் மற்றும்பிறை என்று இரண்டு வார்த்தைகள் இருக்கும். சந்திரன் என்பது பூமியை சுற்றி வரும் ஒரு (துணை) கோள். அது வளர்வதும் இல்லை தேய்வதும் இல்லை. அல்லாஹ் விதித்த கணக்கின்படி பூமியை சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
பிறை என்றால் என்ன?
சந்திரன்:
(AKA) நிலவு என்பது ஒரு பூமியை சுற்றிவரும் கரும்பாறை. நிலவு என்பது பூமியில் இருப்பது போல் பாறைகளும்,மணலும், சிறிய மலைகளும், இறந்த எரிமலைகளும், எரிகர்க்களால் ஏற்பட்ட பள்ளங்களும் நிறைந்த ஒரு உருண்டைக்கோளம். எளிமையாக சொல்லவேண்டுமெனில் பூமியை சுற்றி வரும் உருண்டை வடிவ கரும்பாறை.
அந்தக்கரும்பாறைக்கு சுய ஒளி இல்லை. அந்தக் கரும்பாறை வளர்வதுமில்லை தேய்வதுமில்லை. படைக்கப்பட்ட நாளில் இருந்த அதே அளவில்தான் இருக்கிறது. அந்தக் கரும்பாறையில் எப்போதும் சூரிய ஒளி விழுந்து கொண்டே இருக்கிறது. நாம்அசர் வேளையின் வெயில் நின்றால் நம் உடலின் ஒரு பகுதியில் சூரிய ஒளி விழும், மறுபகுதியில் விழாது. அதே போலநிலவிலும் எப்போதும் ஒரு பாதியில் சூரிய ஒளி விழுந்துகொண்டும் மறு பாதி சூரிய ஒளி விழாமலும் இருக்கும். சூரிய ஒளிவிழுந்தாலும் விழாவிட்டாலும் பூமியை சுற்றி வந்துகொண்டிருக்கும் அந்த உருண்டை வடிவ கரும்பாறைக்குப்பெயர்தான் சந்திரன் (அ) நிலா.
பிறை (மொழியியல்):
தமிழ் பேசும் முஸ்லிம்கள் பிறை என்று தலைப்பிறையைதான் சொல்கிறார்கள். இவ்வாறு இவர்கள் இதனை அழைக்கக் காராணம் “சூமூ லிருஃயதில் ஹிலால்” என்றும் “சூமுல் ஹிலால லி ரூயதிஹி” என்றும் நமக்குக் கிடைத்த நபி மொழிகளாகும். இந்த நபி மொழிகளில் இருக்கும் அல் ஹிலால் எனும் வார்த்தையைத்தான் நாம் தலைப் பிறை என்கிறோம்.
நபி ஸல் அவர்கள் காலத்தில் ஹிலால் என்கிற வார்த்தைக்கு மாதத்தில் முதன் முதலில் சந்திரனில் இருந்து நமக்கு தெரியும் ஒளிவடிவம் என்று பொருளாகும். இதை தவிர இந்த வார்த்தைக்கு வேறு பொருள் நபி ஸல் அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.
நமது ஊரில் 60 வயதான ஒரு பாட்டியிடம் பிறை என்றால் என்னவென்று கேட்டுப்பாருங்கள். மாதத்தின் முதன் முதலில் நிலவிலிருந்து நமது கண்களுக்கு தெரியும் ஒளி என்றுதான் சொல்வார்கள்.
நபி ஸல் அவர்கள் காலத்தில் இருந்த அதே அரபு மொழி வார்த்தைகளுக்கு இன்று பல்வேறு அதிகப்படியான அர்த்தங்கள் உள்ளன. இது அரபு மொழி மட்டுமல்ல எல்லா மொழிக்கும் பொருந்தும். mouse ஐ எடுத்து வா என்று நமது குழந்தைகளிடம் சொன்னால் அவர்கள் ஓடிச் சென்று கம்பியூட்டரில் பயன்படுத்தும் மவுசை எடுத்து வருவார்கள். 50 வருடங்களுக்கு முன்னர் இருந்த குழந்தைகளிடம் சொன்னால் எலியைப் பிடித்து வருவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
இது போன்ற எண்ணற்ற உதாரணங்களை சொல்ல இயலும். ஹிஸாப் எனும் அரபு வார்த்தைக்கு அதிக பட்சமாக கொடுக்கல் வாங்கல் கணக்கு என்றுதான் அன்றைய அரபு மொழியில் பொருள். ஆனால் இன்று கணிப்பொறியில் செய்யப்படும் computation க்கும் அரபு மொழியில் ஹிஸாப் என்றே சொல்லப்படும். யவ்ம் என்ற வார்த்தைக்கு ஒரு இரவும் பகலும் சேர்ந்த அல்லது 24 மணி நேரங்களைக் கொண்ட ஒரு நாள் என்ற பொருள் நபி ஸல் காலத்தில் இல்லை. யவ்ம் என்றால் பகல் என்ற பொருளும் பொதுவாக காலம் என்று குறிப்பிடவும் யவ்ம் பயன்பட்டது. day எனும் ஆங்கில வார்த்தையும் கிபி 1600க்கு முன்பு வரை பகல் எனும் பொருள் மட்டுமே கொண்டிருந்தது. ஆங்கிலத்தில் day எனும் வார்த்தை 24 மணி நேரத்தைக் குறிகப்பயன்பட்ட சமகாலத்தில் அரபு மொழியிலும் 24 மணி நேரத்தைக் குறைக்க யவ்ம் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
நபி ஸல் சொன்ன ஹிலால் / பிறை / தலைப்பிறை என்றால் மாதத்தில் முதன் முதலில் கண்ணுக்கு தெரியும் நிலவிலிருந்து வரும் ஒளி
பிறை (கருத்தியல்):
பிறை என்பது ஒரு பொருள் அல்ல. நூறு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் வட்டி என்றால் அந்த இரண்டு ரூபாய் காசுக்கு பெயர்வட்டியல்ல. வாங்கிய காசை விடத் திருப்பி செலுத்தும்போது காசை அதிகமாகச் செலுத்தும் முறையே வட்டி. அதே போல பிறை என்பது நிலவைப் போன்ற ஒரு பொருள் அல்ல.
நிலவில் சூரிய ஒளி விழும் பகுதிக்குப் பெயர்தான் பிறை என்று பலரும் தவறாக விளங்கி வைத்துள்ளனர். அவ்வாறுஇல்லை. நிலவின் சரி பாதியில் எப்போதும் சூரிய ஒளி விழுந்துகொண்டே இருக்கிறது. வருடத்தின் 365¼ நாட்களிலும்நிலவின் பாதி சூரியனால் ஒளியூட்டப்பட்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் எப்போதும் பாதி நிலவைப் பார்ப்பதில்லை.நிலவில் சூரிய ஒளி விழும் பகுதிதான் பிறை என்பது தவறான கருத்தாகும்.
நிலவில் விழும் சூரிய ஒளி நம் கண்ணை வந்தடையும் அளவுக்குப் பெயர்தான் பிறை. பூமியை நிலவு சுற்றி வந்துகொண்டிருப்பதால் நிலவில் விழும் மொத்த ஒளியையும் நம்மால் பார்க்க இயலாது. பூமியைச் சுற்றி நிலவு எந்த நிலையில்இருக்கிறதோ அதைப் பொருத்து நிலவில் விழும் ஒளியில் ஒரு பகுதி மட்டுமே நம் கண்ணை வந்தடைகிறது. நம்கண்களை வந்தடையும் அந்த ஒளிக்குப் பெயர்தான் பிறை.
அஸ்ர் வேளை வெயிலில் ஒருவரை நிறுத்துங்கள். அவர் சூரியன் ஒளிரும் திசையை நோக்கி நிற்கட்டும். எனில் அவரின்முன்பகுதியில் சூரிய ஒளி விழும். பின் பகுதியில் சூரிய ஒளி விழாது. நீங்கள் அவரைச் சுற்றி வாருங்கள். நீங்கள் அவரின்பின்பகுதியில் இருந்து பார்க்கும்போது அவர் மீது விழும் ஒளியை உங்களால் பார்க்க இயலாது. அவரின் வலக்கைப் பக்கம்நின்று நீங்கள் பார்க்கும்போது அவர் மீது விழும் ஒளியில் பாதியை நீங்கள் பார்ப்பீர்கள். அவருக்கு முன்னால் நின்று நீங்கள் அவரைப் பார்க்கும்போது அவர் மீது விழும் மொத்த ஒளியும் உங்கள் கண்ணுக்கு தெரியும்.
இதுதான் நிலவில் நடக்கிறது. பூமியை நிலவு சுற்றி வருவதால் நிலவில் விழும் மொத்த ஒளியையும் நாம் எப்போதும்பார்ப்பதில்லை. நிலவுக்குப் பின்புறம் பூமி இருக்கும்போது நிலவில் ஒளி விழும் பகுதியை நாம் பார்க்க இயலாது இதுஅமாவாசை. நிலவும் பூமியும் சூரியனும் 90 டிகிரியில் இருக்கும்போது நிலவில் விழும் ஒளியில் பாதியை நாம் பார்ப்போம்.அது அரைப்பிறை. நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வரும்போது நிலவில் விழும் மொத்த சூரிய ஒளியையும் நாம்பார்ப்போம். அது பௌர்ணமி. நிலவு பூமியை சுற்றி இருக்கும் நிலையைப் பொருத்து அதன் மீது விழும் ஒளியின் ஒரு பகுதிமட்டும் நம் கண்ணை வந்தடையும். அவ்வாறு நம் கண்ணை வந்தடையும் அந்த ஒளிக்குப் பெயர்தான் பிறை. இந்த ஒளிதான் வளர்ந்து தேய்கிறது, சந்திரன் எனும் கரும்பாறை வளர்வதுமில்லை தேய்வதுமில்லை.
பிறை என்பது சந்திரனுக்கு மட்டுமல்ல எல்லா கோள்களுக்கும் இருக்கும் ஒரு காட்சியாகும். சந்திரனிலிருந்து பூமியை பார்த்தால் அதுவும் பிறையாகவே காட்சியளிக்கும்.
சந்திரனும் வெள்ளியும் அருகருகாமையில் இருந்து ஒரே நேரத்தில் காட்டும் பிறைகள். பெரிய பிறை சந்திரனுடையது சிறிய பிறை வெள்ளியினுடையது. பிறை என்றால் ஒரு பொருளல்ல. பிறை என்றாலே கண்ணுக்கு அளிக்கப்படும் காட்சிதான் என்பதை விளக்கவே இந்த புகைப்படங்கள். சுய ஒளி இல்லாத எல்லா கோள்களும் ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கப்படும்போது ஒவ்வொரு பிறைவடிவங்களாகவே காட்சி தருகின்றன. செவ்வாயில் இருந்து பூமியை பார்த்தால் பூமி பிறையாகவே காட்சியளிக்கும். சனியிலிருந்து வியாழனை நோக்கினால் வியாழனும் வளர்ந்து தேயும்.எப்போதும் பாதி பாகம் ஒளியூட்டப்பட்டிருக்கும் ஒரு பொருள் நீங்கள் பார்க்கும் கோணத்திற்கு ஏற்றாற்போல் காட்சியளிக்கும். கீழே இருக்கும் அனிமேஷன் இதை உங்களுக்கு அழகாக விளக்கும். (இது கணினியில் மட்டுமே முழுமையாக வேலை செய்யும். ஆண்ட்ராயிட் பயன்படுத்துபவர்கள் FlashFox – Browser ஐ பயன்படுத்தவும்).
சந்திரன் எப்பொதும் பாதி ஒளியூட்டப்பட்டுதான் இருக்கிறது. மேலே இருக்கும் சந்திரனை மவுசால் பிடித்து பூமியை சுற்றிவர செய்யலாம். மேலே வலது புறத்தில் சந்திரன் அதன் சுற்றுப்பாதையில் எந்த இடத்தில இருக்குபோது பிறை எப்படி தெரியும் என்பதை பார்க்கலாம். இதிலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். எப்போதுமே பாதி பகுதி வெளிச்சமாக இருக்கும் சந்திரன் பூமியிலிருந்து அது இருக்கும் கோணத்தை பொருத்து அதன் வெளிச்சமான பகுதி ஒவ்வொரு வடிவில் நமக்கு காட்சி தருகிறது. பூமியிலிருந்து நாம் பார்க்கும் சந்திரனின் காட்சிக்கு பெயர் தான் பிறை. பிறை என்பது சந்திரனுமல்ல பிறை என்பது ஒரு பொருளுமல்ல.
சந்திரனின் ஒளியூட்டப்பட்ட பகுதிதான் பிறை என்றால் சந்திரன் எப்போதுமே பாதி ஒளியூட்டப்பட்டே இருக்கும். எனவே இந்த புரிதல் தவறானது. பிறை என்பதே பாதி ஒளியூட்டப்பட்டிருக்கும் சந்திரன் எந்த அளவுக்கு நமது கண்களுக்கு தெரியும் என்பதுதான். பிறை என்றாலே கண்களால் பார்ப்பதுதான். எல்லா மொழிகளிலும் இதுதான் பிறையை பற்றிய வரையறை.
பிறை (விஞ்ஞானம்):
பூமியை நிலவு சுற்றுவதால்தான் வளர்பிரைகளும் தேய் பிறைகளும் தோன்றுவதை கண்டறிந்த விஞ்ஞானிகள், பூமியை நிலவு சற்றிவரும்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான கோட்டை அது கடக்கும்போதுதான் ஒரு சுற்றி முடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். அந்த வினாடி நிகழ்வை Conjuntion என்றழைத்தார்கள். இதை அறிந்த சில முஸ்லிம் அறிஞர்கள் Conjuntion நடக்கும்போது தலைப்பிறை பிறப்பதாகவும் ஆனால் அது நமது கண்களுக்கு தெரிவதற்கு பல மணி நேரம் தேவை எனும் சொல்லலானார்கள். இப்போதுதான் குழப்பம் தொடங்கியது. Conjunction நடப்பதை நாம் அறிந்துவிடுகிறோமே பின்னர் ஏன் 18 – 20 மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும் உடனே மாதத்தை துவங்கி விடலாமே என்று முஸ்லிம் அறிஞர்கள் கருத்து சொன்னார்கள். பிறைக் குழப்பம் தொடங்கியது. இந்த அடிப்படையில் சவூதி காலண்டரை அச்சடித்து வெளியிட தொடங்கியது.
அல்லாஹ் சந்திரனைக் கணக்கிட இயலும் என்கிறானே?
10:5. ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல மன்ஸில்களை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.
6:96. சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான்.
இந்த வசனங்களில் அல்லாஹ் கணக்கிட சொல்கிறானே என்று அறியாத மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அல்லாஹ் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள மன்ஸில்களை ஏற்படுத்தியிருக்கிறேன் என்கிறான், சந்திரன் என்று சொல்லவில்லை. சூரியனும் சந்திரனும் அவனின் கணக்கின் படி இயங்குகின்றன என்கிறான். பிறையை சொல்லவில்லை. சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தேன் என்கிறான் அது எப்படி காலம் காட்டுகிறது என்று மற்றொரு வசனத்தில் தெளிவாக விளக்கியும் விட்டான்.
2:189. (தலைப்) பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’‘ எனக் கூறுவீராக!
சந்திரன் எவ்வாறு காலம் காட்டும் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறான்
அதிக விளக்கங்களுக்கு வாசிக்க >> திரிக்கப்பட்ட திரிக்கிப்பட்ட குர்ஆன் வசனங்கள் piraivasi.com/2015/08/20.html
பிறையை ஏன் கணக்கிடக்கூடாது?
இதற்கான விடையை தெரிந்துகொள்ளும் முன் பிறையை கணக்கிட இயலுமா என்று அறிந்துகொள்ளவேண்டும். பிறை என்றாலே கண்ணுக்கு புலப்படும் காட்சி என்று விளங்கி இருப்பீர்கள். கண்ணுக்கு தெரியும் காட்சியை எப்படி கணக்கிட முடியும். அதிலும் ஒரு மாதத்தில் தலைப்பிறையானது உலகின் எந்த பாகத்தில் முதன் முதலில் தெரியும் என்று யாராலும் கணக்கிட இயலாது. இன்ஷா அல்லாஹ் எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக கணக்கிட்டு சொல்ல இயலாது. ஒருக்கால் ஒருவர் இங்கே தெரியும் என்று மிகத்துல்லியமாக கணக்கிட்டு கூறினாலும் அங்கு பனி மூட்டமா, மேகமோ, தூசு மண்டலமோ ஏற்பட்டால் அது பிறையை மறைத்துவிடும். இதை நாம் ஒவ்வொரு மாதமும் பார்த்து வருகிறோம். சென்ற மாதம் (ரபியுல் அவ்வல் 1437இன் பிறையை பார்க்கும் வாய்ப்பு அமெரிக்கர்களுக்கு மிக அதிகமாக இருந்தது. அமெரிக்காவில் சூரியன் மறையும் வேளையில் பிறை மிகவும் வளர்ந்து கண்ணுக்கு தெரியும் அளவில் இருந்தது. ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்த தகவல் அனைத்தும் பனிமூட்டம் காரணமாக பிறை தெரியவில்லை என்றே இருந்தது. பபிறை என்பதே கண்ணுக்கு புலப்படும் காட்சிதான். அந்த கண்ணுக்கு தெரியும் பிறையை யாராலும் கணக்கிட இயலாது. எனில் கணக்கிடுகிறோம் என்று சொல்பவர்கள் என்ன செய்கிறார்கள்.
அனைத்து கணக்கீட்டாளர்களும் கணக்கிடுவது அமாவாசையையே. அமாவாசைக்கு அடுத்த வினாடியே பிறை பிறந்துவிடுகிறது என்பது இவர்களது நம்பிக்கை. வானியல் அமாவாசை எனும் கஞ்சங்க்ஷனை கணக்கிட்டு இதுதான் பிறையின் கணக்கு என்று கூறிவருகின்றனர். புவிமைய சந்திப்பு எனும் கஞ்சங்க்ஷன் கற்பனையாக பூமியின் மையக்கருவில் இருக்கும் ஒரு நபருக்கு ஏற்படும் அமாவாசை. பூமியின் மையக்கருவில் யாரும் வசிக்க இயலாது. எரித்துவிடும் நெருப்புக் குழம்புதான் அங்கேயுள்ளது. நாமெல்லாம் பூமியின் மேற்பரப்பில் வசிக்கிறோம். மேற்பரப்பில் வசிக்கும் ஒவ்வொரு பகுதியினருக்கும் வானியல் அமாவாசை என்பது வெவ்வேறு நேரத்தில் நிகழ்வதாகும். மேலும் வானியல் அமாவாசை என்பது பிறை பிறந்ததை குறிக்காது. வானியல் அமாவாசை சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடித்ததை காட்டுவதாகும். பிறை என்பதே கண்ணால் பார்க்கும் வடிவம்தான். அதை கணக்கிட இயலாது.
தொழுகை நேரங்களை கணக்கிட தடையில்லை என்பதை தெரிந்துகொண்டோம். ஆனால் பிறையை ஏன் கணக்கிடக்கூடாதென்பதற்கு பல ஹதீஸ்கள் சான்றாக உள்ளன. பிறையை பற்றி வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பிறையை பார்த்துதான் மாதத்தை துவங்கச்சொல்கின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று “பிறையை பார்க்காமல் மாதத்தை துவங்காதீர்கள்” என்று நபி ஸல் சஹாபாக்களிடம் வாக்குறுதி பெற்றதை நம்மால் ஹதீஸ்களில் பார்க்கமுடிகிறது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் தவிர , பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாத(தலைப்பிறை)ங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஷஅபான் தலைப்பிறைக்கு வழங்குபவர்களாக இருந்தார்கள். பிறகு ரமலான் பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக கணக்கிட்டு பிறகு நோன்பு நோற்பார்கள்.
ஆயிஷா (ரலி) ; அஹ்மத் (25202)
தலைப்பிறையை கண்ணால் பார்க்கும் முன் அல்லது எண்ணிக்கையை முழுமைப்படுத்தும் வரை மாதத்தை முந்திக்கொண்டு துவங்கிவிடாதீர்கள். பின்னர் (அடுத்த) தலைப்பிறையை பார்க்கும்வரை அல்லது எண்ணிக்கையை முழுமைப்படுத்தும் வரை நோன்பு நோருங்கள்.
கணக்கிட்டு நோன்பை பிடித்து கணக்கிட்டு நோன்பை விடவேண்டுமென்றால் மறைக்கப்பட்டால் 3௦ என்ற வாசகத்திற்கு என்ன பொருள். கணக்கிடத்தான் வேண்டுமென்றால் கண்களுக்கு மறைக்கப்படுவதைபற்றி ஏன் பேசவேண்டும். இவர்கள் கொள்கைப்படி 29 நாட்கள் கொண்ட மாதத்தில் 29வது நாள் மறைக்கப்பட்ட நாள் 3௦ நாட்கள் கொண்ட மாதத்தில் 3௦வது நாள் மறைக்கப்பட்ட நாள். அதாவது எல்லா மாதமும் மறைப்பட்ட நாள் இருக்கிறது. ஆனால் நபி ஸல் கூற்றுப்படி 3௦நாள் கொண்ட மாதத்தில் மட்டும் மறைக்கப்படுகிறது என்ற பொருள் வரும். மறைக்கப்பட்டால் என்ற வார்த்தை வரும்போதே மறைக்கப்படாவிட்டால்? என்ற கேள்வியும் வருகிறது. மறைக்கப்பட்டால் 3௦ நாட்கள் மறைக்கப்படாவிட்டால் 29 நாட்கள் என்பதே நபி வழி இவர்கள் கொள்கைப்படி எல்லாமாதத்திலும் மறைக்கப்பட்ட நாள் இருக்கிறது எனில் இங்கே மறைப்பட்ட நாள் என்ற வார்த்தையே அர்த்தமற்றதாகிவிடுகிறது.
“மாதத்திற்கு 29 நாட்கள்தான்” என்று மட்டுமே வரும் ஹதீஸ்கள் ஏராளம். அதற்கு விளக்கமாக மாதத்திற்கு 29 நாட்கள், உங்களுக்கு மறைக்கப்பட்டால் மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள் (அ) கணக்கிட்டுகொள்ளுங்கள் (அ) 3௦ஆக முழுமைப்படுத்துங்கள் என்று ஹதீஸ்கள் வருகின்றன. இந்த ஹதீஸ்கள் எல்லாம் சொல்ல வருபவை ஒன்றுதான். மாதம் என்பது 29 நாட்கள் அம்மாத இறுதியில் பிறை கண்களுக்கு மறைக்கப்பட்டால் அம்மாதத்தை 3௦ ஆக முழுமைப்படுத்தவேண்டும். பார்த்தல் என்பதற்கு பதிலாக கணக்கிடுங்கள் என்று பொருள் கொண்டால் இந்த ஹதீஸ்களில் வரும் மறைக்கப்பட்டால் என்ற வார்த்தைகளுக்கு பொருள் இல்லாமலையே போய்விடும். மறைக்கப்பட்டால் என்றாலே மறைக்கப்படவிட்டால்? என்ற கேள்வி வருவது இயற்கை. எனவே பிறையை பார்த்து தான் மாதத்தை துவங்க வேண்டும் 29முடிந்தும் பிறை கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டால் அந்த மாதத்தை 3௦நாட்களாக முழுமைப்படுத்த வேண்டும் என்பதை மறைக்கப்பட்டால் எனும் வார்த்தை தெள்ளதெளிவாக பறைசாற்றுகிறது.
மேலும் இவர்கள் கூற்றுப்படி புவிமைய சந்திப்பு என்பது சந்திரன் தேய் பிறையிலிருந்து வளர்பிறையாக மாறும் ஒரு நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின்போது சந்திரன் முழுமையாக மறைக்கப்படுகிறது. பின்னர் வளர்பிறை நிலையை அடைகிறது. இந்த புவிமைய சந்திப்பு நிகழும் நேரத்தில் சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு ௦ இல்லுமிநேஷனாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் இவர்கள் பிறையை பார்க்கவேண்டும் என்று வரும் அரபி வார்த்தைகளுக்கு கணக்கிடுதல் அறிந்து கொள்ளுதல் எனும் பொருள் இருப்பதால் அவற்றையே பொருளாக கொடுகின்றனர். கீழே இருக்கும் புகைப்படங்கள் மிகச்சரியாக புவிமைய சந்திப்பு நிகழும் நேரத்தில் எடுக்கப்பட்டது. அமாவாசை, புவிமைய சந்திப்பு (அ) கஞ்சன்க்ஷன் நேரத்தில் பிறை பூமிக்கு முற்றிலுமாக மறைக்கப்படும் என்று கமிட்டி பிரசாரம் செய்யும் அந்த நேரத்தில் சரியாக எடுப்பட்ட புகைப்படங்கள்.
Theiry Legault எனும் பிரஞ்சு வானியல் புகைப்படக்காரர் இப்புகைப்படங்களை எடுத்துள்ளார். இவர்கள் மறைக்கப்பட்ட நாள் எனும் சொல்லும் அந்த நேரத்தில் கூட பிறை பூமியிலிருந்து மறைக்கப்படவில்லை என்பதற்கு இது சான்று. வருடத்தில் அதிகபட்சம் மூன்று மாதங்களில் மட்டுமே பூமியிலிருந்து பார்க்கும்போது பிறை முற்றிலுமாக மறைக்கப்பட்டிருக்கும். மற்ற மாதங்களில் தேய்பிறையிலிருந்து வளர்பிறையாக மாறும் அந்த விநாடியிலும் சந்திரன் பூமிக்கு ஒரு பிறையை காட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் வாதப்படி பார்க்க வேண்டாம் அறிந்து கொண்டால் போதும் என்று வைத்தால் கூட கீழே இருக்கும் பிறைகளை கருவிகளின் உதவியுடன் பூமியிலிருந்து பார்க்கவும் செய்யலாம் அதை விட எளிதாக அறிந்தும் கொள்ளலாம். அப்படியெனில் மறைக்கப்பட்ட நாளே இல்லை. வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே மறைக்கப்பட்டு மாதம் துவங்குமா? வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டும்தானா?
இவர்கள் மறைக்கப்பட்டால் என்ற வார்த்தைக்கு “மறைக்கப்பட்ட நாள்” என்று ஒரு விளக்கத்தை கொடுத்து அதுதான் கஞ்சன்ஷன் அன்று பிறை முற்றிலும் மறைக்கப்படும் என்பதும் பொய்யாகிறது. வருடத்தில் 3 நாட்கள் மட்டுமே சந்திரன் முற்றிலுமாக மறைக்கப்படும். மற்ற நாட்களில் சந்திரனின் பிறை இருந்து கொண்டுதான் இருக்கிறது, புவிமைய சந்திப்பு நடக்கும் அந்த வினாடியிலும் கூட ஒரு மெல்லிய பிறையை பூமிக்கு சந்திரன் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அதை பூமியிலிருந்து (கருவிகளின் உதவியுடன்) பார்க்கலாம் எளிதாக அறிந்தும் கொள்ளலாம். எனில் இவர்கள் கணக்குப்படி மறக்கப்பட்ட நாளும் இல்லை மாதத்துவக்கமும் இல்லை.
“அதை (பிறையை) பார்த்துதான் வணக்க வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்றும் அதை பார்க்கவில்லையென்றால் நீதமான இருவர் சாட்சி கூறினால் அந்த இருவரின் சாட்சியின் அடிப்படையில்தான் வணக்க வழிபாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி எடுத்தார்கள்.
அபூ தாவூத்-1991. அறிவிப்பவர் : அல்ஹாரிஸ் இப்னு ஹாதிப்(ரலி)
இந்த ஹதீஸ் சஹாபாக்களிடம் நபி ஸல் எடுத்துக்கொண்ட உறுதி மொழியை காட்டுகிறது. இங்கும் பார்த்தல் என்பதற்கு கணக்கிடுதல் என்று பொருள் கொண்டால் சாட்சிகளின் தேவை என்ன? கணக்கிடாவிட்டால் சாட்சிகளின் அடிப்பையில் வணக்கங்களை அமைத்துகொள்வதன் பொருள் என்ன? அந்த இருவர் கணக்கிற்கு பதிலாக எதை சாட்சி சொல்வார்கள்?
பிறையை பார்த்து இபாதத்துகளை செய்ய வேண்டும். அது கண்களுக்கு மறைக்கப்பட்டால் மாதத்தை 3௦ஆக ஆக்கிக்கொள்ளவேண்டும். இதுதான் ஹதீஸ்களில் இருந்து நாம் தெளிவாக விளங்கிகொள்பவை. பிறையை பார்த்துதான் இபாதத்துகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று மாநபி தோழர்களிடம் வாங்கிக்கொண்ட உறுதிமொழி. அந்த உறுதி மொழி நமக்கும் பொருந்தும். நாமும் அந்த உறுதிமொழியை கடைபிடிப்போமாக.
சுருக்கம்:
1.பிறை என்பதே கண்களுக்கு தெரியும் காட்சிதான். கண்களால் பார்ப்பதன் பெயர்தான் பிறை.
2.பிறையை கணக்கிட வேண்டும் என்பதாக விளக்கப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் அதன் இரண்டாம் பகுதியை பொய்ப்பிப்பதாக உள்ளன.
3.மறைக்கப்பட்டால் தான் மாநபி மாதத்தை 3௦ ஆக ஆக்கிக்கொள்ள கட்டளை இட்டுள்ளார்கள். இவர்களோ எல்லா மாதமும் மறைக்கப்படும் என்கிறார்கள். வருடத்திற்கு அதிகபட்சம் மூன்று மாதங்களில் மட்டுமே முழுமையாக மறைக்கபடும் என்பது அறிவியல் உண்மை.
4.பிறையை பார்த்துதான் இபாதத் செய்ய வேண்டுமென மாநபி சஹாபாக்களிடம் உறுதிமொழி எடுத்துள்ளார்கள்.